வெள்ளைக் காலர் பணியை துறந்து விவசாயக் களத்தில் இறங்கி விதைத்தவர்கள்...
கன்ணிமைக்கா நொடியில் ஓராண்டு ஓடிவிட்டது, இந்த ஆண்டு பல உணர்ச்சிப்பூர்வமான, சவாலான எழுச்சியூட்டும் கதைகளை யுவர்ஸ்டோரி தமிழ் பகிர்ந்துள்ளது. அதிலும் இயற்கை மற்றும் விவசாயத்தை முன்னிறுத்தி பல ஸ்டார்ட்-அப்களும், இளைஞர்களும் வளர்ந்ததையும் நாம் பார்த்தோம். அப்படி தங்களின் சம்பள வாழ்க்கையை துறந்து விவசாயம் பக்கம் திரும்பிய யுவர்ஸ்டோரி தமிழ் பகிர்ந்த சிலரின் செழுமைப் பயணத்தைப் பார்ப்போம்.
1. கோவை சூப்பர் ஹீரோஸ்
கோவையைச் சேர்ந்த விஷ்ணு வரதன் மற்றும் அவரது தோழி திவ்யா ஷெட்டி தங்களது ஐடி வேலையை விட்டுவிட்டு, விவசாயிகளுக்கு உதவும் நோக்கில், விவசாயிகள் தங்கள் இயற்கைமுறை விளைச்சல்களை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க ’இந்தியன் சூப்பர் ஹீரோஸ்’ என்னும் சமூக நிறுவனத்தைத் துவங்கினர். அதுமட்டுமின்றி சமூக அக்கறையுடன் மறுசுழற்சி செய்யும் தாளை கொண்டு பென்சில் பேனாவை தயார் செய்கின்றனர்.
இவர்களைப் பற்றி மேலும் அறிய: இந்தியன் சூப்பர் ஹீரோஸ்
2. இயற்கை அங்காடி தொடங்கிய ஐடி ஊழியர்
அருண் மோகன் சென்னையைச் சேர்ந்த ஓர் ஐடி ஊழியர்; ஆனால் 2011 ல் தனது ஐடி வாழ்க்கையை மூட்டை கட்டிவிட்டு இயற்கை அங்காடியை நிறுவி தன் தொழில்முனைவுப் பயணத்தை துவங்கிவிட்டார். 7 வருடங்கள் முன் துவங்கப்பட்ட ’விதை அங்காடி’ இன்று 3 பெரும் பல்பொருள் அங்காடியாக வளர்ந்துள்ளது.
ஆரம்பத்தில் தன்னார்வத்தால் நம்மாழ்வாரை பின்பற்றினாலும் அதன் பின் அதை ஒரு தொழிலாக மாற்றும் சிந்தனை இவருக்கு தோன்றியது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலாவது இயற்கை அங்காடி ஒன்றை நிறுவ வேண்டும் என முடிவு செய்து விவசாயிகளுக்கு நேரடியாக உதவ இயற்கை அங்காடி ஒன்றை நிறுவினார்.
இக்கதையை மேலும் படிக்க: விதை இயற்கை அங்காடி
3. அன்று நீதிபதி... இன்று விவசாயி...
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஏ.செல்வம், டி-சர்ட் அணிந்து கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். 12 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த இவரின் குடும்பம் முழுவதும் விவசாயத்தில் ஈடுப்பட்டிருன்தனர். ஏழ்மையான சூழலில் வளர்ந்து பட்டப்படிப்பை முடித்து நீதிபதியாக ஓய்வுபெற்ற ஏ.செல்வம், அரசு சார்பில் அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவைப் புறக்கணித்தார். தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றதுமே, அரசு வழங்கிய காரை திருப்பி அளித்து விட்டு, இல்லத்தைக் காலி செய்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
“நீதிபதி பதிவியில் இருந்து ஓய்வு பெற்றபின், நான் எந்தவிதமான அரசு சலுகைகளையும் அனுபவிக்கவில்லை. சுதந்திரமாக, சுத்தமான காற்றை சுவாசித்து, எனது சொந்த கிராமத்தில், மகிழ்ச்சியாக விவசாயம் செய்து வருகிறேன்...”
இவரின் எழுச்சியூட்டும் கதையை படிக்க: அன்று நீதிபதி... இன்று விவசாயி.
