2-ம் இன்னிங்ஸிலும் உயரலாம்! - ‘கரியர் பிரேக்’ எடுத்த பின் சாதித்த இரு பெண்கள்!
ஏழு முதல் 10 ஆண்டுகள் வரையிலான கரியர் பிரேக்கிற்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்து டாப் கியரில் உச்சத்தை எட்டியுள்ள இரு பெண்கள், 2-வது இன்னிங்ஸுக்கு தயாராகும் ஹோம்மேக்கர்களுக்காக தங்கள் அனுபவங்களைப் பகிர்கின்றனர்.
மகப்பேறு விடுப்பு, குழந்தைகள் பராமரிப்பு, குடும்ப உறுப்பினர்களை பராமரித்தல் உள்ளிட்ட பொறுப்புகளுக்காக பெண்கள் தாங்கள் பணியாற்றும் வேலையை ராஜினாமா செய்ய நேரிடுகிறது.
அரசு நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு சில விடுப்புகள் உள்ளன. ஆனால், தனியார் நிறுவனங்களில் பெரும்பாலும் அப்படியான வசதிகள் இல்லை, இதனால் பணியை விட்டு விலகும் பெண்கள் சில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பணியில் சேர விரும்பினாலும், சந்தையில் வேலை தேடி அலையும் பலருடன் போட்டிபோட்டு வெல்வது என்பது நிச்சயமாக கடினமானது.
இந்தத் தடைகளைத் தாண்டி 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பணி இடைவெளிக்குப் பின்னர் கூட தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பு வரை உயர்ந்து சாதித்துள்ளனர் ரேவதி ராமசாமி மற்றும் பிரியா பார்த்தசாரதி.
“சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலான பணி இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நேர்காணலில் பங்கேற்ற போது இரண்டாவது இன்னிங்ஸுக்கான வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஒருவித பயத்துடனே நேர்காணலுக்கு வந்தோம். தற்காலிக பணி, திறமையை நிரூபிப்பதற்கான அவகாசத்தோடு சவால் நிறைந்த பணிகளைக் கொடுத்து எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பைத் தந்தது Bounteous x Accolite,” என்கின்றனர் மீண்டும் பணியில் சேர்ந்து தகவல் பாதுகாப்புப் பிரிவில், இணை இயக்குனராக இருக்கும் பிரியா பார்த்தசாரதி மற்றும் திறமையானவர்களை பணியில் அமர்த்தும் நிபுணராகி இருக்கும் ரேவதி ராமசாமி.
7 ஆண்டு பணி இடைவெளி
ஆரோக்கியமான குடும்பச் சூழல், திறமையான மகன், பொருளாதார நெருக்கடி என்று எந்த கட்டாயமும் இல்லாதவர் ரேவதி ராமசாமி. எனினும், தன்னுடைய திறன் வீணாகக் கூடாது என்பதற்காகவே மீண்டும் பணிக்குத் திரும்பி இருக்கிறார்.
“நான் என்னுடைய பணியைத் தொடங்கியது மிகவும் எளிமையாக நடந்தது. பணி இடைவெளிக்கு முன்னர் சென்னையில் ஒரு நம்பகமான நிறுவனத்தில் சுமார் 9 ஆண்டுகள் பணியாற்றினேன். கடைசியாக Technical lead பொறுப்பில் இருந்தபோது என்னுடைய குடும்பத்தில் இருந்த மூத்த உறுப்பினர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் என்னால் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.”
வேலையை ராஜினாமா செய்த பின்னர் முதல் ஓராண்டு சிறப்பாக இருந்தது. அதிலும் குழந்தை வளர்ப்பு என்கிற அந்த காலகட்டத்தில் என்னுடைய தாய்மையை மகிழ்ச்சியோடு கழிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
7 ஆண்டுகள் ஹோம் மேக்கராக சென்றது. வீட்டு வேலை, குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பது என ஒரே பாதையில் சுழன்று கொண்டிருந்தேன். அதன் பின்னர், மீண்டும் பணிக்குத் திரும்பலாம் என்கிற எண்ணம் எழுந்தது.
”முதலில் நான் கண்ட மாற்றம் இப்போது இருக்கும் சுயவிவர அப்டேட்டே வேறு விதமாக இருந்தது. எனக்குப் பொருத்தமான பணியை தீவிரமாகத் தேட ஆரம்பித்தேன். 7 ஆண்டு இடைவெளி என்பது அதிகமாகத்தான் இருந்தது. நான் பணிக்குத் திரும்பியபோது எல்லாமே மாறி இருந்தது.” என்று விவரிக்கிறார் ரேவதி.
