நல்ல பழக்கத்தை ரெகுலரா தொடர விரும்புகிறீர்களா? உங்களை ஊக்குவிக்க வந்தாச்சு Habit Tracker ஆப்!
ஹேபிட் ட்ராக்கர் செயலி நாம் பின்பற்ற விரும்பும் நல்ல பழக்கத்தைத் தொடர்ந்து செய்ய ஊக்குவித்து அதில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கோம் என்பதைக் கண்காணிக்கிறது.
எந்த ஒன்றையும் உருவாக்குவதுதான் கடினம். அழிப்பது எளிது. நம்மிடம் இருக்கும் பழக்கங்களுக்கும் இது பொருந்தும்.
ஒரு மனிதன் ஒரு நல்ல பழக்கத்தை தனக்குள் வளர்த்துக்கொள்ள எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா? கிட்டத்தட்ட 18 முதல் 66 நாட்கள் ஆகும். எத்தனையோ நியூரான்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால் ஒரு நல்ல பழக்கம் உருவாகிறது. ஆனால், அதை உடைத்தெறிய வெறும் 3 நாட்களே போதுமானது.
ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதால் அது நமக்கு பழக்கமாகிவிடுகிறது. ஆனால், எந்த ஒரு நல்ல பழக்கத்தையும் ஆரம்பத்தில் ஆர்வமாகத் தொடங்கும் நாம் அதைத் தொடர்ந்து செய்வதில்லை. இதற்கு எத்தனையோ காரணங்களை நாம் சுட்டிக் காட்டினாலும்கூட அதைத் தொடரமுடிவதில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.
உதாரணத்திற்கு நடைபயிற்சி செல்ல விரும்புவோர் ஆரம்பத்தில் அதற்கான ஏற்பாடுகளை பலமாக செய்து தொடங்கினாலும்கூட காலப்போக்கில் பலர் தொடர்ந்து செய்வதில்லை.
ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள மனதிற்குள் எத்தனை உறுதியாக தீர்மானம் எடுத்து பின்பற்றவேண்டுமோ அதே அளவிற்கு வெளியிலிருந்து கிடைக்கும் உந்துதலும் முக்கியம்.
உதாரணத்திற்கு நண்பருடன் சேர்ந்து வாக்கிங்கோ ஜிம்மிற்கு போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் போகத் தவறினால் அந்த நண்பர் உங்களுக்கு நினைவுபடுத்தி ஊக்கமளிப்பார் இல்லையா?
அப்படிப்பட்ட ஒரு உந்துதலை அளிக்கும் நம் உற்ற நண்பன்தான் Habit Tracker செயலி. இந்த ஆப் ஒருவர் எந்த விஷயத்தைப் பழக்கப்படுத்திக்கொள்ள விரும்புகிறோமோ அதை செய்ய ஊக்கப்படுத்துகிறது. நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை கண்காணிக்கவும் செய்கிறது.
இந்த செயலி iOS-ல் 4.8/5 ரேட்டிங்கும் கூகுள் ப்ளேஸ்டோரில் 2.8/5 ரேட்டிங்கும் பெற்றுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் 1,00,000-க்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
செயலியின் பயன்பாடு
’ஹேபிட் ட்ராக்கர்’ செயலியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. இதில் லாக் இன் செய்தால் ஹோம் பேஜ் வரும். இதுதான் உங்களது தினசரி கேலண்டர். அதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்ய விரும்பும் செயலையோ பழக்கத்தையோ தேர்வு செய்துகொள்ளலாம்.
முதலில் லான் இன் செய்யும்போது இந்தப் பக்கத்தில் எதுவும் இருக்காது. அதிலிருக்கும் (+) என்கிற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் விரும்பும் பழக்கங்களை அதில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் ஏராளமான பிராம்ப்ட் வரும். அவை உங்களுக்கு எளிதாக வழிகாட்டும்.
‘New Habit' என்றிருக்கும் பக்கத்திற்கு சென்று (+) என்கிற பட்டனை கிளிக் செய்தால் ஏற்கெனவே புரோக்கிராம் செய்யப்பட்ட பழக்கங்களைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு வாக்கிங், ரன்னிங், யோகா, சைக்கிளிங், மெடிடேஷன், வாசிப்பு, கற்றல், மூச்சுப்பயிற்சி, தண்ணீர் குடிப்பது என ஏராளமானவை இதில் காட்டப்பட்டிருக்கும். இதிலிருந்து தேர்வு செய்து உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் இந்தப் பழக்கங்களில் ஒன்றை கிளிக் செய்தால் போதும்,
- பேரை மாற்றிக்கொள்ளலாம்
- அலெர்ட் திட்டமிடலாம்
- எப்போது நினைவூட்டவேண்டும் என்பதை செட் செய்துகொள்ளலாம்
- வாரத்தின் எந்தெந்த நாட்களில் அலெர்ட் தேவைப்படும் என தேர்வு செய்துகொள்ளலாம்
- எந்த நேரத்தில் நோடிஃபை செய்யவேண்டும் என பதிவிடலாம்
- எப்போது ரிமைண்டரை நிறுத்திக்கொள்ளலாம் என்பதையும் பதிவிடலாம்.
