நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: குடும்ப வேட்பாளர்களும்; திரில் வெற்றிகளும்!
தமிழகத்தில் நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 22 வயது கல்லூரி மாணவிகள், மாற்றுத்திறனாளி, திருநங்கைகளுக்கு வெற்றியைக் கொடுத்து மாற்றத்திற்கு விதை போட்டிருக்கின்றனர் மக்கள். இவர்கள் தவிர வெவ்வேறு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் சுவாரஸ்ய காம்போக்களும் இருக்கின
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கையானது பிப்ரவரி 22 அன்று 268 மையங்களில் எண்ணப்பட்டது.
அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, விஜய் மக்கள் இயக்கம் என கட்சிகள் தங்களின் பலத்தை அறிவதற்காக தனித்தே இந்த முறை களம் கண்டன. சட்டமன்றத் தேர்தலில் இருந்த தனது கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் முடிவுகளில் பல சுவாரஸ்யங்கள் அரங்கேறியுள்ளன.
அசத்தலான குடும்ப காம்போ வெற்றிகள்
- மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சியில் கணவன் - மனைவி வெற்றி பெற்றுள்ளனர். அலங்காநல்லூர் பேரூராட்சியில் அடுத்தடுத்த வார்டுகளான 4 மற்றும் 5ல் போட்டியிட்ட கணவன் கோவிந்தராஜ், மனைவி ரேணுகா ஈஸ்வரி இருவரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி பேரூராட்சியின் 9வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட புவனேஸ்வரியும் 12வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நாச்சிமுத்துவும் வெற்றி பெற்றுள்ளனர், இவர்கள் இருவரும் தம்பதிகளாவர்.
- மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் 8 மற்றும் 13வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட தாள் வள்ளிமயில் மற்றும் மகன் மருதுபாண்டியன் வெற்றி பெற்றுள்ளனர்.
- வாணியம்பாடி நகராட்சியில் 1 மற்றும் 10-வதுவர்டில் தி.மு.க சார்பாக களமிறங்கிய தாய்-மகன் உமா சிவாஜி கணேசன், சாரதிகுமார் இருவரும் வெற்றிபெற்றனர்.
- கோவில்பட்டி நகராட்சியில் 18 மற்றும் 27வது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிட்ட தாய் விஜயா மற்றும் மகன் ஜோதிபாசு வெற்றி பெற்றுள்ளனர்.
- குடும்பங்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் விருதுநகரில் 26 மற்றும் 27 வார்டுகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மருமகள் சித்தேஸ்வரி மற்றும் மாமியார் பேபி வெற்றி வாகை சூடியுள்ளனர்.
- திருவாரூர் நகராட்சியில் 1 மற்றும் 2வது வார்டை அதிமுக சார்பில் போட்டியிட்ட கலியபெருமாள், மலர்விழி தம்பதி தன்வசமாக்கியுள்ளது.
- தென்காசி நகராட்சியில் 14 மற்றும் 15வது வார்டுகளில் அண்ணன், தங்கையான பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கனியை பறித்துள்ளனர்.
மாற்றத்திற்கு வித்திட்டுள்ள திருநங்கை, மாற்றுத்திறனாளிகளின் வெற்றி
- நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி 7வது வார்ல் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட மாற்றுத்திறனாளி நியாஸ் வெற்றி பெற்றுள்ளார்.
- கன்னியாகுமரி கொல்லங்கோடு நகராட்சி 11 வார்டில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஃபெரோஸ் கான் 303 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.
- வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.
த்ரில் வெற்றிகள்
- கரூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் கோபிநாத் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை தன்வசமாக்கியுள்ளார். தேர்தல் முடிவு ரேஸில் திமுக, அதிமுக மோதிக்கொண்டிருக்க பாஜக வேட்பாளர் ஒற்றை ஓட்டு வித்தியாசத்தில் த்ரில் வெற்றியடைந்துள்ளார்.
- திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் பேரூராட்சியில் 18 வார்டுகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 7வது வார்டில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் நித்யாவிற்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம் மட்டுமே இருந்த நிலையில் நித்யா நூலிழையில் வெற்றியடைந்திருக்கிறார்.
தனிக்காட்டு ராஜாக்களான சுயேச்சைகள்
கட்சிகளின் சார்பின்றி ஏரியாவில் செய்த நற்பணிகள் மற்றும் தனக்கான நன்மதிப்பைக் கொண்டு சிலர் சுயேச்சையாக வென்று ஜாம்பவான் அரசியல்வாதிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.
- சென்னை மாநகராட்சியின் 23-வது வார்டில் தீப்பெட்டி சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட ராஜன் தேர்தலில் வென்று கவுன்சிலர் ஆகியிருக்கிறார். இந்த வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மமகவைச் சேர்ந்த ஷேக் முஹம்மது அலி தோல்வியடைந்துள்ளார்.
- தேனி-அல்லிநகரம் நகராட்சியின் 2து வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு 71வயது சுப்புலட்சுமி வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக இருந்த இவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த வார்டு திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட சுப்புலட்சுமி 239 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திமுக 5 வார்டுகளிலும் அதிமுக மற்றும் அமமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
- மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 7 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று 8 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் 7 சுயேச்சை வேட்பாளர்களும், ஒரு திமுக வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார்.
இளம்பெண்களின் முதல் வெற்றி
- ஓசூர் மாநகராட்சியின் 13-வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய 22 வயதான சட்டக் கல்லூரி மாணவி யஷாஸ்வினி வெற்றி பெற்றார். 1146 வாக்குகள் பெற்ற யஷாஸ்வினி, 640 வாக்குள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார். யஷாஸ்வினி 3ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
- திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட கல்லூரி மாணவி சினேகா 494 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார். திமுக, அதிமுகவை பின்னுக்குத்தள்ளி இந்தத் தேர்தலில் வென்றிருக்கும் சினேகா பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
- சென்னை மாநகராட்சியின் 136வது வார்டில் போட்டியிட்ட 22 வயது நிலவரசி துரைராஜ் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னையின் இளம் கவுன்சிலர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
- ஆரணியில் திமுகவைச் சேர்ந்த 21 வயது இளம் வேட்பாளர் ரேவதி வெற்றி பெற்றுள்ளார்.