நேர்மறை அணுகுமுறை
முகநூல் பெண்கள் குழு மூலம் Bounteous-ன் Beyond Your Break (B2B) திட்டம் பற்றி தெரிந்து கொண்டு அந்த நிறுவனத்திற்கு பணி விண்ணப்பம் செய்தேன். அங்கு Technical Recruiter பணியிடத்திற்கான தேவை இருந்தது. அந்தப் பணிக்கு technical தெரிந்தவர்கள் தேவைப்பட்டார்கள். எனக்கு தொழில்நுட்பம் பற்றிய அனுபவம் இருந்ததால் ஒரு முறை முயற்சிக்கலாம் என்று நேர்காணலுக்குச் சென்றேன்.
நேர்காணல் குழுவில் இருந்தவர்கள் பணி இடைவெளிக்குப் பின்னர் வருவதை உணர்ந்து நான் தோய்ந்து போகாமல் என்னிடம் என்ன திறமை, அனுபவம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் நேர்மறையாகவே கையாண்டனர். பணி இடைவெளி என்பதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அதற்கான காரணத்தை புரிந்து கொண்டனர்.
"அந்த நேர்காணலில் தேர்வாகி 6 மாதத்திற்கான தற்காலிக பணியாளராக நான் 2022ல் பணியில் சேர்ந்தேன். ஆனால், என்னுடைய பணியைப் பார்த்துவிட்டு 4 மாதங்களிலேயே என்னை நிரந்தர ஊழியராக்கியது நிர்வாகம்,” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ரேவதி.
அடுத்தடுத்த வளர்ச்சி
“Customer Relationship Management, Healthcare, Consumer and Dining என பல்வேறு நிறுவனங்களுக்கு Technical தெரிந்தவர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தும் வேலையை செய்யத் தொடங்கினேன். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை எல்லோருக்கும் சமமாக தந்தது Bounteous நிறுவனம். பிரேக்கில் இருந்து வந்தவர் என்று கருதாமல் முன்னாள் சிஇஓ உள்பட ஜாம்பவான்கள் இருந்த ஆராய்ச்சி குழுவில் நானும் ஒரு நபராக செயல்பட்டேன்.
இத்தகைய வாய்ப்புகள் பணி இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்பவர்களுக்கு கொடுக்கப்படாது. ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் போது நான் சிறப்பாக செயல்படுவதைப் பார்த்து எனக்கு மேலும் மேலும் சவாலான பொறுப்புகளும் தரப்பட்டன. தயக்கத்துடனே மீண்டும் பணியில் சேர்ந்த எனக்கு இந்த அனுபவங்கள் நல்ல கற்றலைத் தந்தது.
ஓராண்டு இந்நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக இப்போது Technical recruitment மட்டுமின்றி Beyond Your Break என்கிற ஒரு புதிய திட்டத்தில் செயல்படத் தொடங்கினேன். இது என்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒரு திட்டம். என்னைப் போலவே வெவ்வேறு காரணங்களுக்காக பணி இடைவெளியில் இருந்துவிட்டு மீண்டும் பணியில் சேர விரும்புபவர்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும் ஒரு பணியைத் தான் இந்தத் திட்டம் செய்கிறது, என்று மனநிறைவோடு சொல்கிறார் ரேவதி ராமசாமி.
பணிக்குத் திரும்பும்போது என்ன செய்ய வேண்டும்?
“நான் முதலில் பணியாற்றிபோது தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் என்னுடைய வளர்ச்சியானது அபரிமிதமாகத் தான் இருந்தது. குழந்தையை பராமரித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதால் வேறு வழியின்றி கனத்த இதயத்துடனே பணியை ராஜினாமா செய்தேன். பல நேரங்களில் மீண்டும் பணிக்குச் சேர வேண்டும் என்கிற சிந்தனை இருந்து கொண்டே இருந்தது."
ஒரு குறிப்பிட்ட வேலை என்று தேடவில்லையே தவிர, பணி தொடர்பான என்னுடைய தேடல் இருந்து கொண்டே இருந்தது. என்னுடைய மகன் தானாக அனைத்தையும் செய்யக்கூடிய ஒரு நிலைக்கு வந்த பின்னர், மீண்டும் பணியில் சேர இது தான் சரியான நேரம் என்று முடிவெடுத்த போது நிச்சயமாக சந்தையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி அப்டேட்டில் நான் இல்லை.
