பறவையின் குஞ்சுகளை பாதுகாக்க 40 நாட்கள் இருளில் மூழ்கிய கிராமம்!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொத்தகுடி கிராமமக்கள் ஒரு பறவையின் கூட்டைப் பாதுகாக்க கிட்டத்தட்ட 40 நாட்கள் சாலை விளக்குகளை இயக்காமல் இருட்டில் வாழ்ந்துள்ளனர்.
எத்தனையோ தனிநபர்கள் சமூக நலனில் அக்கறை காட்டி வருவதைப் பார்க்கிறோம். இத்தகைய தனிநபர்களின் முயற்சிக்கு இவர்களது குடும்பத்தினர் ஆதரவளித்து உறுதுணையாக இருப்பது பாராட்டவேண்டிய விஷயம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு கிராமமே தங்களது வசதியான வட்டத்தை விட்டு வெளியேறி அக்கறை காட்டியிருப்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
ஆம்! தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொத்தகுடி கிராமமக்கள் ஒரு பறவையின் கூட்டைப் பாதுகாக்க கிட்டத்தட்ட 40 நாட்கள் சாலை விளக்குகளை இயக்காமல் இருட்டில் வாழ்ந்துள்ளனர்.
பொத்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு ராஜா. கிராமத்தின் 35 தெருக்களில் உள்ள மின் விளக்குகளுக்கு இணைப்பைக் கொடுக்கும் ஸ்விட்ச் இவரது வீட்டிற்கு அருகில் உள்ளது. இதை இயக்குவது இவரது கட்டுப்பாட்டில் இருந்தது. இவர் தினமும் மாலை வேளைகளில் இந்த ஸ்விட்டை ஆன் செய்துவிட்டு காலை இதை அணைப்பது இவரது வழக்கம்.
“ஒரு நாள் என் வீட்டில் இருந்து நான் வெளியே வந்தபோது அந்த ஸ்விட்ச் போர்டில் இருந்து நீல நிறத்தில் ஒரு பறவை பறந்து சென்றதை கவனித்தேன். அருகில் சென்று பார்த்தபோது அந்தப் பறவை கூடு கட்டுவது தெரிந்தது,” என்றார் கருப்பு ராஜா.
அந்தப் பறவை தினமும் சிறு குச்சிகளையும் வைக்கோலையும் சேகரித்து வந்து கூடு கட்டியுள்ளது. இப்படியே மூன்று நாட்கள் கடந்துள்ளது. நான்காவது நாள் அந்தக் கூட்டில் மூன்று முட்டைகள் இருப்பதை கருப்பு ராஜா கவனித்தார்.
இந்த நிலையில் மின் இணைப்பைக் கொடுத்தால் அந்தப் பறவையால் குஞ்சு பொறிக்க முடியாமல் போகும் என்று யோசித்தார். அதேசமயம் ஸ்விட்சை ஆன் செய்யாமல் போனால் கிராம மக்கள் சாலை விளக்குகள் இல்லாமல் இருளில் தவிக்க வேண்டியிருக்கும். உடனே கருப்பு ராஜா அங்குள்ளவர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
“நான் அந்த பறவையின் கூட்டைப் படம் பிடித்து வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துகொண்டேன். அந்தப் பறவை குஞ்சு பொறிக்கும் வரை மின்சாரத்தைத் துண்டிக்க சம்மதமா என்று கேட்டேன். பெரும்பாலான கிராம மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒப்புக்கொண்டார்கள். சிறு பறவைக்கு இப்படி ஒரு முடிவு எடுக்கவேண்டுமா என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்,” என்றார் கருப்பு ராஜா.
பின்னர் பஞ்சாயத்து தலைவர்களான அர்ஜுனன், காளீஸ்வரி ஆகியோரைத் தொடர்புகொண்டார். அந்தப் பகுதியை வந்து பார்வையிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
“ராஜா இது பற்றி என்னிடம் பேசியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த இடத்தைப் பார்வையிட சம்மதித்தேன். அங்கு சென்று பார்த்தபோது அந்தப் பறவை இலை, குச்சி, வைக்கோல் ஆகியவற்றால் கூடு கட்டி முட்டையைப் பாதுகாத்ததை கவனித்தேன். ஊரடங்கு சமயத்தில் மக்கள் தங்குமிடமின்றி அவதிப்படுகின்றன. இதே நிலைமை பறவைக்கும் வரக்கூடாது என்பதால் மின் இணைப்பைத் துண்டிக்க சம்மதித்தேன்,” என்றார் அர்ஜுனன்.
தகவல் உதவி: தி பெட்டர் இந்தியா