Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இளையராஜாவின் ஆகச்சிறந்த 10 பாடல்கள் எவை? பட்டியல் போடுவது ஈசியா?

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ரசிகர்களை ஆட்சி செய்து வரும் இளையராஜாவின் ஆகச்சிறந்த பாடல்களை பட்டியலிடுவது எப்படி?

இளையராஜாவின் ஆகச்சிறந்த 10 பாடல்கள் எவை? பட்டியல் போடுவது ஈசியா?

Wednesday June 02, 2021 , 4 min Read

இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ என எத்தனையோ பட்டப்பெயர்கள் இருந்தாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு இளையராஜா எப்போதுமே ராஜா தான். இப்படி அவரை ராஜா என சொல்லும் போது, அவர் இசையுடன் ஒரு நெருக்கத்தை உணர்வதோடு, ரசிகர்கள் மனதில் அவருக்கு சூட்டப்பட்டுள்ள மகுடமாகவும் அது அமைந்திருப்பதை உணரலாம்.


ஆம், அவர் என்றென்றும் ராஜா தான்...


அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ரசிகர்கள் மனதில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இளையராஜாவின் இசை ‘அன்னக்கிளி’ காலம் துவங்கி இப்போது ஸ்டிரீமிங் யுகத்திலும் ரசிகர்களைத் தாலாட்டிக்கொண்டிருக்கிறது.

இளையராஜா

சமூக ஊடகம்

இளையராஜா பிறந்த நாளை முன்னிட்டு சமூக ஊடகங்களில், அவரது பெயரில் உருவாக்கப்பட்ட பலவிதமான ஹாஷ்டேகுடன் அருவியென வெளியாகிக் கொண்டிருக்கும் கருத்துகளை பார்த்தாலே, அவரது இசை இன்றளவும் புதுமையாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.


திரை உலகமும், இசை பரப்பும் எத்தனையோ மாற்றங்களை சந்தித்துள்ள நிலையிலும், ராஜா இசை மீதான ஈர்ப்பும், பற்றுதலும் மட்டும் இன்னமும் மாறாமல் இருக்கிறது. இது என்ன மாயம்?


இந்த கேள்விக்கான பதிலை இன்னொரு கோணத்திலும் அணுகலாம். இளையராஜா பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவரது இசையில் பிடித்த பாடல்கள் பற்றிய நினைவுகளை பலரும் வெளியிட்டுள்ள நிலையில் ஒரு சிலர், ராஜா இசையில் சிறந்த பத்து பாடல்களை பட்டியலிடுமாறும் கேட்டிருந்தனர்.


ராஜா இசையில் பத்து பாடல்களை தேர்ந்தெடுக்கச் சொல்வது என்பது வன்முறை அல்லவா? என்று இந்த கேள்விக்கு பதிலாக ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

டாப் டென் பாடல்கள்

இந்த கருத்து தான் எத்தனை உண்மையானது. சிறந்தவற்றை தேர்வு செய்யும் போது டாப் டென் பட்டியல் போடுவது என்பது வழக்கமானது தான் என்றாலும், இளையராஜாவின் டாப் டென் பாடல்களை தேர்வு செய்வது எப்படி? சும்மா கண் முடி யோசித்தாலே மடைதிறந்து தாவும் நதியலை போல, பாடல்கள் துள்ளிக் குதித்து நினைவுக்கு வருமே, அவற்றில் எந்த பாடல்களை தேர்வு செய்வது?


இசை வல்லுனர்களுக்கே இது சவலானது என்றால், ராஜா இசையோடு வளர்ந்த ரசிகர்களுக்கு இது இன்னும் சவாலானது.


அவரது ஆகச்சிறந்த பாடல்களை தேர்வு செய்வது எளிதானது தான், ஆனால் அவற்றை குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் அடக்குவது எப்படி? எந்தவிதமான பாடல்களை தேர்வு செய்தாலும், இவற்றை எல்லாம் விட்டுவிட்டோமே என நினைக்கத்தோன்றும் பாடல்கள் இருக்குமே, என்ன செய்வது?

பட்டியல் சவால்

இது நிச்சயம் வெறும் எண்ணிக்கை பிரச்சனை அல்ல: ராஜா இசை உணர்வோடு ஒன்றி, இரத்ததுடன் கலந்திருப்பதால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தினால் பிடித்தமானதாக அமையும் பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ரசிகர்கள் ஒன்றுபடும் பாடல்களும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.


ஆக, ராஜா பாடல்களில் ஆகச்சிறந்த பத்து பாடல்கள் என பட்டியலிடுவது என்பது இயலாத செயல் தான்.


வேண்டுமானால் சில உத்திகளைக் கையாளலாம். முதல் உத்தியாக ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் வெளியான பத்து பாடல்கள் என பிரித்துக்கொள்ளலாம். இதன்படி, 70-களில் பத்து பாடல்கள், 80-களின் பத்து பாடல்கள், 90-களின் பத்து பாடல்கள் என தனித்தனியே பட்டியலிடலாம். இதுவும் கூட சிக்கலானது தான்.

