டிக்டாக் செயலி மூலம் புகழும், பணமும் சம்பாதிக்கும் பெண்கள்!
சீன நிறுவனத்துக்குச் சொந்தமான TikTok செயலி மூலம் 15 நொடி வீடியோக்களை உருவாக்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தி பல பெண்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.
பாலிவுட்டில் நட்சத்திரம் ஆக ஆசைப்பட்ட ஷாருக் கான், பட வாய்ப்புகளைத் தேடி மும்பைக்கு வந்த போது தங்குவதற்குக் கூட இடம் இல்லாமல் தடுமாறி நடைபாதைகளில் படுத்துத் தூங்கியிருக்கிறார். அதன் பிறகு அவர் வாய்ப்புகளை பெற்று நட்சத்திரமானார். அதே நேரத்தில் வேறு சில நட்சத்திரக் குழந்தைகள், இயக்குனர் கரன் ஜோஹர் மூலம் எளிதாக திரை வாய்ப்பை பெற்றனர்.
ஆனால் நட்சத்திரமாகும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. இந்த நிலையை இப்போது சமூக ஊடகங்கள் மாற்றி இருக்கின்றன.
இன்று பிரபலமாக, 15 நொடி வீடியோவும், ஸ்மார்ட்போனும் இருந்தால் போதுமானது. ஒரு டிக்டாக் வீடியோ தயாரிக்க இவை மட்டும் தான் தேவை. இதற்கு முன்னர் மியூசிகலி என அறியப்பட்ட இந்த செயலி, திரைப்பட பாடல்களுக்கு வாய்சையத்து, நடனமாடும் வீடியோக்களை உருவாக்க உதவியதன் மூலம் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானது.
இந்தியாவில் உள்ளடக்கம் உருவாக்கப்பட்டு, பகிரப்படும் விதத்தை டிக்டாக் மாற்றி அமைத்திருக்கிறது. டிக்டாக் இந்தியாவின் விற்பனை மற்றும் பங்குதாரர் இயக்குனர் சச்சின் சர்மா, யுவர் ஸ்டோரியுடனான பிரத்யேக நேர்காணலில்,
”மற்ற இணையதளங்கள் போல அல்லாமல், 15 நொடி வீடியோ வடிவம் புதுமையை கட்டாயமாக்குகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொடியையும் பொருட்படுத்த வைப்பதே இந்த சேவையின் சிறப்பு என்று கூறியிருந்தார்.
இந்த 15 நொடி புகழை தான் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் திறமையாக பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் வீடுகளில் இருந்தபடி, தங்களுக்கு நெருக்கமான விஷயங்களை செல்போனில் பகிர்வதன் மூலம் இவர்கள் தங்கள் திறமையையும், படைப்பூக்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
டிக்டாக் மூலம் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை பெற்றுள்ள பெண்கள் பற்றி பார்க்கலாம்:
பொழுதுபோக்குமயம்
Nagma Mirajkar: மும்பையைச் சேர்ந்த நக்மா மிராஜ்கர், நடனம் மற்றும் நகைச்சுவை வீடியோக்களை உருவாக்குகிறார். அவருக்கு 10.2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
“பொழுதுபோக்கு அளிக்கவே இதில் இருக்கிறேன்,” என்கிறார் அவர்.
இவர் வணிகவியல் மற்றும் வர்த்தக நிர்வாகம் மார்க்கெட்டிங்கில் முதுகலை பட்டம் பெற்றதோடு, வர்த்தக நிர்வாகத்தில் முதுகலை பட்டயப் படிப்பும் முடித்துள்ளார். எனினும், அவருக்கு பேஷன் மற்றும் அழகுக் கலையில் தனி ஆர்வம் உண்டு. இந்த ஆர்வத்தை வலைப்பதிவு மூலம் வெளிப்படுத்தி வந்தார்.
அவர் தனது பேஷன் ஆர்வத்தை டிக்டாக்கிற்கு எடுத்துச்சென்று பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளார். கோல்கேட் உள்ளிட்ட முன்னணி பிராண்ட்கள் தங்கள் நுகர்வோரை சென்றடைய அவரது உள்ளட்டக்கத்தை நாடுகின்றன.
Garima Chaurasia: மற்றொரு டிக்டாக் நட்சத்திரமாகிய கரிமா சவுராஷியா 15.7 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்றுள்ளார். மாடலழகியான அவர், நடன வீடியோக்கள், காமெடி கிளிப்களுக்காக அறியப்படுகிறார். இவர் தனது தோழியுடன் இணைந்து உருவாக்கிய மச்சாயெங்கே பாடல் வைரலாகி அவரை மேலும் பிரபலமாக்கியுள்ளது.
குடும்ப உறவு
Moni Kundu: மோனி குண்டு 2.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் பெற்றுள்ளார். மன அழுத்தம் போக்கும் உள்ளடக்கத்தை அவர் உருவாக்கி வருகிறார். தனது கணவர் மற்றும் மகனுடன் இணைந்தும் வீடியோக்களை உருவாக்குகிறார். இந்த குடும்ப வீடியோக்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
ஆக, வீடியோக்களை எடுக்க நல்ல இடம் தேட வேண்டும் என்றல்லாம் இல்லை. உற்சாகமான கதை இருந்தால் குடும்பத்துடன் கலக்கலாம்.
வழிகாட்டிகள்
Vani Choudhary: வாணி சவுத்ரி 223.3 ஆயிரம் ரசிகர்களைப் பெற்றுள்ளார். அழகுக் கலை தொடர்பான அவரது வழிகாட்டி வீடியோக்கள் மிக பிரபலம். 15 நொடிகளில் அவர் அழகுக் குறிப்புகளை வழங்குகிறார்.
பல பெண்கள் உணவுக்கலையையும் ரசிகர்களைச் சென்றடையப் பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் செல்வாக்காளர்களுக்குப் பிறகு, டிக்டாக் நட்சத்திரங்கள் சமூக ஊடக புகழ் மூலம் தொழில்வாழ்க்கை மற்றும் பணத்தை பெற்று வருகின்றனர்.
தன்வி தூபே | தமிழில்: சைபர்சிம்மன்