ஃபேஸ்புக் மூலம் உங்கள் பிசினஸை மார்க்கெட்டிங் செய்ய 10 எளிய உத்திகள்!
தொழில்முனைவர்கள் தங்களது பிசினஸை மேம்படுத்த அதிக செலவில்லாத சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கை நாடலாம். ஃபேஸ்புக் மூலம் உங்கள் பிசினஸை சிறப்பாக மார்க்கெட்டிங் செய்வதற்கான உத்திகள் இதோ.
சமீப காலமாக பின்டெரஸ்ட், ஸ்நாப்சாட் போன்ற போட்டித் தளங்கள் வந்தாலும், சமூக வலைதளங்களில் மக்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பதில் ஃபேஸ்புக் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, நெட்டிசன்களை இயங்கவைப்பதில் தீவிரம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது. தங்களுக்குத் தேவையான பயனாளிகளைக் கவர்வது மட்டுமின்றி, புதிய வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்ப்பதில் துணைபுரிவதால்தான் பெரும்பாலான தொழில் முனைவோருக்கும் ஃபேஸ்புக் உகந்ததாக இருக்கிறது.
ஃபேஸ்புக்கையும், அந்தத் தளம் சார்ந்த அப்ளிகேஷன்களையும் பயன்படுத்துவதில் மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டுவதாக புள்ளிவிவரங்கள் பலவும் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக, இணையத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் ஃபேஸ்புக் தளத்தை சிறுதொழில் புரிவோரோ அல்லது தொழில்முனைவோரோ தங்களது தொழில் வர்த்தகத்தை மேம்படுத்த மிகச் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக, தங்களது சமூக வலைதள வியூகத்தை ஃபேஸ்புக் வாயிலாக வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.
உங்களது தொழில் சார்ந்து ஒரு புரொஃபஷனல் பிசினல் பக்கத்தைத் தொடங்குவதுதான் ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்கில் முதன்மையானதும் மிகவும் முக்கியமானதுமான நடவடிக்கை. ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆம், நமக்கான தொழில் பின்புலத்தை தொடங்குவதே நமது தொழிலை மேம்படுத்தும் சிறந்த வழி. இதன் முதல்படியாக, நீங்கள் உருவாக்கும் ஃபேஸ்புக் பக்கத்தை ரெகுலராக அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாக, உங்களது ஃபேஸ்புக் பக்கத்தின் பார்வையாளர்கள், உங்களது வாடிக்கையாளராக மாறக்கூடிய வகையில் சரியான உத்திகளைக் கையாளவேண்டும்.
இதோ, ஃபேஸ்புக் தளத்தை மார்க்கெட்டிங்குக்காக மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான 10 வழிகள்:
1) பிசினஸ் பேஜ்: ஃபேஸ்புக்கில் புரொஃபஷனல் பிசினஸ் பக்கத்தை உருவாக்கும்போது, பெரும்பாலான தொழில்முனைவர்களும் அவசரத்தில் பர்சனல் பக்கத்தையே தொடங்கிவிடுகின்றனர். நீங்கள் வழக்கமாக உருவாக்கும் ஃபேஸ்புக் கணக்கிலும் உங்களது தொழில் குறித்த விவரங்கள் கேட்கப்படும். ஆனால், அது புரொஃபஷனல் பேஜ் கிடையாது. ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரையில் புரொஃபஷன் பேஜ் தனி, பர்சனல் பேஜ் தனி. புரொஃபஷன்ல் - பிசினஸ் பேஜ் உருவாக்கும்போது, நாம் சரியாகத்தான் பக்கத்தை உருவாக்குகிறோமா என்பதை கவனிக்க வேண்டும்.
