கொரோனா சிகிச்சை தனி வார்ட் எப்படி இருக்கும்?
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 3 நாட்கள் தங்கியிருந்து அனுபவத்தை வார்டிலிருந்தபடியே வீடியோ எடுத்து யூ டியூப் சேனலில் பகிர்ந்து பலரின் சந்தேகம், அச்சத்தைத் தணிக்க முயன்றுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாய் பரவி வருகிறது. மெல்ல இந்தியாவையும் தாக்கத் துவங்கிவிட்டது கொரோனா வைரஸ்.
கொரோனா பீதியில் உள்ள இந்திய மக்களது அச்சத்தை தணிக்கும் முயற்சியில் கேரளாவை சேர்ந்த யூடிப்பாளர், கொரானா வைரஸ் தனிமை வார்டு எப்படி இருக்கிறது? பரிசோதனை அடுத்தத்தடுத்த கட்டங்கள் என்ன? என்பன போன்றவற்றை ‘தனிமை வார்டில்’ அவர் எடுத்து பரிசோதனையில் கிடைத்த சொந்த அனுபவங்களை பாசிட்டிவ்வாக பகிர்ந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஷகீர் ஷுபன், பல நாடுகளுக்கும் பைக்கில் பயணித்து அந்த அனுபவங்களை வீடியோக்களாக ‘மல்லு டிராவலர்' எனும் அவரது யூ டியூப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மோட்டார் பைக்கில் பயணிக்கும் திட்டத்தில் ஷகீர்; கத்தார், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்றும் இரான் உள்ளிட்ட நாடுகளைக் கடந்து அஸர்பைஜானை அடைந்தார்.
“நான் ஜனவரி 28ம் தேதி ஈரானை அடைந்தேன். பிப்ரவரி 16ம் தேதி வரை அந்நாட்டில் இருந்தேன். அப்போது தான் வைரஸ் பரவுவது பற்றிய தகவல்கள் பரவலாகத் துவங்கின. எனது பயணம் முழுக்க நான் ஹெல்மெட், கையுறைகள் மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்தேன்.
இரானில் பல இடங்களுக்கு பயணம் செய்தேன். பிறகு, சூழ்நிலை மாறத் தொடங்கியது. ஈரானில் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது,” என்று தி இந்துவிடம் குறிப் பிட்டள்ளார்.
பிப்ரவரி 16 அன்று, அவர் அஸர்பைஜான் எல்லையைக் கடந்து ஜார்ஜியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால், கொரோனா வைரசின் தாக்கத்தால் அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. அயல்நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பயணத்தை பாதியிலே முடித்துக் கொண்டுள்ளார்.
கடந்த மார்ச் 5ம் தேதி, துபாய் வழியாக கண்ணூருக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார் ஷகீர். அவருக்கு மோசமான சளி அறிகுறிகள் காட்டத் தொடங்கியதை அடுத்து அவரது சொந்த ஊரில் இறங்கிய பின்னர், அவர் தனது உடல்நிலை குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
குறிப்பாக, கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தனது பயணம் குறித்துத் தகவல் தெரிவித்து, தாமாகவே முன்வந்து அவர்களுடன் கொரோனா சோதனைக்காக ஷகீர் சென்றிருக்கிறார்.
தனது அன்றாட வாழ்க்கையை வீடியோவாக ஆவணப்படுத்தும் பழக்கம் கொண்ட ஷகீர், தொற்று திகிலுக்கு மத்தியில் அவரது அனுபவங்களை பகிரத் தொடங்கினார். விமான நிலையத்திலிருந்து, மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு வரை அவரது அனுபவங்களை செல்ஃபி கேமராவில் வீடியோ எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூடியூப்பில் அப்லோடு செய்திருக்கிறார் ஷகீர்.
6 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட ‘மல்லு டிராவலர்’ எனும் அவரது யூடியூப் சேனலில் அவர் அப்லோடு செய்த முதல் வீடியோ 23 நிமிடங்கள் ஓடுகிறது.
வீடியோவில், கண்ணூர் விமான நிலையத்தில் N95 மாஸ்க்குடன் தோன்றும் ஷகீர், கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்கள் நிச்சயம் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
விமானநிலையத்தில் கொரோனா பாதிப்பு பரிசோதிக்கும் அதிகாரிகளிடம் சென்று, இரான் மற்றும் அஸர்பைஜான் சென்று திரும்புவதாக தெரிவிக்கிறார்.
‘மருத்துவமனைக்கு செல்ல அச்சப்பட்டுக் கொண்டு அதிகாரிகளிடம் பொய் சொல்ல வேண்டாம். பிறகு, வீட்டுக்கு சென்றபின் ஒரு வேளை உங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள குடும்பத்தாரும் பாதிக்கப்படுவர்,’ என்று தெரிவித்தார் ஷகீர்.
விமானநிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் புதிய மாஸ்க் மற்றும் க்ளாவுஸ் அணிந்து கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்சுக்காக காத்திருப்பதுடன் முடிவடைகிறது முதல் வீடியோ.
