10 ஆண்டுகளில் 60 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சமூக நலனில் பங்களிக்கும் தன்னார்வலர்!
பழமையான ஏரியைப் பாதுகாத்தல், நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் கற்றுக்கொடுத்தல் என பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சத்யா நடராஜன்.
நம்மில் பெரும்பாலானோர் நமது பள்ளி அல்லது கல்லூரி நாட்களில் சமூக நலனுக்காக பணியாற்றியிருப்போம். சிலர் எப்போதாவது நேரம் கிடைக்கும்போது இதுபோன்று ஈடுபடும் நிலையில் சத்யா நடராஜன் போன்ற சிலர் சமூக நலனில் தொடர்ந்து பங்களிக்கின்றனர். இவர் 60 சமூக குழுக்களுடனும் அரசு சாரா நிறுவனங்களுடனும் இணைந்து 2009-ம் ஆண்டு முதல் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னார்வலராக செயல்பட்டுள்ளார்.
புனேவைச் சேர்ந்த 43 வயது சத்யா பாஸ்டனைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். தற்போது நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வார நாட்களில் இரவு நேரத்தில் வகுப்பெடுக்கிறார். அத்துடன் உணவு விநியோகம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். வார இறுதியில் நிலம் மற்றும் தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார்.
சத்யா தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்திட்ட குழு, மரங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புனே ஏரியா சபா அசோசியேஷன் ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர் ஆவார். இவர் தன்னார்வலர்களுக்கான தேசிய விருதின் இறுதித்தேர்விற்கு தகுதி பெற்றார்.
சத்யா தனது தன்னார்வலப் பணிகள் குறித்து ’தி லாஜிக்கல் இண்டியன்’ உடன் உரையாடுகையில்,
”வாரநாட்கள் மற்றும் வார இறுதியில் தன்னார்வலராக செயல்படுவதுடன் ’டெஸ்க்டாப் வாலண்டரிங்’ முறையை ஊக்குவிக்கிறேன். இதன் மூலம் மக்கள் பயணம் செய்து செல்லும் நேரத்தை சேமித்து கூகுள் மேப் லொகேஷன் பயன்படுத்தி ஒரு மரத்தை நட்டு Grow-trees.com மூலம் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் பணியாளர்களுக்கு உதவ, நிதி உயர்த்தி வறுமையை ஒழிப்பதில் கவனம் செலுத்தும் ’ரங்க்தே’ என்கிற கூட்டுநிதி தளம் மூலம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தவாறே நிதி உயர்த்தலாம். தொழில்நுட்பத்தால் பல அற்புதங்கள் சாத்தியமே.
அதுமட்டுமின்றி சானிட்டரி பேட், மாதவிடாய் கப் போன்றவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஒரு குழுவை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.
கணக்கெடுப்பு நடத்தும் பணிகளிலும் நதிகளின் கரையோரப் பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டங்களிலும் அரசு அதிகாரிகளுக்கு சத்யா உதவியுள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் மஸ்தானி ஏரியைப் பராமரிக்க தூய்மைப் பணிகளையும் ஏற்பாடு செய்தார். வாரநாட்கள் என்பதால் மக்கள் யாரும் வரவில்லை. சத்யா தாமாகவே ஏரியை சுத்தப்படுத்தினார். நான்கு மணி நேரத்தில் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்.
தி இண்டியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் அவர் தெரிவிக்கையில்,
”நான் மஹாராஷ்டிராவின் புர்சுங்கி பகுதியில் வசிக்கிறேன். நான் பங்கேற்ற தூய்மைப் பணிகள் நகரின் மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. நான் வசித்த பகுதியில் எந்தவிதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. உலக சுற்றுச்சூழல் தினம் நெருங்கிய சமயத்தில் என்னுடைய பகுதியிலும் அத்தகைய பணிகளை மேற்கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் மஸ்தானி ஏரியில் பணியைத் துவங்கினேன். 20 ஏக்கர் நிலப்பரப்பில் பாதியளவு மட்டுமே என்னால் சுத்தப்படுத்த முடிந்தது,” என்றார்.
தன்னார்வலப் பணிகளில் ஈடுபடுவதை மிகவும் விரும்புவதாக தெரிவிக்கிறார் சத்யா. ஒருவர் இத்தகைய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு ஒருகட்டத்தில் ஊக்கமிழந்து காணப்படுவது போல் தோன்றினால் அவர்கள் சாகசம் நிறைந்த மாறுபட்ட பணியை முயற்சிக்கலாம் என்கிறார்.
“ஒருவர் சமூகத்தில் தான் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி இந்தப் பயணத்தை ரசிக்கவேண்டும். நாம் மூன்று விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும்.
முதலில் ஏதேனும் தவறு நடந்தால் குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு அவசியம்.”
இரண்டாவதாக நிலைத்தன்மையை உறுதிசெய்ய நமது வழக்கமான பகல் அல்லது இரவுப் பணியை மேற்கொள்வது அவசியம். மூன்றாவதாக நம்மை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒத்த சிந்தனையுடைய அரசு சாரா நிறுவனங்கள் அல்லது சமூக குழுக்களுடன் இணைந்து தனிநபராக நாம் வளர்ச்சியடையவும் உதவுகிறது,” என ’தி லாஜிக்கல் இண்டியன்’ தெரிவிக்கிறது.
தற்போது மஹராஷ்டிரா நகர்புற மரங்கள் பாதுகாப்புச் சட்டம், ரெட் டாட் போன்ற பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்குகிறார். இதுவரை இந்த இரண்டு பிரச்சாரங்களின் கீழ் 100 அமர்வுகள் ஏற்பாடு செய்துள்ளார். வகைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுமார் 4,000 பெண்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
கட்டுரை : THINK CHANGE INDIA