“பாசாங்கு இல்லாதவர்!” - விஜயகாந்த் மறைவும், பிரபலங்களின் புகழஞ்சலியும்
தேமுதிக நிறுவனத் தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் தவிர்க்க முடியாதவராக வலம் வந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை காலை மரணமடைந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
71 வயதான விஜயகாந்த் இன்று காலை (டிசம்பர் 28) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவருக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மூச்சுத்திணறல் காரணமாக அவர் காலமானார்.
விஜயகாந்த் மறைவு:
கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிகிச்சை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி, சளி மற்றும் இருமல் அதிகரித்ததால், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 23 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 11ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் விஜயகாந்த் பங்கேற்றார். இளைத்து போய் எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்த விஜயகாந்தைப் பார்த்து கட்சி தொண்டர்கள் கண்ணீர் வடித்த வீடியோக்கள் அப்போது இணையத்தில் வைரலாகின.
மரணத்திற்கு காரணம் என்ன?
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மீண்டும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் ஏரளாமானோர் வீட்டில் குவிந்துள்ளனர்.
மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல் ஆளாக சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அன்பிற்கினிய நண்பர் - முதல்வர் இரங்கல்:
தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அவருடன் திரைத்துறையிலும், நண்பராகவும் பயணித்த நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.
“தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது” என முதலமைச்சர் தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் மரணத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த். விஜயகாந்த்தின் நடிப்பு பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்; நல்ல திரைப்படக்கலைஞர்; நல்ல அரசியல் தலைவர்; நல்ல மனிதர்; நல்ல சகோதரர்; ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.
சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் தனக்கென புது பாதை வகுத்து தனி வாக்கு வங்கியை உருவாக்கியவர் என கேப்டன் விஜயகாந்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. மேலும், ஏழை எளிய மக்கள் மீது மிகுந்த கொண்டவர் என்றும், பழகுவதற்கு இனிமையானவர், பண்பாளர் என்றும் விஜயகாந்தை புகழ்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில், “நான்மாட கூடல் நகரில் வளர்ந்து தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் திரைஉலகில் உச்சத்தைத் தொட்ட உன்னத கலைஞர் அவர். ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர்.தமிழ் மொழி, இன உணர்வுடன் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் ஆதரவு வழங்கினார்.தேமுதிக கட்சியைத் தொடங்கி அதனை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக வளர்த்து எடுத்தார்.
சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டின் பொதுவாழ்விற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,தேமுதிக தொண்டர்களுக்கும், அவரை நேசிக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்தின் பேரிழப்பு தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் பேரிழப்பு என விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரைப் பிரபலங்கள் இரங்கல்:
இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது இரங்கல் செய்தியில், “எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது; விஜயகாந்த்-ன் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் தனது சோசியல் மீடியாவில், “மிகவும் அன்பான, அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவர் மறைந்தது வருத்தமளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.”
திரையில் நல்லவர், அரசியலில் வல்லவர்:
கவிஞர் வைரமுத்து தனது கவிதை மூலமாக கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில் “எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார்.
திரையில் நல்லவர் ;அரசியலில் வல்லவர் / சினிமாவிலும் அரசியலிலும் / ‘டூப்’ அறியாதவர் / கலைவாழ்வு பொதுவாழ்வு / கொடை மூன்றிலும் / பாசாங்கு இல்லாதவர்
கலைஞர், ஜெயலலிதா என / இருபெரும் ஆளுமைகள் / அரசியல் செய்த காலத்திலேயே /
அரசியலில் குதித்தவர் / எதிர்க்கட்சித் தலைவர் என்ற / உயரம் தொட்டவர் /
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவரை / நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது காலம் / வருந்துகிறேன்
கண்ணீர் விடும் குடும்பத்தார்க்கும் / கதறி அழும் கட்சித் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம்:
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. நாளை மாலை 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
40 ஆண்டுகளாக திரையுலகிலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் துறையிலும் அழியாத முத்திரை பதித்தவர். சினிமாவில் கேப்டனாக உயர்ந்த இடத்தைப் பிடித்தார். ஆனால் அரசியலில் அவரால் எதிர்பார்த்த வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் விஜய்காந்த் நீண்ட காலமாக கேப்டனாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.