"நான் எந்த வேலை தேடும் தளத்திலும் உறுப்பினராக இல்லை. சமூக ஊடகங்களின் பரிச்சயம் இல்லை. எல்லாமே மறைந்து முழுக்க முழுக்க ஒரு ஹோம்மேக்கராக இருந்துவிட்டேன். 7 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பும்போது சற்று தயக்கமாகத் தான் இருந்தது,” என்கிறார்.
ஐடி துறையில் பணியாற்றும் என்னுடைய நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டேன், என்னிடம் இருந்த நேரத்தை செலவிட்டு குடும்பத்தினரை சம்மதிக்க வைத்தேன். என் கணவரும் Technical அனுபவம் மிக்கவர் என்பதால் அவரிடம் இருந்து கருத்துகளைப் பெற்றேன். மீண்டும் படிக்கத் தொடங்கினேன். என்னுடைய சுயவிவரத்தில் இருந்தவற்றை நினைவுபடுத்திப் பார்ப்பதே ஒரு பெரிய சவாலாக இருந்தது.
பணி இடைவெளி என்று பார்த்தாலே நிறுவனங்கள் அவர்களை ஒதுக்கிவிடுவர். பல நிறுவனங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளான இடைவெளியில் மீண்டும் பணியில் சேரும் திட்டங்களை வைத்துள்ளனர்.
ஆனால், 7 ஆண்டு இடைவெளிக்குப் பின்னரான வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. ஏனெனில், புதிதாக வேலை தேடி வருபவர்கள் அப்டேட்டடாக இருக்கும்போது இவர்களுக்கு ஏன் வாய்ப்பு தர வேண்டும் என்கிற கேள்வி நிறுவனங்கள் மத்தியில் இருக்கிறது. அதனை முறியடிப்பது எளிமையான விஷயம் அல்ல.
”அதிர்ஷ்டவசமாக எனக்கு bounteous-ல் வாய்ப்பு கிடைத்தது. தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தது, செய்யக்கூடிய ஒன்றாக இல்லை என்றாலும் அதிக நேரம் செலவிட்டு நிறைய படிக்கத் தொடங்கினேன். பணிக்கு ஏற்ப என்னை மீண்டும் தயார்படுத்திக் கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது, ஆனால், சாதிக்க வேண்டும் என்கிற அந்த நோக்கத்தில் உறுதியாகத் தொடர்ந்து செயல்பட்டால் எந்தச் சவாலையும் சமாளித்து உயர்நிலையை அடையலாம். ஒரு நாள் இல்லாவிட்டாலும் இன்னொரு நாள் நிச்சயமாக இலக்கை எட்டிவிடலாம்,” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ரேவதி.
பணத்தை விட சுய திருப்தி முக்கியம்
“திருக்கோவிலூர் என்கிற சிறிய ஊரில் பிறந்து வளர்ந்தேன். சிறு வயது முதலே படிப்பில் டாப்பர், கல்லூரியில் இளநிலை படித்து முடித்தவுடன் கேம்பஸிலேயே பணியுடன் உயர்படிப்பை தொடரும் வாய்ப்பை பெற்றேன். இப்படி அதிக திறன் படைத்தவராக இயங்கிவிட்டு வெறும் வீட்டு வேலை என்று மட்டுமே முடங்கிப் போவது எனக்கு திருப்தியை தராதது போல உணர்ந்தேன்.
பணியில் ஒரு சவாலை எதிர்கொண்டு, அதை நிறைவேற்றி முடிக்கும் போது கிடைக்கின்ற பெருமை எனக்கு மட்டுமல்ல எனக்கு பக்கபலமாக இருக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்கிறது. தினந்தோறும் அன்றாட வீட்டுப் பணிகள், குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பது என்று ஒரே மாதிரி இயங்கினாலும், நம்முடைய திறனை பணியில் வெளிப்படுத்தி சவாலை எதிர்கொள்ளும் போது கிடைக்கும் வெற்றி வேறு எதிலுமே கிடைக்காது. பணத்தைவிட நமக்கான சுயதிருப்தி என்கின்ற ஒன்றை அப்போது தான் நான் உணர்ந்தேன், என்று சொல்கிறார் ரேவதி.
