இது ஏழைகளுக்கான ஷாப்பிங் மால்...!
வசதியில்லா குடும்பங்கள் ஷாப்பிங் அனுபவத்தைப் பெற்று இலவசமாக ஆடைகள் வாங்கிச் செல்ல மூன்று நண்பர்கள் சென்னையில் தொடங்கியுள்ள கடை.
என்னதான் நம் நாடு வல்லரசு ஆக வேண்டும், டிஜிட்டல் இந்தியாவாக மாற வேண்டும் என்று நாம் அதிகம் மேடை போட்டு பேசினாலும் இங்கு வாழும் பலருக்கு அடிப்படை தேவை கூட கிடைப்பதில்லை. உணவு, உடுத்த உடை, தங்கும் இடம் கிடைக்காமல் சிலர் இருக்க; மறு பக்கம் வார இறுதி கொண்டாட்டங்கள், ஷாப்பிங், சினிமா என ஒரு வாழ்க்கையை பலர் வாழ்கின்றனர்.
பண்டிகை தினங்கள் தவிர கடை வீதிக்கு சென்றோ அல்லது பெரிய ஷாப்பிங் மால் சென்றோ ஆடை வாங்க பல எளிய மக்களால் முடிவதில்லை. அப்படிப்பட்டோருக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது ’துளி’ என்னும் அமைப்பு. சென்னை அடையாரில் ’துளி’ என்னும் துணிக்கடையை நிறுவி நடத்தி வருகின்றனர் சமூக அக்கறை கொண்ட அஜித் குமார், சிவாஜி பிரபாகர் மற்றும் ஜெ பாலா ஆகிய மூன்று நண்பர்கள்.
துணிக்கடை தானே இதில் என்ன புதுமை? என நமக்கு தோன்றும், ஆனால் இது பின் தங்கிய மக்களுக்காக பிரத்தியேகமாக துவங்கப்பட்ட கடை. நம் வீட்டில் நாம் பயன்படுத்தி நமக்கு தேவை இல்லை என்கின்ற துணியை இவர்கள் பெற்று துவைத்து, நல்ல நிலைமையில் இருக்கும் துணியை இந்த கடையில் வைக்கின்றனர்.
“எங்களிடம் வரும் துணியை மூன்று வகையாக பிரிக்கிறோம். ஒன்று பயன்படுத்தக்கூடிய நல்ல நிலையில் இருக்கும் துணிகள், அடுத்து சற்று நல்ல நிலையில் இல்லா துணிகள், மூன்று பயன்படுத்த முடியாத துணிகள். இதில் நல்ல நிலைமையில் இருக்கும் துணிகளை மட்டும் கடையில் வைக்கிறோம்,”
என்கிறார் துளி செயல்பாட்டு மேலாளர் விஜய். மீதம் உள்ள துணிகளை தங்களுடன் இணைந்திருக்கும் ஆசிரமத்திற்கு அனுப்பி விடுகின்றனர். துணியை பெற்று துவைத்து, கடையில் காட்சிக்கு வைக்கும் வரை சகல செலவுகளையும் நிறுவனர்கள் பார்த்துக்கொள்கின்றனர். விற்க வைக்கப்பட்டிருக்கும் துணிகளுக்கு மிகக் குறைந்த விலையை நிர்ணயித்தாலும் வாடிக்கையாளர்கள் இதை இலவசமாகவே பெறுகின்றனர்.
“எங்கள் நோக்கம் ஏழை எளிய மக்களுக்கு ஓர் ஷாப்பிங் அனுபவத்தை தருவது தான். வாடிக்கையாளர்கள் வரும்பொழுதே ஒரு குடும்பத்தினருக்கு 1500 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை இலவசமாக தந்து விடுவோம். அதற்குள் அவர்கள் துணிகளை வாங்கிக்கொள்ளலாம்,” என்கிறார் விஜய்.
வருபவர்களின் பின்னணியை விசாரித்து, அவர்களால் இது போன்ற துணிகளை பெரும் நிதி நிலைமை இல்லை என்பதை உறுதி செய்த பிறகே இங்கே வாங்க அனுமதிக்கின்றனர். ஒரு தடவை வாங்கினால் மீண்டும் ஆறு மாதம் கழித்து தான் அந்த கடைக்கு செல்ல முடியும். மேலும் ஓர் அரசு பள்ளியுடன் இணைந்து அங்குள்ள பின் தங்கிய மாணவர்களை குடும்பத்துடன் வரவழைத்து ஷாப்பிங் அனுபவத்தை தருகின்றனர். வீட்டு வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள் ஆகியோர் குடும்பத்துடன் வந்து ஷாப்பிங் செய்து மகிழ்கின்றனர்.
“எங்களுக்கு வரும் பல துணிகள் விலை உயர்ந்த சிறந்த துணிகளாகவே இருக்கிறது. உதாரணமாக சிறந்த டிசைனர் புடவைகளும் எங்கள் கடையில் உள்ளது. சாதாரண புடவை 50 ரூபாய் என்றால், டிசைனர் புடவைக்கு 500 ரூ விலை நிர்ணயிக்கிறோம்.”
மக்கள் கையில் இருக்கும் காசோலைக்குள் எவ்வளவு வாங்க முடியோமோ அவ்வளவு வாங்கிக்கொள்ளலாம். துணிகளை தவிர்த்து, பொம்மைகள் மற்றும் அணிகலன்களும் இதனுடன் விற்கப்படுகிறது. கூடிய விரைவில் காலணிகள், பள்ளிப் பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை இத்துடன் இணைக்க உள்ளனர்.
“முதல் முறையாக இது போன்று பெரிய கடைக்குள் வரும் குழந்தைகள் பேரார்வத்துடன் தங்கள் பெற்றோருக்கு முதலில் ஆடைகள் எடுக்கின்றனர். மீதம் பணம் இருந்தால் தங்களுக்கு எடுக்கின்றனர். என் குழந்தைகள் அப்படி நடந்து கொள்வார்களா என தெரியவில்லை,” என சிரிக்கிறார் விஜய்.
தொடக்கத்தில் நேரடியாக சென்று துணிகளை பெற்றாலும் தற்பொழுது நிறைய மக்கள் தங்கள் துணிகளை இலவசமாகத் தர நினைப்பதால் பல இடங்களில் தானம் செய்யும் வசதியை நிறுவியுள்ளனர். கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் தானம் செய்யும் பெட்டியை நிறுவியுள்ளனர். அந்த இடத்தை சார்ந்த மக்கள் அங்கு இருக்கும் ஏதேனும் கடையில் சென்றுக் கொடுக்கலாம்.
மேலும் வரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் குழந்தைகள் படிப்பிற்கு உதவும் நோக்கத்தையும் கொண்டுள்ளது இந்த அமைப்பு. இது முழுக்க முழுக்க இலவசமாக தன்னார்வத்தோடு செய்யும் தொண்டாகும்.
நாமும் நமக்கு தெரிந்த வசதியில்லா மக்களுக்கு இந்த வாய்ப்பை தெரியப்படுத்துவோம்!