டயர்-2 நகரமான கோவையில் மையம் அமைத்து வெற்றிகரமாக இயங்கும் வருங்கால யூனிகார்ன் ‘Draup’
இரண்டாம் நிலை நகரமான கோயமுத்தூரில் இருக்கும் திறமைசாலிகளை மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவதற்கு முன்பே அங்கீகரித்து வாய்ப்பளித்துள்ளது Draup ஸ்டார்ட் அப்!
முதல் நிலை நகரங்களிலும் உலகளவில் பிரபலமான முக்கியப் பகுதிகளிலும் செயல்படவேண்டும். இந்த நோக்கத்தை முன்னிறுத்தியே பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் விரைவில் யூனிகார்ன் ஆக உருவெடுக்க இருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படும்.
இதுபோன்ற நகரங்களில் திறன்மிக்க ஊழியர்கள் அதிகம் கிடைப்பார்கள் என்பதே இந்நிறுவனங்களின் நம்பிக்கையாக இருக்கும். எனவே பெரிய நகரப் பகுதிகளில் செயல்படவே விரும்புவார்கள்.
ஆனால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த SaaS தளம் Draup மாறுபட்டது. நிறுவனங்கள் சிறப்பாக தீர்மானங்கள் எடுக்க உதவும் இந்த ஸ்டார்ட் அப், நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தனித்துவமான திறன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்த ஸ்டார்ட் அப் 2018-ம் ஆண்டு கோயமுத்தூரில் ஒரு மையத்தை அமைத்தது. இந்த இரண்டாம் நிலை நகரில் காணப்பட்ட திறன்களை மற்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவதற்கு முன்பே முதன் முதலாக அங்கீகரித்து வாய்ப்பளித்துள்ளது.
கோவை முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு பிரபலமான பகுதி. மிகச்சிறந்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. இங்குள்ள பல்கலைக்கழகங்கள் தமிழகத்திலேயே அதிகளவிலான பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது. இருப்பினும் உலகளவில் செயல்படும் வெகு சில நிறுவனங்களே இங்குள்ள திறன்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன.
Draup இந்த இடைவெளியை விரைவிலேயே புரிந்துகொண்டது. இங்கு அமைந்துள்ள வலுவான தொழில்முனைவுச் சூழலை முறையாகப் பயன்படுத்திக்கொண்டது.
“உள்ளூர் ஊழியர்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாகவே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். அவர்கள் தங்கள் வளர்ச்சிக்கு உள்ளூர் திறன்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம். இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள திறமைசாலிகளைக் கண்டு நாங்கள் வியப்படைவதுண்டு. தனிச்சிறப்புடன் பங்களிக்கும் இவர்களது திறன்மீது நாங்கள் நம்பிக்கை வைத்தோம். இதை செயல்படுத்த வாய்ப்பு கிடைத்தபோது நாங்கள் சற்றும் தயங்கவில்லை,” என்கிறார் Draup சிஇஓ விஜய் சுவாமிநாதன்.
அவர் மேலும் கூறும்போது,
“இளம் திறமைசாலிகள் கிடைத்தது மையத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. தரமான இவர்களது செயல்பாடுகள் முதல் நிலை நகரங்களில் இருப்பவர்களுக்கு இணையாகவோ அல்லது சில நேரங்களில் அதைக் காட்டிலும் சிறப்பாகவோ இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இதுவே கோவை மையத்தின் வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது,” என்கிறார்.
கண்ணோட்டத்தை மாற்றியது
நவீன தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற ஏராளமானோரின் திறமைகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதுபோன்ற திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிப்பது முதல் பணியிடங்களில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பது வரை எத்தனையோ தவறான கற்பிதங்களை Draup தகர்த்தெறிந்து புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனம், ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதில் முழு கவனம் செலுத்துகிறது. அவர்களது அறிவுத்திறனை மேம்படுத்துகிறது. அவர்களை முறையாக வழிநடத்துகிறது. அவர்களது ஒட்டுமொத்த திறன் மேம்பட உதவுகிறது. இவை அனைத்தையும் உறுதிசெய்வதன் மூலம் கோயமுத்தூரில் மிகச்சிறந்த பணியிட கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.
