சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள காடு!
சம்பத்ராவ் பவார் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு சுதந்திரப்போராட்ட தியாகியின் பெயரை வைத்துள்ளார்.
சம்பத்ராவ் பவார் தரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி, ”இங்கு நன்கு ஆழமாக தோண்டுங்கள். நான் ஏன் அப்படி செய்யச் சொல்கிறேன் என்று தெரியுமா?” என்று உடன் இருந்த மாணவர் ஒருவரிடம் கேட்டார். மாணவரிடமிருந்து பதிலில்லை. பிறகு சம்பத்ராவ் அந்த மாணவரிடம் தோளில் கையைப் போட்டவாறே, “மரக்கன்றுகள் குழியில் மிகவும் பத்திரமாக வைக்கப்படவேண்டும். குழி ஆழமாகவும் அகலமாகவும் இருக்கும்போது செடியின் நிலைத்தன்மை சிறப்பாக இருக்கும்,” என்று கூறினார்.
மஹாராஷ்டிராவில் உள்ள பலேவாடி பகுதியில் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக ஒரு காடு உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கியவர் கரும்பு விவசாயியான 77 வயது சம்பத்ராவ்.
சம்பத்ராவ் இதற்கு ’க்ராந்தி வன்’ என பெயரிட்டுள்ளார். புரட்சிகரமான காடு என்பதே இதன் பொருள். இந்தக் காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகள் ஒவ்வொருவரின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
“சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நான் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளேன். தியாகிகள் உயிர் நீத்த பிறகும் வாழ்கிறார்கள். க்ராந்தி வன் இதையே உணர்த்துகிறது,” என்று யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார் சம்பத்ராவ்.
பழங்குடியினரின் விடுதலைக்கான போராட்டத்தில் பங்களித்த பிஸ்ரா முண்டா, பெல்காவி பகுதியில் துணிந்து பிரிட்டிஷை எதிர்த்து புரட்சி செய்த பாபாசாஹேப் நர்குண்ட்கர், இந்தியாவில் காலனியாதிக்க ஆட்சி நடைபெற்ற சமயத்தில் இளம் ராணுவ வீரர்களை வழிநடத்திய புரட்சி வீரர் சந்திரசேகர் ஆசாத் போன்றோரின் பெயர்கள் மரங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கான வேர்
1992-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சம்பத்ராவ் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை கௌரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார். தரிசு நிலம் ஒன்றில் மரம் வளர்க்கும் முயற்சி கடினமானது என்பதை அவர் நன்கறிவார். சம்பத்ராவ் முதலில் கிராம மக்களின் உதவியை நாடினார். ஆனால் அவர்கள் இந்த யோசனையை கேலி செய்து உதவ மறுத்துவிட்டனர்.
“காடு உருவாக்கவேண்டும் என்கிற என்னுடைய விருப்பத்தை அருகில் வசித்தவர்களிடமும் பொதுமக்களிடமும் தெரிவித்தபோது என்னை பைத்தியக்காரன் என்றே குறிப்பிட்டனர்,” என்று நினைவுகூர்ந்தார்.
பின்னர் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சம்பத்ராவிற்கு உதவ முன்வந்தனர். “நாங்கள் நிலத்தில் ஆழமாகத் தோண்டி மரக்கன்றுகளை நட்டோம். பிறகு உரம் கலக்கப்பட்ட மண்ணைக் கொண்டு குழியை நிரப்பினோம்,” என விவரித்தார்.
இவரது முயற்சி இத்துடன் நின்றுவிடவில்லை. ஏஎஸ்சி கல்லூரி, மதுபாய் ஹார்டுவேர் கல்லூரி, ஆதர்ஷ் உயர்நிலைப்பள்ளி, பண்டிட் விஷ்ணு திகம்பர் உயர்நிலைப்பள்ளி போன்ற பலேவாடி பகுதிக்கு அருகாமையில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இவரது நோக்கத்திற்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது.
இத்தகைய உதவிகளுடன் தியாகிகளுக்கு பசுமையான காடு உருவாக்க வேண்டும் என்கிற சம்பத்ராவின் விருப்பம் ஈடேறியது. 1,475 மரங்களில் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு சுதந்திரப்போராட்ட தியாகியின் பெயரை வைத்தார். மாணவர்கள் இங்கு வந்து பார்வையிட்டு இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பும் இவர் அதற்காக இங்கு ஒரு அரங்கை கட்டியுள்ளார்.
கடினமான பயணம்
சம்பத்ராவ் மரக்கன்றுகள் நட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது எனக்கூறி 1998-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தைக் கைப்பற்றியது.
“எதிர்காலத்தில் அரசாங்கம் மரங்களைப் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கையில் தான் நான் அரசுக்கு சொந்தமான நிலத்தில் மரக்கன்றுகளை நட்டேன். எனினும் என் கணிப்பு தவறானது. ஒரே ஆண்டில் வளர்ச்சித் திட்டங்களுக்காக மரங்கள் வெட்டியெறியப்பட்டது,” என்றார் சம்பத்ராவ்.
இருப்பினும் சம்பத்ராவ் மனமுடைந்து நம்பிக்கையிழந்துவிடவில்லை. தனக்குச் சொந்தமான கருப்புத் தோட்டத்தை இந்த முயற்சிக்குப் பயன்படுத்த திட்டமிட்டார். அந்த நிலம் வாயிலாக மட்டுமே அவருக்கு வருவாய் வந்துகொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தினரும் நண்பர்களுக்கு அவரது முடிவிற்கு ஆட்சேபணை தெரிவித்தனர். எனினும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் களமிறங்கினார்.
”என் மகன் வைபவ் என்னுடன் இணைந்துகொண்டார். கரும்புத் தோட்டத்தில் நாங்கள் மரக்கன்றுகள் நட்டோம். மரக்கன்றுகள் வளர அதிக தண்ணீர் தேவைப்பட்டது. எனவே நிலத்தில் ஒரு கிணறு வெட்டினோம். இந்த பணி நடந்துகொண்டிருந்தபோது வைபவ் விபத்தில் உயிரிழந்தார்,” என்றார் சம்பத்ராவ்.
சம்பத்ராவ் உறுதியானவர். எதிர்பாராத துயரங்களை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றிகரமாக க்ராந்தி வன் உருவாக்கினார். மாணவர்கள் மற்றும் சாங்கலி மாவட்டத்தைச் சேர்ந்த சில தன்னார்வலர்களின் உதவியுடன் மீண்டும் 700 யூகலிப்டஸ் மரங்களையும் தேக்கு மரங்களையும் நட்டார்.
சம்பத்ராவ் போன்றோரைப் பார்ப்பது மிகவும் அரிது. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் நினைவாக மரங்களை நடவேண்டும் என்கிற அவரது நோக்கத்திற்காக பல இழப்புகளை சந்தித்தார். அவரது செயல்பாடுகளை பலர் எள்ளி நகையாடினர். பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டது. இருப்பினும் அனைத்தையும் எதிர்கொண்டு தனது இலக்கை நோக்கி பயணித்தார்.
”இந்தப் பணிகளை மேற்கொண்டது கடினமானதாக நான் உணரவில்லை. சொல்லப்போனால் இது என்னுடைய கடமை. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் முயற்சிகளுடன் ஒப்பிடுகையில் இது பெரிதல்ல,” என்று புன்னகையுடன் கூறுகிறார் சம்பத்ராவ்.
ஆங்கில கட்டுரையாளர் : ரோஷ்னி பாலாஜி | தமிழில் : ஸ்ரீவித்யா