10 ஆண்டு பணி இடைவெளி
ரேவதியின் வாழ்க்கைக் கதையில் மாறுபவட்டவர் பிரியா பார்த்தசாரதி. தானாக விருப்பப்பட்டு பணியை விட்டு விலகியவர் பிரியா. குழந்தை வளர்ப்புக்குப் பின் 1 வருடத்தில் மீண்டும் பணியில் சேர்ந்து விடலாம் என்று எண்ணி இருந்தார். ஆனால் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
“நான் மதுரையில் பிறந்து வளர்ந்தேன். 2002-ல் பொறியியல் படிப்பை முடித்த உடன் பணியாற்றுவதற்காக சென்னைக்கு வந்தேன். 2002 முதல் 2009 வரை, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் software testing-ல் தொடங்கி Desk Manager என்கிற உயர் பதவி வரை பணியாற்றினேன். என்னுடைய குழந்தையை நானே வளர்க்க வேண்டும் என்று நானே தான் பணியை விட்டு விலகினேன்,” என்கிறார்.
இரண்டரை ஆண்டிலேயே அடுத்த குழந்தையும் பிறந்துவிட்டது. அதைத் தொடர்ந்து பணி நிமித்தமாக என்னுடைய கணவர் அமெரிக்கா சென்றார். அதனால் அவருடன் பயணிக்க வேண்டி இருந்தது. இந்தியா திரும்பிய பின்னர் குடும்பத்தில் மூத்தவர்களை பராமரிக்க வேண்டிய சூழல் இருந்தது என்று அடுத்தடுத்த காரணங்களால் சுமார் 10 ஆண்டு பணி இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
வாழ்வின் அங்கம் கற்றல்
நான் எலக்ட்ரானிக்ஸ் மாணவியாக இருந்தாலும் ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் மென்பொருள், டெஸ்டிங் தொடர்பானவற்றை படித்து கற்றுக்கொண்டேன். தொடக்கத்தில் இருந்தே என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியிலும், பணி ரீதியிலான வளர்ச்சியிலும் கற்றல் என்பது ஒரு அங்கமாக இருந்து கொண்டே இருந்தது. புதிதாக எதையாவது கற்றுக்கொண்டு தான் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய வாழ்க்கை பயணத்தில் நடந்திருக்கிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பணியைத் தேடி வந்தபோது வாய்ப்புகள் இல்லை என்பதால் certification course படிக்கச் சென்றுவிட்டேன். அதன் பின்னர், bounteous-ல் Salesforce தொடர்பானவற்றை படித்து நேர்காணலுக்கு சென்று தேர்வு செய்யப்பட்டால் பணியில் சேரலாம் என்கிற ஒரு தகவல் எனக்கு கிடைத்தது. நானும் அவற்றைப் படித்து நேர்காணலுக்கு சென்றேன், அதில் தேர்வாகி 2 மாத தற்காலிக ஊழியராக பணியில் சேர்ந்தேன்.
சுயவிவரத்தை மட்டும் வைத்து ஒரு விண்ணப்பதாரரை அணுகாமல் அந்த நபர் என்ன கற்றுக்கொண்டிருக்கிறார், அவருக்கான முதிர்ச்சி எந்த அளவில் இருக்கிறது, அவரின் அனுபவம் மற்றும் திறன் என்ன போன்றவற்றை கருத்தில் கொண்டே நேர்காணல் நடத்தப்பட்டது.
எந்த நிறுவனமுமே பிரேக்கிற்கு பிறகு வரும் பெண்களிடம் நேரத்தை செலவிட்டு எந்தத் துறையில் அவர்கள் திறமையானவர்கள் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ற சவால்களைத் தருவதில்லை. அந்த வகையில் bounteous தற்காலிகப் பணி என்று பணியைப் பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் கொடுத்து அதில் நமக்கு இருக்கும் திறமையை வைத்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நம்மால் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.
நம்பிக்கையின்றி பணியில் சேர்ந்த நான் ஒரு மாதத்திலேயே பணி நிரந்தரம் பெற்றேன். புதிதாக உருவாக்கப்பட்ட information security-ல் அசோசியேட் இயக்குனர் என்கிற பொறுப்பிற்கு என்னை தேர்ந்தெடுத்தார்கள். டெக்னாலஜி பற்றி தெரியாவிட்டாலும் எனக்கு இருக்கும் பகுப்பாய்வு திறனையும் எதையும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்கிற திறனையும் வைத்து இலக்கை அடைய முடியும் என்கிற நம்பிக்கையோடு செயல்பட்டேன்.