அந்த வகையில், பிசினஸ் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்க, உங்கள் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் 'Create' ஆப்ஷனை க்ளிக் செய்தால், 'Page' எனும் ஆப்ஷன் தோன்றும். அதைக் க்ளிக் செய்து ஃபேஸ்புக் பேஜை உருவாக்க வேண்டும். நம் ஃபேஸ்புக் பர்சனல் அக்கவுண்ட்டில் சில வரையறைகள் உள்ளன. ஆனால், பிசினஸ் பக்கத்தில் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.
குறிப்பாக, நம் பிசினஸ் தேவைக்கேற்ப பயன்படுத்தக் கூடிய சிறப்பு அம்சங்களும், டூல்களும் புரொஃப்ஷனல் பக்கங்களில் இருக்கின்றன. நம் பிசினஸ் பக்கத்தை லைக் செய்து பின்தொடர்பவர்களை நம் பக்கத்துக்கான உறுப்பினர்களாக மாற்றி, அவர்களுக்கு நம்முடைய அப்டேட்ஸ் அனைத்தையும் உடனுக்குடன் பெற வழிவகுக்கப்படுகிறது. நம் பிசினஸின் பிராண்டு வலுப்பெறவும், வாடிக்கையாளர்களுக்கு நம் மீது நம்பிக்கையை உறுதியாக்கவும் பல வழிகளில் ஃபேஸ்புக் புரொஃபஷனல் பேஜ் உதவும்.
2. போட்டோ முக்கியம்: ஓராயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவற்றை ஒற்றைப் புகைப்படம் பகிர்ந்துவிடும். ஆம், ஃபேஸ்புக் பிசினஸ் பேஜுக்கு கவர் ஃபோட்டோ மிக மிக முக்கியம். உங்கள் பிசினஸின் நோக்கத்தையும் லட்சியத்தையும் வெளிப்படுத்தக் கூடிய சிறந்த கவர் ஃபோட்டோவை வையுங்கள். அந்த ஃபோட்டோ 851 x 315 பிக்சலில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் கவர் ஃபோட்டோவை உங்களது பிசினஸ் பக்கத்தில் மாற்றும்போது சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம்.
மொபைல் வெர்ஷனில் பார்க்கும்போதும், அந்தக் கவர் ஃபோட்டோ கவனத்தை ஈர்க்க வேண்டும். கவர் ஃபோட்டோவுக்குக் கீழேயுள்ள முதல் போஸ்ட், உங்கள் கவர் ஃபோட்டோவுடன் தொடர்புடையதாக இருக்கும்படி 'பின்' பண்ணியிருந்தால் இன்னும் சிறப்பு. கவர் ஃபோட்டோவுக்கான அலைன்மென்ட் கச்சிதமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
3. சரியான யூ.ஆர்.எல்: உங்கள் பிசினஸ் ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கும்போது, தானாக ஒரு URL ஒன்று உருவாக்கப்படும். அது நம்பர்களாலும் எழுத்துகளாலும் நிறைந்திருக்கும். அந்த யூ.ஆர்.எல்.-ஐ நம் வசதிக்கேற்ப மாற்றும் வசதியும் உண்டு. செட்டிங்கில் Custom URL எனும் விதமான ஆப்ஷனைப் பயன்படுத்தி, உங்கள் பிசினஸ் ஃபேஸ்புக் பக்கத்துக்கான யூ.ஆர்.எல்.-ஐ நீங்களே சுருக்கமாகவோ அல்லது எளிதாகவோ மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றும்போது, உங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவது நல்லது. அதுதான் இணையத் தேடலில் ஈடுபடுவோருக்கு உங்கள் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும். மேலும், நீங்கள் வேறு எங்காவது விளம்பரப்படுத்தவும் எளிதாக இருக்கும்.