4. சர்க்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு - மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பெரும் பதவியில் இருந்த ஜேம்ஸ் ஜோசபின் சொந்த ஊர் கேரளா. தனது தோட்டத்தில் விளைந்த பல பழங்கள் பல பழுத்து வீணாய் போனதை கண்ட இவர் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய துவங்கினார்.
உருளைக்கிழங்குக்கு சிறந்த மாற்றாக பலாக்கள் அமையும். ஆனால், ஏன் பலாக்களில் பதார்த்தங்கள் செய்வதில்லை என்று விழித்தவர், விடையினை அறிய தாஜ் ஓட்டலின் ஒன் ஆப் தி டாப் செப் ஒருவரிடம் வினாவியுள்ளார். அதற்கு அவர், பலாப்பழத்தின் பிசுபிசுப்பு தன்மை சமைக்க சிரமத்தை அளித்தாலும், அதன் வாசனை உணவில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற பொருள்களின் நறுமணத்தையும், சுவையும் மழுங்க அடித்துவிடும் என்றும், பலா சில சீசனில் மட்டுமே கிடைக்கிறது என்று அடுக்கடுக்காக காரணங்களை முன் வைத்துள்ளார். அத்தனை பிரச்னைக்கும் ஒற்றை தீர்வை வழங்க வேண்டும் என்று தீர்மானித்து மைக்ரோசாப்ட் பணியை துறந்து, ஜாக்ப்ரூட் கொண்டு தொழில் தொடங்கி இன்று பலவகைகளில் உணவிற்கு பயன்படும் பலாக்களை தயாரிக்கிறார்.
இவரின் தொழில்முனைப்பு பயணத்தைப் பற்றி மேலும் அறிய: ஜாக்ப்ரூட் 365
5. இயற்கை விவசாயம் செய்ய அமெரிக்க பணியைத் துறந்த ஆராய்ச்சியாளர்!
அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஹரிநாத் காசிகணேசன், மருந்துகள் ஆராய்ச்சியாளர், லாபகரமான தனது பணியை விட்டுவிட்டு பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட தமிழகம் திரும்பியுள்ளார்.
அவரது அம்மாவிற்கு தீவிர மூட்டுவாதம் மற்றும் ஸ்பாண்டிலைடிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது சிகிச்சைக்கு அதிக வீரியமுள்ள மருந்துகள் வழங்கபட்டது. இதனால் அவருக்கு வயிற்றுப்பகுதியில் கட்டி உருவானது.
அதன்பின் தன்னுடைய பரிந்துரையின் பேரில் தன் அம்மா தினமும் காலை கொதிக்கவைத்து தயாரிக்கப்பட்ட முருங்கை சாறு குடிக்கத் துவங்கினார். விரைவிலேயே முழுமையாக குணமடைந்துள்ளார். இதனால் மற்றவர்களும் பயனடைவார்கள் என்பதால் பாரம்பரிய மூலிகை மருத்துவம் மற்றும் ஆர்கானிக் விவசாயம் குறித்து சிந்தித்தார். 2015-ம் ஆண்டு தனது கிராமத்திற்குச் சென்று நிலம் வாங்கி பாரம்பரிய காய்கறிகளையும் மருத்துவ குணம் நிறைந்த செடிகளையும் வளர்த்து விற்கத் துவங்கினார்.
இவரைப் பற்றி மேலும் படிக்க: டாக்டர் ஹரிநாத் காசிகணேசன்
6. நகரவாசிகளே வாங்க விவசாயம் பழகலாம்...
பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா, அக்மார்க் சென்னைப்பெண்ணாக வளர்ந்தாலும் பூர்வீகமான தேனியின் மண்மணம் அவருக்குள் இருந்தே வந்துள்ளது. படிப்பை முடித்த கையோடு தன்னுடன் படித்த ஸ்டாலின் என்பவரையே கரம் பிடித்த அர்ச்சனா, பிரபல மென்பொருள் நிறுவனமான டிசஎஸ்சில் பணியாற்றி வந்துள்ளார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு நகர அலுவலகப் பணி வேண்டாம் என முடிவு செய்த கணவன், மனைவி இருவரும் இணைந்து தொழில்முனைவர்கள் ஆனார்கள்.
வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் என இயற்கை விவசாயத்திற்கு புத்துயிர் தந்த அர்ச்சனா ஸ்டாலின், வயலுக்கே சென்று விதைப்போம் என்பதை அடிப்படையாக வைத்து ’மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’ என்ற புதிய பிரிவை தொடங்கியுள்ளார்.
இவர்களைப் பற்றி மேலும் அறிய: ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’