மேலும், ஏற்கெனவே புரோக்கிராம் செய்யல்பட்ட பழக்கங்கள் தவிர நீங்கள் வேறு ஏதேனும் புதிதாக சேர்க்க விரும்பினால் அதற்கும் இந்த செயலியில் வசதி உண்டு.
நீங்கள் பின்பற்ற விரும்பி, தேர்வு செய்த பழக்கத்தை முடித்துவிட்டீர்கள் என்றால் ஹோம்பேஜிலிருந்து அதை ஸ்வைப் செய்து 'Completed', அதாவது நிறைவேற்றிவிட்டீர்கள் என பதிவு செய்துகொள்ளலாம்.
அதிக அலெர்ட் வருவதை நிறுத்திக்கொள்ள நீங்கள் விரும்பினால், 'Settings' என்கிற ஆப்ஷனில் இருக்கும் 'Vacation Mode' என்கிற செட்டிங்கிற்கு மாற்றிவிடலாம். ஆப்-இல் இருக்கும் ஒரு பழக்கத்தை டெலீட் செய்ய விரும்பினால் ’ஹேபிட் மேனேஜர்’ கிளிக் செய்யவும்.
ஹோம்பேஜிற்கு அடுத்து வரும் பக்கத்தில் ஒரு கேலன்டரில் உங்கள் பழக்கத்தைப் பின்பற்றுவதில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பழக்கத்தற்கும் தனித்தனியாக கேலண்டர் இருக்கும். வெவ்வேறு பழக்கங்களை எப்படி முறையாக பின்பற்றியிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு நீங்களே உங்களுக்கு ஒரு ’சபாஷ்’ சொல்லிக்கொள்ளலாம்.
இவைதவிர இதில் ’ஃப்ரெண்ட்ஸ்’ என்கிற டேப் உள்ளது. இதில், உங்கள் நண்பர்களை இணைத்துக்கொண்டால் அவர்களும் உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கமுடியும்.
அதுமட்டுமல்ல, உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பொதுவான ஒரு பழக்கத்தை உருவாக்கி செயலியில் பதிவு செய்துவிட்டால் போதும், அனைவருக்கும் ஒரே நேரத்தில் இந்த செயலி அலெர்ட் அனுப்பிடுவும்.
மதிப்பீடு
கூகுள் ப்ளே ஸ்டோர் ரெவ்யூக்களில் பலர் ஹேபிட் ட்ராக்கர் செயலி ஆண்ட்ராய்டில் மோசமான அனுபவமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், Apple OS பயனர்கள் ஹேபிட் ட்ராக்கர் செயலியை வெகுவாகப் பாராட்டியிருக்கின்றனர்.
Habit Tracker செயலி எளிமையானது. பெல், விசில் சத்தங்கள் அதிகம் இருப்பதில்லை. டிசைனை காட்டிலும் அதன் செயல்பாட்டிற்கு டெவலப்பர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிகிறது.
செயலியைப் பயன்படுத்தத் தொடங்குவது எளிதாக இருக்கிறது என்றாலும் விரைவாக புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்கும் டுட்டோரியல் இருந்திருந்தால் மேலும் எளிதாக இருந்திருக்கும்.
சின்ன சின்ன அம்சங்களையும் நம்முடைய தனித்தேவைக்கேற்ப அமைத்துக்கொள்ள முடிவது இந்த செயலியின் சிறப்பம்சம். அளவுகளின் யூனிட்களை கிராம், வினாடி, மி.லி, அடிகள் என கவுண்ட் செய்துகொள்ள உதவுகிறது.
ஒரு பழக்கத்தை டெலீட் செய்வது சற்று கடினமாக இருக்கிறது. ’செட்டிங்ஸ்’ டேப் சென்று சற்று சிக்கலமான செயல்முறைகளை கடந்த பிறகு டெலீட் செய்ய முடிகிறது. ஹோம்பேஜிலேயே சற்று கூடுதல் நேரம் அழுத்தினால் டெலீட் ஆகும் வசதி இருந்தால் எளிதாக இருந்திருக்கும்.
ஹேபிட் ட்ராக்கர் செயலி உங்கள் பழக்கங்களைக் கண்காணிக்க உதவுகிறதே தவிர அந்தப் பழக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்கத் தேவையான உதவிகளை செய்வதில்லை. மொத்தத்தில் இந்த செயலியை ஒரு ’கோச்’ என்று சொல்வதைக் காட்டிலும் ’ஸ்கோர்கீப்பர்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
நீங்களும் நல்ல பழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்ற, நிச்சயம் Habit Tracker செயலியை முயற்சி செய்து பாருங்கள். நல்ல பழக்கங்கள் அதிகரிக்க வாழ்த்துக்கள்!
ஆங்கில கட்டுரையாளர்: அபராஜிதா சக்சேனா | தமிழில்: ஸ்ரீவித்யா