“எங்கள் ஊழியர்களுக்கு எங்களால் அதிவேகமாக கூடுதல் திறன்களில் பயிற்சியளிக்கமுடிகிறது. இதனால் எங்கள் வளர்ச்சி துரிதமாகியுள்ளது. குழு தலைவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக உலகளவில் உள்ள வாடிக்கையாளர்களைக் கையாள்கிறார்கள். இது மையத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது,” என்கிறார் விஜய்.
கோயமுத்தூரில் 15 பேர் அடங்கிய குழுவாகத் தொடங்கப்பட்ட Draup தற்போது 200 ஊழியர்கள் கொண்ட வலுவான குழுவாக செயல்பட்டு வருகிறது.
பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு தொலைதூரப் பகுதிகளில் இருப்பவர்களை பணியமர்த்துவது, ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து பணிபுரியாமல் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பணிபுரிவது போன்ற நடைமுறைகளைப் பெரும்பாலான நிறுவனங்கள் தேர்வு செய்து வருகின்றன.
இந்நிலையில், Draup இடம்பெயர்ந்து வந்த ஊழியர்கள் மீண்டும் ஊர் திரும்ப உதவியதுடன் நாடு முழுவதும் உள்ள முதல் நிலை நகரங்களைச் சேர்ந்த திறன்மிக்கவர்களை பணியமர்த்தியும் இருக்கிறது.
“பெருந்தொற்று சமயத்திலும் நாங்கள் கோயமுத்தூரில் அதிகளவில் ஊழியர்களை பணியமர்த்தியிருக்கிறோம். எங்கள் ஊழியர்கள் தொடர்ந்து திறம்பட செயல்படுவதற்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் எங்கள் இரண்டாம் நிலை மையத்தின் மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் உள்ள வாடிக்கையாளர்களைக் கையாள்வதிலும் உலகத் தரம் வாய்ந்த சேவையை வழங்குவதிலும் இந்த மையம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது,” என்கிறார் Draup இணை நிறுவனர் மற்றும் சிசிஓ வம்சி திருக்கலா.
நகரில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களுடம் நெருக்கமாக இணைந்து செயல்படும் கோயமுத்தூர் மையம் மாணவர்களுக்கு இண்டெர்ன்ஷிப் வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த SaaS ஸ்டார்ட் அப் இதற்கு முன்பு 300க்கும் மேற்பட்ட இன்டர்ன்களுடன் பணியாற்றியது குறித்து மையத்தின் தலைவர் விஷ்ணு குறிப்பிடும்போது,
“Draup முக்கிய செயல்பாடுகள் அனைத்திலும் பணியாற்ற இன்டர்ன்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. சில இன்டர்ன்கள் எங்கள் நிறுவனர்களுடனும் வாடிக்கையாளர்களுடனும் நேரடியாகத் தொடர்பில் இருந்து பணியாற்றியுள்ளார்கள். இளம் சிந்தனையாளர்களை ஈடுபடுத்தும் வகையில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு துறை ரீதியான அனுபவமும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் கார்ப்பரேட் வாழ்க்கை குறித்த அனுபவமும் கிடைக்கும் வகையில் இன்டர்ஷிப் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
கோயமுத்தூரில் Draup போன்று வெகு சில நிறுவனங்கள் மட்டுமே சுயமாக செயல்படுவதற்கான அதிகாரம் வழங்கி தொடர் கற்றலையும் புத்தாக்க சிந்தனைகளையும் ஊக்குவிக்கின்றன.
இந்நிலையில், சரியான திறன்களைக் கண்டறிந்து அவர்களது செயல்திறனை அன்றாடம் மேம்படுத்துவது இந்நிறுவனத்திற்கு எளிதான செயலாகவே இருந்துள்ளது.