2019-ல் வேலைக்கு சேர்ந்த போது WFH வாய்ப்பெல்லாம் கிடையாது. அனுமதி வாங்கி வேலை செய்தேன். இரவு நேரப் பணி கிடையாது. 9.30 முதல் 6 மணி வரை வேலை செய்தால் போதும் என்கிற சவுகரியம் இருந்தது.
”நிறுவனம் என் மீது வைத்த நம்பிக்கை மற்றும் எனக்கு கொடுத்த சவால்களால் இந்த 4 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்ட விஷயங்களை பணி இடைவெளிக்கு முன்னர் கூட கற்றுக் கொள்ளவில்லை.”
புதிதாக வந்தவர்களிடம் ஒரு சவாலை கொடுக்கலாமா என்று யோசிக்காமல் நிர்வாகம் எங்களை அரவணைத்து வழிநடத்தியது. அதோடு இலக்கை அடையாவிட்டாலும் கூட அவர்களின் திறனிற்கு ஏற்ற பணியை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பையும் அவர்களே தந்தனர், என்கிறார் பிரியா.
வாரத்திற்கு 2 நாட்கள் அலுவலகத்தில் வேலை, WFH வாய்ப்புகளும் இப்போது கொடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் எனக்கு பணியில் சவால்கள் இருந்தது. என்னால் ஒரு இலக்கை அடைய முடியும் என்கிற நம்பிக்கையே இல்லை. 2 பெண் குழந்தைகள், வீட்டில் பெரியவர்களை பராமரிக்க வேண்டும் என்கிற பொறுப்புகள் இருந்தது, அதோடு வேலைக்கு சென்று வருவது கடினமாகத் தான் இருந்தது.
எல்லாம் சரியாக சில காலம் எடுத்தது. அந்த நேரத்தில் வீட்டு வேலைக்கு ஆட்களை நியமித்து, குழந்தைகளுக்கு மட்டும் சமைத்து கொடுத்துவிட்டு, நான் வெளியில் வாங்கிச் சாப்பிடுவது என்று சமாளித்து அந்த இக்கட்டை கடந்து வந்தேன். இப்போது குடும்பம், பணி என இரண்டையும் சமன்படுத்தி செல்ல முடிகிறது.
”சில நாட்கள் நன்றாக இருக்கும், சில நாட்கள் கடினமானதாகத் தான் இருக்கும், அதில் மாற்றுக் கருத்து இல்லை. குழந்தைகள் தனித்து செயல்பட்டாலும் டீனேஜ் பருவத்தில் இருக்கும் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும், பணியிலும் சில நாட்கள் குறைவாக உணரக் கூடும். பொருளாதார ரீதியில் வேலை செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாவிட்டாலும் நமக்கான எதிர்கால சேமிப்பு என்று ஒன்று இருப்பதில் தவறில்லை,” என்கிறார் பிரியா.
Bounteos-இன் ‘BYB’ திட்டம்
2003-ல் சிகாகோவில் தொடங்கப்பட்ட Bounteous சென்னையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பகுப்பாய்வு, டெக்னாலஜி, மார்க்கெட்டிங் என நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து டிஜிட்டல் சேவைகளையும் வழங்கும் ஆலோசனை நிறுவனம் இது. கடந்த பிப்ரவரியில் Accolite என்கிற டிஜிட்டல் என்ஜினியரிங் நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்படத் தொடங்கியுள்ளது இந்நிறுவனம்.
தற்போது Bounteous X Accolite என்று அறியப்படுகிறது. 2019ல் Hire Her Back என்கிற பெயரில் கரியர் பிரேக் பெண்களை மையமாகக் கொண்டு ஒரு திட்டத்தை Bounteous செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இது முழுக்க முழுக்க பெண்களுக்கானது. பணி இடைவெளிக்குப் பிறகு வருபவர்களுக்கு சமவாய்ப்பளிக்கும் ஒரு வரப்பிரசாதம் இந்தத் திட்டம் என்று கூட சொல்லலாம்.
பெண்களுக்கானதாக மட்டும் இல்லாமல் ஆண்களையும் இந்த திட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே Beyond your Break (BYB) என்கிற ஒரு திட்டத்தை தற்போது நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறது. இதில் 13 ஆண்டுகள் வரை பணி இடைவெளியில் இருந்தவர்கள் உள்பட சுமார் 90 பேர் மீண்டும் பணிக்குத் திரும்பி சிறப்பாக திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நீண்ட இடைவேளைக்கு பின் பணியைத் துவங்கும் தாய்மார்களுக்கு 10 உற்சாகக் குறிப்புகள்!