கொரோனா வைரஸ்: இணையத்தில் நீங்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக பல பொய் தகவல்கள் உலா வருகின்றன. இணையத்தில் நாடும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை.
சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தி உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் ஒரு சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், இந்தியர்கள் மத்தியிலும் கொரோனா தொடர்பான கவலை அதிகரித்துள்ளது.
இந்த பின்னணியில், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை அறிவதிலும், அதன் பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்து கொள்வதிலும் பொதுமக்களுக்கு இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, இணையத்தை நாடுவதும் இயல்பானது என்றாலும், கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை இணையத்தில் அணுகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொரோனா தொடர்பான பொய்த்தகவல்களும், தவறான தகவல்களும் அதிகம் உலா வரும் நிலையில், இணையத்தில் கொரோனா தொடர்பாக நீங்கள் தேடக்கூடாது 10 விஷயங்கள் பட்டியலிட்டுள்ளது:
- முகமுடி அணிவது நல்லது தான். ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க என்று தனியே விஷேசமான முகமுடி எதுவும் இல்லை. எனவே, இத்தகைய விஷேச முகமுடிகளை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் தளங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
- N95 வகை முகமுடி மற்ற வகை முகமுடிகளை விட சிறந்தது என சொல்லப்படுவதில் அர்த்தம் இல்லை. முகமுடி மட்டுமே வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காக்க போதுமானதல்ல என்று மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, குறிப்பிட்ட எந்த வகை முகமுடி குறித்தும் தேட வேண்டாம்.
- கொரோனா வைரஸுக்கு எந்த அதிகாரப்பூர்வ சிகிச்சையும் இதுவரை இல்லை. எனவே, வைரசை குணமாக்குவதாகச் சொல்லும் எந்த மருந்து அல்லது எண்ணெய் போன்றவற்றை நம்ப வேண்டாம். இவற்றை ஆன்லைனில் நாட வேண்டாம்.
- கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அறிமுகம் இல்லாத இணையதளங்களில் தேட வேண்டாம். அதிகாரப்பூர்வமான தளங்கள் மற்றும் மருத்துவ அமைப்பு தளங்கள் தரும் தகவல்களை மட்டுமே நாடவும்.
- கொரோனா வைரஸை கண்டறிய எந்த அதிகாரப்பூர்வ பரிசோதனைக் கருவிகளும் இல்லை. இவற்றை விற்பனை செய்வதாகச் சொல்லும் தளங்களை நம்ப வேண்டாம்.
- கொரோனா வைரஸ் தொடர்பான வாட்ஸ் அப் அல்லது டிக் டாக் வீடியோக்களை நம்ப வேண்டாம்.
- கொரோனா வைரஸ் தொடர்பாக யூடியூப் பிரபலங்கள் அல்லது செல்வாக்காளர்கள் தகவல்களை நம்ப வேண்டாம்.
- கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ அறிகுறிகளை ஆன்லைனில் தேட வேண்டாம். சந்தேகம் ஏதேனும் இருந்தால் உங்கள் மருத்துவரை நாடவும்.
- அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல்கள் , கட்டுரைகள் அல்லது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்.
- கொரோனா வைரஸ் தொடர்பான இ-மெயில் மோசடிகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புடன் இருக்கவும்.