ஃபிளிப்கார்ட்டில் கைப்பைகள் விற்று மாதம் ரூ8 லட்சம் வருவாய் ஈட்டும் இல்லத்தரசியை தெரியுமா?
இணையவழி வர்த்தகத் துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி, இந்தியாவின் மூலை முக்கில் உள்ள சிற்றூரில் வாழும் பெண்களை தொழில் முனைவோர்களாக்கி வெற்றி மங்கைகளாக ஜொலிக்க வைத்துள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாய் விளங்குகிறார் ஃபிளிப்கார்ட் மூலம் வணிகத்தை விரிவுப்படுத்தி கொண்ட ரித்து கௌஷிக்.
ஆம், இவர் மாதம் 8லட்சம் ரூபாய் சம்பாதித்து ஃபிளிப்கார்டின் டாப் விற்பனையாளர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இணையவழி வர்த்தகத் துறையின் வருகை, பல தொழில்கள் துளிர்விடுவதற்கு உதவியுள்ளது என்பது யாவரும் நன்கு அறிந்ததே. ஆனால், இ-காமர்சின் வளர்ச்சி ஆங்காங்கே முடங்கிக் கிடந்த பெண்களுக்கும் விடுதலையையும், அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. ஆணாதிக்கம் ஓங்கி ஆட்சிப்புரியும், பாலியல் விகிதம் மிக மோசமாக உள்ள ஹரியானா போன்ற வடஇந்திய மாநிலத்தில், நீண்ட காலமாய் அடங்கிக்கிடந்த பெண்களுக்கு, இணையவழி வார்த்தகம், அவர்கள் மேலோங்கி எழ நல்ல களத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அண்மைக்காலங்களில் ஃபிளிப்கார்ட்டை தனக்கான தளமாக்கி வியாபாரம் மேற்கொள்ளும் பெண் விற்பனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும், 2018ம் ஆண்டில் ஃபிளிப்கார்டில் உள்ள மொத்த விற்பனையாளர்களில் 10 சதவிதத்தினர் பெண் தொழில்முனைவர்களே. ஹரியானாவின் சோனிபட் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ரித்து கௌஷிக், ஃபிளிப்கார்ட்டை சரியாக பயன்படுத்தி ஹோம் மேக்கராகயிருந்து வெற்றிகர தொழில் முனைவராக மாறியவர்.
31வயதான ரித்துவுக்கு ஹேண்ட்பேக் தயாரிப்பு மீது பேரார்வம். அதன் விளைவாய், 2016ம் ஆண்டு அவரே வடிவமைத்த ஹேண்ட்பேக்குகளை ஃபிளிப்கார்டில் ‘Ritupal Collections’ என்ற பெயரில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.
“நான் விரும்பி செய்ததையே தொழிலாக மாற்றிக் கொண்டேன்,” என்றார் ரித்து.
அவர் தொழிலை துவங்கி ஃபிளிப்கார்ட் விற்பனையாளராக மாறுவதற்கு முன், இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொண்டிருக்கும் போதிலும், மீண்டும் கல்லூரிக்குச் சென்று பட்டம்பெற வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார். 16 வயதின் தொடக்கத்திலே ரித்துவுக்கு திருமணமாகியுள்ளது. ஆனாலும், அரசு ஊழியரான ரித்துவின் கணவர், அவர் மீண்டும் படிப்பதற்கான உற்சாகத்தையும், அதற்குத் தேவையான ஊக்கத்தையும் அளித்திருக்கிறார். 2016ம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த அவர், அடுத்த பெரிய படியான தொழில்புரிய வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறார்.
“அக்கம்பக்கத்தோர், அதிகளவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்தபோது தான், ஏன் நாமும் ஹேண்ட்பேக்குகளை ஆன்லைனில் விற்பனை செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. ஆனா, என் பக்கத்து வீட்டுக்காரங்க, சொந்தகாரங்க எல்லோரும் இப்ப, நீ சம்பாதிக்கணும்னு என்ன அவசியம் இருக்கிறதுனு கேட்டாங்க. அதாவது, ‘நான்’ என்பதெல்லாம் தாண்டி ஒரு பெண் எதற்கு சம்பாதிக்கணும் என்பதே அவர்கள் முன்வைத்தது...” என்றார்.
உண்மையில், ஃபிளிப்கார்ட் எனக்கு முழுவழிகாட்டியாக இருந்து ஆதரவு அளித்தது. ஆன்லைன் வணிகதளத்தில் எப்படி ஒரு பொருளை விற்பனை செய்வது? போன்று பலவற்றை கற்றுக் கொடுத்துள்ளது. ஏன், ஃபிளிப்கார்ட் எனக்கு நிதிரீதியாக லோன் கொடுக்கவும் முன்வந்தது. ஆனால், நான் என்னுடைய சேமிப்புகளை முதலீடாக்கிக்கொண்டேன்,” என்கிறார்.
“என் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றபின், கணவரின் உதவியோடு கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுக் கொண்டேன்.”
இன்று, அவருடைய குடும்பமே ரித்துவின் பிசினசை பெருக்க உதவிசெய்கிறது. ஃபிளிப்கார்டில் வணிகத்தை தொடங்கிய ஓர் ஆண்டு முடிவில், மாதம் ஒரு லட்சரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு வளர்ந்தார். பிறகு, அவரது பிராண்ட் தயாரிப்புகள் இந்தியாவின் மூலைமுக்கில் உள்ள கடைகளுக்கும் செல்லும் வகையில் வழிவகை செய்திருக்கிறார்.
ஃபிளிப்கார்டில் வணிகத்தை தொடங்கி மூன்று ஆண்டுகள் கழிந்தநிலையில் இன்று அவர், ஹேண்ட்பேக் விற்பனையின் மூலம் மாதம் 7 முதல் 8 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார்.
ரித்துவின் ‘Ritupal Collections’ பிராண்டில் ரூ200 முதல் 1,500 வரையிலான ஹேண்ட்பேக்குகள் உள்ளன. மேலும், தென்னிந்திய மக்களே அவருடைய பிரதான கஸ்டமர்களாக உள்ளதால், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களையும் பெற்றுவிட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு உழைத்து வருகிறார்.
“என்னைப் போன்ற இல்லத்தரசிகளுக்கு எனது வருமானம் பெரிதாக தெரிந்தாலும், என்னுடைய இலக்கு மாதம் ரூ20லட்சம் வருவாய் ஈட்டவேண்டும் என்பதே. இந்தியா முழுவதுள்ள மக்கள், பிராண்ட் பெயரை கொண்டு என்னை அடையாளம் காண வேண்டும் என்பதே என் லட்சியம்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் பெமா | தமிழில்: ஜெயஸ்ரீ