திமுக, அதிமுக வேட்பாளர்களை தோற்கடித்த 22வயது கல்லூரி மாணவி; நகராட்சித் தேர்தலில் அமோக வெற்றி!
துவாக்குடி நகராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்ட 22 வயது கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலாவதாக, தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள 279 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. நீயா? நானா? போட்டியில் வெல்லப்போவது யார் என திமுக, அதிமுக முட்டி நிற்க, தனியே களம் கண்ட பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சுயேட்சைகள் என 8 முனை போட்டி விறுவிறுப்பான உச்சகட்டத்தை எட்டி வருகிறது.
பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற தேசிய கட்சியான பாஜகவே முட்டி மோதி வரும் நிலையில், தமிழகத்தின் முன்னணி கட்சிகளான அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக சுயேட்சை வேட்பாளர்கள் ஏராளமான வார்டுகளில் அமோக வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவி ஒருவர் அமோகமாக வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் 22 வயதான கல்லூரி மாணவி 494 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மகளிருக்காக ஒதுக்கப்பட்ட 5வது வார்டில், அதிமுக வேட்பாளர் புஷ்பவல்லி 61 வாக்குகளும், திமுக வேட்பாளர் மகேஸ்வரி 81 வாக்குகளும், அமமுக வேட்பாளர் சசிகலா 190 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில், கல்லூரி மாணவி அதிக வாக்குகள் எடுத்து பெரிய கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அமோக வெற்றி பெற்று பாராட்டுக்களை குவித்து வருகிறார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இளம் பெண்கள், இளைஞர்கள் என படித்த மற்றும் படித்து கொண்டிருக்கும் இளம் தலைமுறையினர் அதிக அளவில் தேர்தலில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கனிமொழி