4. பிசினஸ் பற்றி: உங்கள் பிசினஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் முக்கியமான ஓர் இடம் 'About' பகுதி. பொதுவாக, நெட்டிசன்கள் புதிதாக ஒரு ஃபேஸ்புக் பக்கத்துக்குள் நுழையும்போது, 'About' பகுதியைத்தான் கவனிப்பார்கள். எனவே, அந்த இடத்தில் உங்கள் நிறுவனத்தைப் பற்றியும், உங்களது புரோடக்டுகள் குறித்தும் சிறப்பான அறிமுகத்தை எழுதுங்கள். மேலும், உங்களது வலைதளம் தொடங்கி இன்ஸ்டாகிராம் வரை அனைத்து URL-களையும் அங்கே காட்டலாம்.
உங்களது நிறுவனத்தைப் பற்றிய தெளிவு உடனடியாக கிடைக்கும்படி, சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுத வேண்டியது அவசியம். உங்கள் நிறுவனத்தின் சேவைகளையும் சுருக்கமாகப் பட்டியலிடலாம். இவையெல்லாம் மிகவும் கடினமாக அல்லாமல், எளிமையான மொழியில் இருந்தால் சிறப்பு.
5. ஃபேஸ்புக் பிக்சல்ஸ்: Facebook Pixels கோடிங்கை பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். இதை உங்களது வெப்சைட்டில் இன்ஸ்டால் செய்வதன் மூலம் கன்வெர்ஷன்கள், தளத்துக்கு வருகைபுரிவோர், தளத்துக்கு வருகைபுரிவோரின் விருப்பங்கள் முதலானவற்றை கணிக்க முடியும். ஃபேஸ்புக் விளம்பரங்களை உங்களுக்குத் தேவையான ஆடியன்ஸை மட்டும் தனியாக அப்ரோச் செய்வதற்கு ஃபேஸ்புக் பிக்சல் உதவும். இதன்மூலம், தங்களது மொபைல் போன்கள் அல்லது பர்சனல் கம்ப்யூட்டர்கள் மூலம் சோஷியல் மீடியா வழியாக உங்களது வலைதளத்துக்கு வருகை தரக்கூடியவர்களை டார்கெட் செய்து ஃபேஸ்புக் ப்ரோமோஷன்களை உருவாக்கலாம்.
6. ஃபேஸ்புக் விளம்பரங்கள்: ஃபேஸ்புக்கில் ப்ரோமோஷன்கள் உருவாக்கும்போது, உங்களுக்குத் தேவையான ஆடியன்ஸ் வசிக்கும் பகுதி, வயது வரம்பு, விருப்பமான துறைகள் என பல்வேறு வகைப்பாடுகளில் வடிகட்டலாம். இதன்மூலம், உங்கள் நிறுவனத்துக்குத் தேவையான ஆடியன்ஸை மட்டும் எளிதில் அடையலாம்.
7. வீடியோ பதிவுகள்: வீடியோ வடிவிலான போஸ்டுகள்தான் இப்போது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கவல்லது. வழக்கமான எழுத்து வடிவிலான போஸ்ட்டுகளைக் காட்டிலும் குட்டி குட்டி வீடியோக்கள் மூலம் மக்களின் கண்களுக்கு விருந்தளித்து, நமக்கான ஆடியன்ஸை கூட்டலாம். நம் நிறுவனத்துக்கான சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கில் அசத்தலாம். மற்ற வடிவிலான போஸ்டுகளைவிட வீடியோக்களுக்கு ஃபேஸ்புக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது. ஆட்டோ-ப்ளே உள்ளிட்ட வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஃபேஸ்புக் வீடியோவைப் பொறுத்தவரை வைரலாகப் பகிரத்தக்க வகையிலான பொழுதுபோக்கும் புத்துணர்வும் கொண்டதாக இருக்க வேண்டும். அதேவேளையில், நம் நிறுவன மார்க்கெட்டிங்கில் வலுவான அம்சமாகவும் திகழவேண்டும்.