“நான் முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் சமயத்தில் கட்டமைப்பு வசதிகளையும் டூல்களையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. Draup என்னை மேம்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிறுவனம் அதன் ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதிலும் அவர்களின் திறனை மேம்படுத்துவதிலும் முழு அக்கறை காட்டுகிறது,” என்கிறார் Draup நிறுவனத்தின் புள்ளியியல் துறை நிபுணர் சங்கவி லோகநாதன்.
சாதாரண சோதனை முயற்சி முதல் அசாதாரண திறன் வரை…
Draup கோயமுத்தூர் மையம் அசாதாரண திறன்மிக்கவர்களால் நிறைந்துள்ளது. இதனால் இந்த ஸ்டார்ட் அப் விற்பனைக்கு முந்தைய நிலை மற்றும் மார்க்கெட்டிங், ஆர்ஓஐ, இயந்திரக் கற்றல் ஆராய்ச்சி, புள்ளியியல் மற்றும் கணிதம் என முக்கிய செயல்பாடுகளைக் கையாள பிரத்யேக குழுக்களை நியமித்துள்ளது.
“இந்தக் குழுக்கள் அனைத்துமே சோதனைக் கட்டமாகத் தொடங்கப்பட்டது,” என்கிறார் வம்சி.
ஃப்ரெஷ் திறமைகளைக் கண்டறிந்து வாய்ப்பளிப்பதே இந்த குழுக்கள் அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம். இன்று இந்தக் குழுக்கள் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பிரெயின்டெஸ்க் குழு கோவை மையத்தின் மிகப்பெரிய குழுவாகும். இந்தக் குழு Draup நிறுவனத்தின் வலுவான ஆலோசனை பிரிவாக செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு இக்குழுவே துறைசார் அறிக்கைகளை வழங்குகிறது. விற்பனை அறிக்கைகளில் 80-90 சதவீதம் இக்குழுவே உருவாக்குகிறது. Draup நிறுவனத்தின் பல ஃபார்சூன் 500 வாடிக்கையாளர்களுடன் இக்குழுவே நேரடித் தொடர்பில் இருக்கிறது.
இயந்திரக் கற்றல் ஆராய்ச்சிக் குழு நவீன மாடல்களை உருவாக்கி சரிபார்க்கிறது. பெங்களூருவில் உள்ள டேட்டா சயின்ஸ் குழுவுடன் நெருக்கமாக பணியாற்றுகிறது. கணித குழு அனைத்து பிராடக்டுகளின் செயல்முறைகளுக்கும் புள்ளியியல் மாடல்களை உருவாக்குகிறது.
“ஒவ்வொரு நாளும் புதிய பிரச்சனைகளையும் குறிக்கோளையும் கையாளும் இந்தச் சூழலில் பங்களிப்பது உற்சாகமளிக்கிறது,” என்கிறார் சங்கவி.
ஆர்ஓஐ குழு படிநிலை (hierarchical) மாதிரிகளை உருவாக்குகிறது. டிஜிட்டல் ரீதியான இணைப்புகளைக் கண்டறியவும் பாரம்பரிய வணிக மாதிரிகளில் இவை ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிடவும் இந்த மாதிரி உதவுகிறது.
Draup கோயமுத்தூர் மையத்தில் விற்பனைக்கு முந்தைய செயல்முறை மற்றும் மார்க்கெட்டிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது Draup வாடிக்கையாளர்கள் தொகுப்பை அதிகரிக்கச் செய்வதிலும் தக்கவைப்பதிலும் முழு கவனம் செலுத்துகிறது.
“விற்பனை தொடர்பான பிரச்சாரங்கள், பயிற்சி பட்டறைகள், மாநாடுகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதில் இந்தக் குழு முக்கிய பங்கு வகிக்கிறது,” என்கிறார் விஷ்ணு.
நிறுவனத்தின் மதிப்புகள்
ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நட்புடன் பணியாற்றும் கலாச்சாரத்தை முன்னிறுத்தியே Draup செயல்பட்டு வருகிறது. வெவ்வேறு குழுக்கள் ஒரே மையத்தில் செயல்பட்டாலும்கூட இந்த கலாச்சாரம் தொடர்கிறது.