அன்னக்கிளி காலம்

அன்னக்கிளி 1976ல் வெளியானது. அந்த ஆண்டு வெளியான பத்ரகாளி படத்தில் இரண்டு மறக்க முடியாத பாடல்கள் உள்ளன. 77, 78, 79 மற்றும் 80 என அடுத்த நான்கு ஆண்டுகளில் வெளியான படங்களில் தீபம், 16 வயதினிலே, கவிக்குயில், காயத்ரி, தியாகம், பைரவி, சிட்டுக்குருவி இளமை ஊஞ்சாலுடுகிறது, சட்டம் என் கையில் போன்ற படங்களின் பாடல்களை மனதில் கொண்டால், இவற்றை பட்டியலிடுவதே சவாலாக தோன்றும்.

ராஜா

16 வயதிலேயே படத்தில், செந்தூரப்பூவே... எனும் பாடலில் கலந்திருக்கும், ஏக்கமும், தவிப்பும், கிராமிய மண்ணும் கிரங்கடிக்கும் என்றால், கவிக்குயிலும், சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடல், தெய்வீகத்தன்மையோடு அசரடிக்கும். இளமை ஊஞ்சாலுடுகிறது படத்தின் பாடல்கள் துள்ளலுடனும், துடிப்புடனும் அமைந்திருக்கும் என்றால், காயத்ரி படத்தில் ஸ்ரீதேவி பாடும் தனிப்பாடலே காலை பனியில் மிதக்க வைக்கும்.


1970-கள் ராஜா இசைக்கான முன்னோட்டம் என்றால், 80-கள் அவர் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்ட தசாப்தம்.  90-கள் தன்னையும், தனது இசையையும் புதுப்பித்துக்கொண்டு இசை மழை பெய்த தசாப்தம். புத்தாயிரமாண்டுக்கு பிறகும் அவர் இசை வசீகரித்தது என்பது மட்டும் அல்ல, இடைப்பட்ட காலத்தில் அவர் பின்னணி இசைக்காக விஷேசமாக ரசிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருந்தார்.

பொற்காலம்

ஒரு சிலர் 1980’களை இளையராஜாவின் பொற்காலம் எனக் கருதலாம். ஆனால், இது தனிப்பட்ட ரசனை சார்ந்தது தான். திரையுலகம் வெகுவாக மாறிய நிலையில் 90-களில் அவரது இசையில் வெளிப்பட்ட புதுமைகளை பார்க்கும் போது, இதுவே அவரது பொற்காலமாக தோன்றலாம்.


ஆக, இளையராஜா இசையை பத்தாண்டு காலமாக பிரித்து பட்டியல் போடுவது கூட சவாலான செயலாகவே அமையும். இதை தவிர்க்க, ரஜினி, கமல் என நட்சத்திர பாடல்களை பட்டியல் போட முயற்சித்தாலும் அதிலும் சிக்கல் இருப்பதை உணரலாம், மோகன் அல்லது ராமராஜன் பாடல்கள் என எடுத்துக்கொண்டால் இது இன்னும் தீவிரமாவதை உணரலாம்.

Mastro Ilaiyaraja

புதுமையின் இசை

எனவே, இளையராஜாவின் புதுமையான பாடல்கள் என தரம் பிரிக்கப்பார்க்கலாம். தனது காலத்தின் தன்மையை மீறி புதுமையாக ஒலித்த பாடல்களைப் பட்டியலிடலாம். திரையில் நாயகிகளுக்கான தனிப்பாடல்களாக அவர்களின் உணர்வுகளை பிரதிபலித்த அற்புத்தமான பாடல்களில் இருந்து ஒரு பட்டியலை உருவாக்கலாம்.


இதே போல, இசைக்கருவிகள் தனியே பேசி வசீகரிக்கும் பாடல்களின் பட்டியலை உருவாக்கலாம். இசைக்கருவிகள் போலவே, பாடல்களின் நடுவே பறவை ஒலிகள் வெகு இயல்பாகக் கேட்கும் பாடல்களை பட்டியலிடலாம்.


இவ்வளவு ஏன், ரசிகர்கள் தங்கள் உணர்வுக்கு ஏற்ப பாடல்களை பட்டியலிடலாம். ஒரு சிலர் நீண்ட இசைப் பயணத்திற்கான துணையாக வரும் பாடல்களை பட்டியலிடலாம். இது நீளமாக இருப்பது தவிர்க்க இயலாதது. சிலர் சோகமாக இருக்கும் போது வருடிக்கொடுக்கும் பாடல்களை பட்டியலிடலாம். இன்னும் சிலர், நள்ளிரவின் அமைதியில் மெல்ல தாலாட்டும் பாடல்களை பட்டியலிடலாம்.


எந்த பட்டியலிலும் சிக்காமல் தனித்து நிற்கும் ஆகச்சிறந்த பாடல்கள் என்றும் ஒரு பட்டியலை உருவாக்கலாம். ஒவ்வொரு பட்டியலும், அவர் எப்போதும் ராஜா தான் என்பதை சொல்லிக்கொண்டிருக்கும்.


சரி நீங்க அடிக்கடி கேட்கும் ‘ராஜா’ பாடலின் பட்டியல் என்ன?