நம் ஆடியன்ஸுக்கு எளிதாகப் புரிதலை ஏற்படுத்தக் கூடியவகையில் வீடியோ போஸ்டுகள் அமைந்திருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் போரடிக்காமல் பார்த்துக்கொள்வதும் நல்லது. இதற்கு, நம் வீடியோவின் முதல் இரண்டு, மூன்று நொடிகள் மிக முக்கியமானவை. ஆரம்பம் நிச்சயமாக ஈர்ப்புடைய அம்சங்களுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் முழு வீடியோவைப் பார்ப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்த முடியும். அதேபோல், மிக நீண்ட - அதிக நேரம் ஓடக் கூடிய வீடியோவாக இல்லாமல், 'நச்'சென இருக்க வேண்டும்.
8. உடனுக்குடன் ரிப்ளை: உங்கள் பிசினஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் வந்திருக்கும் மெசேஜ்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டியது அவசியம். மெசேஜ் பகுதிதான் நம் வாடிக்கையாளுடன் நெருக்கத்தைக் கூட்ட உதவும். அதற்கு, அவ்வப்போது நம் ஃபேஸ்புக் பக்கத்தின் இன்பாக்ஸை கவனிக்க வேண்டும். எந்த ஒரு மெசேஜ் வந்தாலும், அதற்கு ரிப்ளை செய்ய வேண்டும். அப்போதுதான் நம் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மை கூடும்.
இவ்வாறு உடனுக்குடன் பதிலளிப்பதில் இன்னொரு பயனும் உண்டு. ஃபேஸ்புக் பக்கத்தில் நாம் விரைந்து ரெஸ்பான்ஸ் செய்வதாக ஹைலைட் செய்யப்படும். இதனால், வாடிக்கையாளர்களை மதிக்கத்தக்க நிறுவனமாக இருக்கிறோம் என்பதை புதிய ஆடியன்ஸுக்கு காட்ட முடியும். எனவே, இன்பாக்ஸில் கேட்கப்படும் சந்தேகங்களை உடனுக்குடன் களைய தயாராக இருக்க வேண்டும்.
9. பொறுப்பான பதிவுகள்: ஃபேஸ்புக் பக்கத்தைப் பொறுத்தவரையில், எழுத்து வடிவிலோ, போட்டோ வடிவிலோ, வீடியோவாகவோ போஸ்டுகளைப் போடுவதற்கு எந்த விதமான கடுமையான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதில்லைதான். ஆனால், நம் ஆடியன்ஸின் மனநிலை - சூழலுக்கு ஏற்ப எந்தப் போஸ்டுகளை எப்போது போடவேண்டும் என்பது குறித்த தெளிவு அவசியம். அப்போதுதான் நம் போஸ்டுகளின் ரீச் பெரிய அளவில் இருக்கும்.
10. சுவாரசிய பதிவுகள்: எல்லா நேரத்திலும் எல்லா போஸ்டுகளுமே நம் பிசினஸ் ப்ரொமோஷன்களாகவும், ப்ரோடக்ட் விளம்பரங்களாகவும் மாதிரியாக இருந்தால், நம்மைப் பின்பற்றுவோருக்கு ஒருவித ஏமாற்றமும் சலிப்பும் வந்துவிடலாம். எனவே, அவ்வப்போது நம் துறை சார்ந்த சுவாரசியமான செய்திகள், சுவையான மேற்கோள்கள், ஜாலியான பயனுள்ள வீடியோக்கள் என பொதுவானவற்றையும் அடிக்கடி பகிருங்கள். அப்போதுதான் நம் ஆடியன்ஸை ஆர்வம் குறையாமல் எங்கேஜிங்காக வைத்துக்கொள்ள முடியும்.
இந்த ஃபேஸ்புக் மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தி இப்போதே உங்கள் பிசினஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் தீவிரம் காட்டத் தொடங்குங்கள். நீங்கள் ஆர்வத்துடன் செயல்படும்போது, உங்களுக்கே புதிய புதிய உத்திகள் தோன்றி, ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்கில் நிபுணர் ஆவதும் நடக்கும். கலக்குங்கள்.
தொகுப்பு: ப்ரியன்