2 பில்லியன் டவுன்லோட்களை கடந்தது TikTok ஆப்!
டிக்டாக் செயலி இரண்டு காலாண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்திற்குள் 500 மில்லியன் பதிவிறக்கங்களை பெற்றுள்ளது.
டிக்டாக் செயலி கடந்த ஆறு மாதங்களில் 1.5 முதல் 2 பில்லியன் அதாவது சுமார் 200 கோடி பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறுகிய வீடியோக்களை உருவாக்க உதவும் செயலியான டிக்டாக், கொரோனா லாக்டவுன் சமயத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. iOS மற்றும் ஆண்ட்ராய்டில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசெஞ்சர் ஆகியவற்றையெல்லாம் கடந்து டிக்டாக் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாகும்.
2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் எந்த செயலியிலும் இல்லாத அளவிற்கு ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளேஸ்டோரில் டிக்டாக் 315 மில்லியனுக்கும் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் டவர் தெரிவிக்கிறது. 201ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் டிக்டாக் செயலியின் பதிவிறக்கம் 199.4 மில்லியனாக பதிவாகியுள்ளது.
“ஏற்கெனவே மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி உலகளவில் பரவி வரும் கோவிட்-19 தொற்று காரணமாக மேலும் பிரபலமாகியுள்ளது. நுகர்வோர் இதுவரை இல்லாத அளவு புதுமையான வகைகளில் ஷாப்பிங் செய்யவும், பணிபுரியவும், மற்றவர்களுடன் இணைந்திருக்கவும் மொபைல் சாதனத்தையே சார்ந்துள்ளனர்,” என்று சென்சார் டவர் அதன் ஆய்வில் விவரித்துள்ளது.
இந்தியாவில் டிக்டாக் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 611 மில்லியன் வாழ்நாள் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட இந்தச் செயலியின் ஒட்டுமொத்த பதிவிறக்கங்களில் மூன்றில் ஒரு பகுதியாகும். டிக்டாக் பதிவிறக்கங்களில் பெரும்பாலானவை ஆண்ட்ராயிடில் செய்யப்படுவதையும் iOS வெறும் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே பங்களிப்பதையும் இது உணர்த்துகிறது.
டிக்டாக் செயலி இதுவரை சீனாவில் 196.6 மில்லியனும் அமெரிக்காவில் 165 மில்லியனும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் சீனாவும், அமெரிக்காவும் டிக்டாக்கின் அடுத்த மிகப்பெரிய சந்தையாக இருக்கும். பதிவிறக்கம் செய்வது மட்டுமின்றி டிக்டாக் செயலிக்காக நுகர்வோர் செலவிடுவதும் அதிகரித்துள்ளது.
இந்தச் செயலிக்கான வாழ்நாள் பயனர் செலவீனம் 456.7 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் இது இரண்டரை மடங்கு அதிகம். டிக்டாக் செயலிக்கான பயனர் செலவீனத்தைப் பொறுத்தவரை சீனா முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் யூகே-வும் உள்ளது. தற்போது டிக்டாக்கின் பெரும்பாலான வருவாய் iOS பயனர்கள் மூலமாகக் கிடைக்கிறது.
இந்தியாவில் பயனர்கள் அதிகளவில் இருப்பினும் டிக்டாக்கால் இதுவரை அதிக வருவாய் ஈட்ட முடியவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மாறி வரும் சூழலில் இந்த நிலையும் மாற வாய்ப்புள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான லாக்டவுன் முறை நீட்டிக்கப்படும் பட்சத்தில் இந்தச் செயலி மேலும் சிறப்பிக்க வாய்ப்புண்டு.
“2020-ம் ஆண்டிற்கு முன்பிருந்தே டிக்டாக் செயலி சிறப்பாகவே செயல்பட்டு வரும் நிலையில் இந்தச் செயலி இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் முதல் காலாண்டில் உலகளவில் நோய்தொற்று ஏற்பட்டுள்ள சூழலில் இந்தச் செயலியின் பதிவிறக்கம் அதிகரித்துள்ளது. பயனர் இந்தச் செயலியில் அதிகம் இணைந்திருக்கின்றனர். வருவாயும் அதிகரித்துள்ளது,” என்று சென்சார் டவர் குறிப்பிட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: சோஹினி | தமிழில்: ஸ்ரீவித்யா