“நேர்மறையான சிந்தனைகள் நிறைந்த Draup பணிச்சூழல் எனக்கு உற்சாகமளிக்கிறது. நெருங்கிய உறவுகளிடையே இருக்கும் உணர்வு கிடைக்கிறது,” என்கிறார் மகாலட்சுமி, சீனியர் ரிசர்ச் எக்ஸிக்யூடிவ் II.
Draup ஊழியர்கள் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை அலுவலகத்தில் கொண்டாடும் விதத்தைப் பார்க்கும்போது அவர்களிடையே இருக்கும் உறவின் மதிப்பை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
விளையாட்டு அறைகள், கஃபே போன்ற வசதிகள் சிறு இடைவெளிக்குப் பின்னர் புத்துணர்ச்சியுடன் பணியைத் தொடர உதவுகிறது.
நேரடித் தகவல் தொடர்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் பிராடக்ட் டெவலப்மெண்ட் தொடர்பான புதுமையான சிந்தனைகளை அனைத்து நிலையில் இருக்கும் ஊழியர்களும் பகிர்ந்துகொள்ள முடிகிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம்
Draup பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறது. Draup கோயமுத்தூர் மையத்தில் பெண்கள் பல உயர் பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர். இவர்களது புதுமையான செயல்பாடுகள் மூத்த நிர்வாகிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
“அர்ப்பணிப்புடன்கூடிய இவர்களது பணி பாராட்டிற்குரியது. பெண் ஊழியர்கள் எங்கள் மையத்தில் பல புதுமைகளைப் புகுத்தியுள்ளனர்,” என்கிறார் வம்சி.
மகாலட்சுமி ரிசர்ச் எக்சிக்யூடிவ் பதவியில் இருந்து இரண்டரை ஆண்டுகளிலேயே சீனியர் ரிசர்ச் எக்சிக்யூடிவ் II நிலைக்கு உயர்ந்துள்ளார். இவர் தற்போது கோயமுத்தூரில் 25 உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு தலைமை வகிக்கிறார்.
“Draup வணிக செயல்பாடுகள் முழுமையாக வெளிப்படைத்தன்மை நிறைந்தவை. ஊழியர்கள் எந்த பதவியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அனைவரும் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைவரும் கேள்வியெழுப்பி தெரிந்துகொள்ளலாம். ஊழியர்களின் கருத்துக்களை நிர்வாகம் கேட்டறிகிறது,” என்று மகாலட்சுமி குறிப்பிட்டார்.
தலைமைப் பொறுப்பு வரை முன்னேறும் வகையில் Draup அதன் ஊழியர்களின் திறனை மேம்படுத்துகிறது. ஊழியர்களின் வளர்ச்சிக்கு நிர்வாகம் உறுதுணையாக இருக்கிறது.
“என்னுடைய திறனில் நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த உயரதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய தலைமைப்பண்பை மேம்படுத்திக்கொள்ள Draup எனக்கு வாய்ப்பளித்துள்ளது,” என்கிறார் பிரியதர்ஷினி ஜே, சீனியர் ரிசர்ச் எக்சிக்யூடிவ்.
வருங்காலத் திட்டம்
Draup அதன் கோயமுத்தூர் மையத்தில் தற்போதுள்ள குழுவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை இருமடங்காக்கி 400 ஊழியர்களைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
“நாங்கள் வளர்ச்சியடையும் அதேசமயம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவை வழங்குவதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் ஏற்பாடு செய்யும் பயிற்சிகளும் அமர்வுகளும் புதுமையான தீர்வுகளை எட்ட உதவுகிறது,” என்கிறார் மணிகண்டன் பார்த்தசாரதி, அசோசியேட் டைரக்டர் – கஸ்டமர் சக்சஸ்.
இவர்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, வேலைவாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ள: Draup