'ஐஏஎஸ், ஐபிஎஸ் தொழிற்சாலை' - 51 அதிகாரிகளை உருவாக்கிய 75 வீடுகளே கொண்ட கிராமம்!
வெறும் 75 வீடுகளை கொண்ட கிராமத்திலிருந்து 51 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஐஏஎஸ் மட்டுமின்றி இஸ்ரோ தொடங்கி, நாட்டின் முக்கிய அரசுத்துறைகள் அனைத்திலும் பணிபுரிந்து நாட்டிற்கே முன்னாடியாக விளங்கும் இந்த கிராமம் எங்கு உள்ளது?
நாட்டின் உயர்ந்த பதவிகளாக கருதப்படும் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளாகுவதற்கான யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அதனை அடைவது அத்தனை எளிதல்ல. பலமுறை தேர்வு எழுதி முயற்சிக்கவேண்டும். அதிக போட்டித்தன்மை கொண்ட தேர்வில் தேர்ச்சி பெறுவது ஒரு வலிமையான சவாலாகும். இதற்கு பல வருட அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவை.
இருப்பினும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதோபட்டி என்ற கிராமம் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக உள்ளது. ஏனெனில், இதுவரை சிற்றுாரிலிருந்து 51 ஐபிஎஸ், பிசிஎஸ் அதிகாரிகள் உருவாகியுள்ளனர். இதை எண்ணி மட்டும் வாவ் சொல்லி முடித்துவிட முடியாது. வாவ் சொல்வதற்கான நிறைய விஷயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது மதோபட்டி கிராமம்.
ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் வெறும் 75 வீடுகள் மட்டுமே உள்ளன. அதிலும், 75 குடும்பங்களிலிருந்து 51 ஐபிஎஸ் மற்றும் பிசிஎஸ் (மாகாண சிவில் சர்வீஸ்) அதிகாரிகள் மட்டும் உருவாகவில்லை. விண்வெளி, அணு ஆராய்ச்சி, வங்கி, இந்திய வெளியுறவுத் துறை, இந்திய வருவாய் துறை உட்பட பல உயர்தரப் பணிகளிலும் பணிபுரிகின்றனர்.
இன்னும் பெரிய வாவ் என்னவெனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வினய் குமார் சிங், சத்ரபால் சிங், அஜய் குமார் சிங் மற்றும் சஷிகாந்த் சிங் ஆகிய நான்கு சகோதரர்களும் ஐஏஎஸ் பதவியில் வகிக்கின்றனர். ஆனால், கிராமத்தில் எந்த பயிற்சி மையங்களும் இல்லை!. பொதுவாக சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளை இலக்காகக் கொண்டவர்கள் செய்யும் முதல்படி, புகழ்பெற்ற பயிற்சி மையங்களில் இணைவது.
இந்த கிராமத்தின் சாதனைக்கான காரணத்தை கண்டறிய கடந்த காலத்தை நோக்கினால், சுதந்திரப் போராட்ட வீரர் தாக்கூர் பகவதி தின் சிங்கும் அவரது மனைவி ஷியாம்ரதி சிங் இருவரும் கிராமத்தில் 1917ம் ஆண்டுகளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில், ஷியாம்ரதி பெண்களின் கல்வியில் கவனம் செலுத்திய நிலையில் பின்னாளில் ஆண்கள், சிறுவர்களும் கல்வி கற்கத் தொடங்கினர். கல்விக்கான முக்கியத்துவம் அக்காலக்கட்டத்தில் கிராம மக்கள் உணர்ந்ததன் விளைவே கிராமத்தின் இன்றைய நிலை.
கிராமத்திலிருந்து முதல் ஐஏஎஸ் அதிகாரியாக, கவிஞர் வாமிக் ஜான்புரியின் தந்தை கான் பகதூர் சையத் முகமது முஸ்தபா, பிரிட்டிஷ் காலத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு, 1952ம் ஆண்டில், இந்து பிரகாஷ் என்பவர் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து 1955ம் ஆண்டில் வினய் குமார் சிங் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றது கிராமத்திற்கு புது திருப்பத்தை அளித்தது. ஏனெனில், அவர் தடம் பற்றி அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவராக சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறத் தொடங்கினர்.
1955ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற வினய் குமார் சிங், பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். அவரது சகோதரர்களான சத்ரபால் சிங் மற்றும் அஜய் குமார் சிங் ஆகிய இருவரும் 1964ம் ஆண்டு தேர்வில் வெற்றிப் பெற்றனர். அவர்களில், சத்ரபால் சிங் தமிழகத்தின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். கடைசி சகோதரரான சஷிகாந்த் சிங்கும் 1968ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார். இந்த சாதனை சகோதரர்கள் நால்வருடன் நின்றுவிடவில்லை. 2002ம் ஆண்டு சஷிகாந்த் சிங்கின் மகன் யஷஸ்வி சிங் சிவில் சர்வீஸ் தேர்வில் 31வது ரேங்க் பெற்று இச்சாதனையை நீட்டித்தார். ஒரே குடும்பத்திலிருந்து படையெடுத்த ஐஏஎஸ் அதிகாரிகளால், மதோபட்டி கிராமம் வெளிச்சத்துக்கு வந்தது.
கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலும் பணிபுரிந்து வெற்றிகரமான வாழ்க்கையைக் கொண்டுள்ளனர்.
கிராமத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், உள்ளூரில் திருவிழா நாட்களின் போது முழு கிராம சாலைகளையும் சிவப்பு மற்றும் நீல விளக்குகள் கொண்ட கார்கள் அலங்கரித்துவிடுமாம்!
பல ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட கல்வியின் முக்கியத்துவம், பின்னாளில் கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைமுறையுனுள் கலந்து, அவர்களது வாழ்க்கையே பிரகாசமாக மாறியுள்ளது.
ஒரே குடும்பத்தில் 2 ஐஏஎஸ், 2 ஐபிஎஸ் - சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சகோதர-சகோதரிகள்!