“எல்லோரும் என்னைக் கண்டு அஞ்சி, சற்று தொலைவிலே இருக்கிறார்கள். நான் இப்போது பிரதமருக்கு உண்டான மரியாதையுடன் நடத்தப்படுகிறேன். கண்ணூர் விமான நிலையத்திலிருக்கும் மற்ற பயணிகளை அப்புறப்படுத்திவிட்டார்கள். ஏன் சுங்கத் துறை சோதனை கூட இல்லை. என் வாழ்வில் முதல்முறையாக ஒரு விஐபி போல நடத்தப் படுகிறேன்...” என்று பேசிக்கொண்டே நடக்கும் ஷகீர், விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸில் ஏறுகிறார் அவரது இரண்டாவது வீடியோவில்.
ஆம்புலன்சில் ஏறும் ஷகீரிடம், ‘தைரியமாக இருங்கள். பயப்பட வேண்டாம். விரைவில் வீடு திரும்பி விடுவீர்கள்’ என்று மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறுகிறார். அதற்கு ஷகீரோ, ‘எனக்கு எந்த பயமும் இல்லை. தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இரு வாரங்கள் தங்கி பரிசோதித்துக் கொள்வதில் எந்த கஷ்டமுமில்லை. ஏனெனில், ஒருவேளை வைரஸ் தாக்கப்பட்டிருக்குமேயனால், என் மூலம் வேறு யாருக்கும் பரவாமல் இருப்பதை நான் உறுதி செய்வேன்,’ என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து, ஆம்புலன்சில் உள்ள மருத்துவ வசதிகளை காண்பிக்கிறார். மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்குச் செல்வதை காண்பித்த அவர், வார்டில் எவரும் இல்லாததையும், ஒரே ஒரு நர்ஸ் மட்டும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து பேசிய ஷகீர்,
“இரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு செல்வார். அதன் ரிசல்ட் வருவதற்கு 3 தினங்களாகும். அதுவரை நான் இங்கு தான் இருக்கவேண்டும். சாதாரண காய்ச்சல் வந்தாலே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லையா? அதேபோல், இதை எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்கிறார்.
தவிர, அரசு மருத்துவனைகள் என்றாலே அசுத்தமாக இருக்கும் என்கிற மனோபாவம் பொதுவாக மக்கள் மத்தியில் நிலவிவருகிறது. உண்மையில், வார்டு அறைகளும், கழிப்பறைகளும் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் இருக்கின்றன என்று குறிப்பிட்டார். மேலும், மருத்துவமனையில் உள்ள மருத்துவச் சாதனங்களையும் காண்பிக்கும் ஷகீர்,
''என்னைப் பரிசோதிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை, வேறு யாரையும் பரிசோதிக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது. எனக்கு பயன்படுத்தப்பட்ட தெர்மோமீட்டர் வேறொருவருக்கு பயன்படுத்தபட மாட்டாது. நாம் நினைக்கிறதைவிட அரசு முன்னெச்சரிக்கையாக செயல்படுகிறது,” என்றும் கூறுகிறார்.
தனிமைப்படுத்த வார்டில் முதல் நாள் அனுபவத்தை பகிர்ந்த அவர், வார்டில் என்ன நடக்கிறது? என்ற என் அனுபவத்தின் தொடர்ச்சியை நாளை மற்றொரு வீடியோவில் காணலாம் என்று கூறி முடித்தார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 2வது நாளாக பரிசோதனை மேற்கொண்டு வரும் ஷகீர், அவரது அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து 3வது வீடியோவை அப்லோடினார். அதில்,
“நிறைய மக்கள் ஏன் மருத்துவமனையிலிருந்து வீடியோ எடுக்கிறேன் என்று நினைக்கலாம். யூடியூப்பிலிருந்து வருமானம் பெறுவதற்காக இந்த வீடியோக்களை பதிவு செய்யவில்லை. கொரோனா வைரசின் பாதிப்பு என்ன? தனிமைப்படுத்தப்பட்ட அறை எவ்வாறு செயல்படுகிறது? என்பதை காட்டி, மக்களுக்கு தைரியத்தை கொடுப்பதற்காக மட்டுமே இங்கு வீடியோவை எடுத்து பதிவு செய்துள்ளேன். இது கொரோனாவை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக மட்டும் எடுக்கப்பட்ட வீடியோ,”
என்றும் கூறும் ஷகீர், வீடியோக்களில் வைரஸ் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பின் தயங்காமல் பரிசோதித்து கொள்ளுங்கள் என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
மூன்று நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் எடுத்து கொண்ட சிகிச்சை குறித்து பதிவு செய்த ஷகீருக்கு 3 நாள் பரிசோதனையின் முடிவில் ரிசல்ட் ‘நெகட்டிவ்’-வாக அமைந்ததை அடுத்து வீடு திரும்பினார்.
வீடியோவில் அத்தனை பாசிட்டிவ் வார்த்தைகளை பகிர்ந்த ஷகீரின் கொரோனா வைரஸ் குறித்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் 1 மில்லியன் மக்களால் பார்வையிடப்பட்டு நெட்டிசன்களின் பாராட்டை பெற்று வருகிறார் ஷகீர்.