‘அதிக சம்பளம் வாங்கும் ‘பாஸ்’கள் பலர் புத்திசாலிகளாக இருப்பதில்லை’ - ஆய்வில் ஆச்சரிய முடிவு!
‘நல்லா வேலை செய்றவங்களுக்கு நிறைய வேலை கொடுப்பாங்க... ஆனா, சரியா வேலை செய்யாதவங்களுக்கு நிறைய சம்பளம் கொடுப்பாங்க...’ - பணிச்சூழலில் இப்படியான புலம்பல்களைக் கடந்து வந்திருப்போம். இது வெறும் புலம்பல் மட்டும் அல்ல; நடைமுறை யதார்த்தமும் இதுதான் என்பதை உறுதி செய்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு முடிவு.
சிறந்த அறிவுத்திறனும் செயல்திறனும் கொண்ட ஸ்மார்ட்டான பணியாளர்களை விட பன்மடங்கு ஊதியம் பெற்றும் செழிப்புடன் வாழும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பலரும் தங்கள் பணியில் ஸ்மார்ட்டாகவே இல்லை என்பதைத்தான் ஸ்வீடனின் சமீபத்திய ஆய்வு ஒன்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. முதலில் அந்த ஆய்வின் பின்னணியையும், அதன் முடிவுகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஸ்வீடனில் உள்ள லிங்கோபிங்க் பல்கலைக்கழகத்தின் அனாலிட்டிகல் சோஷியாலஜி துறையில் ஸ்மார்ட்டாக பணிபுரிபவர்களுக்கும், அவர்கள் வாங்கும் ஊதியத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதற்காக, ஸ்வீடனில் பிறந்த 59,387 ஆண்களின் அறிவுத்திறன் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு என்பது கட்டாய ராணுவ சேவையின் ஒரு பகுதியாக ஆண்களின் அறிவுத்திறன் அளவெண் சோதனையில் கிடைத்த முடிவுகளை அடிப்படையிலானது.
மொழித் திறன், தொழில்நுட்ப அறிவு, இடம் சார்ந்த அறிவு, லாஜிக் புரிதல்கள் முதலானவற்றை உள்ளடக்கிய அந்தச் சோதனையின் தரவுகள் 1971 -1977 மற்றும் 1980 - 1999 காலக்கட்டங்களில் பதிவு செய்யப்பட்டவை. அதாவது, ராணுவ சேவையின்போது தங்களது 18 அல்லது 19 வயதில் ஸ்மார்ட் ஆக இருந்தவர்கள் பிற்காலத்தில் தங்களது 35 மற்றும் 45 வயதுகளில் தொழில் - வேலை ரீதியில் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதன்படி ஆய்வு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளது.
‘யூரோப்பியன் சோஷியல் ரிவ்யூ’ இதழின் ஜனவரி மாத பதிப்பில் வெளியான அந்த ஆய்வு முடிவில், ‘மிக அதிக அளவு ஊதியம் பெறும் 1 சதவீதத்தினர், அவர்களை விட பல மடங்கு குறைவாக ஊதியம் பெறுபவர்களை விடவும் புத்திசாலித்தனத்திலும் செயல்திறனிலும் மிக மிக குறைந்தவர்களாக இருக்கின்றனர்’ என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் முக்கியப் பங்காற்றிய பேராசிரியர் மார்க் க்யூஸ்னிக் பகிர்ந்த முக்கிய ஆய்வுத் தகவல்கள்:
> அதிக அளவு ஊதியத்துடன் உயர் பதவியில் இருப்பவர்களிடம், அவர்களை விட பாதியளவுக்கும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களைக் காட்டிலும் தகுதி மிக்கவர்களாக இல்லவே இல்லை. அப்படி அவர்கள் தங்கள் பதவிக்குத் தகுதியானவர்களாக இருப்பதற்கான எந்தச் சான்றும் கிடைக்கவில்லை.
> திறமையற்றவர்கள் பெறும் அதிக ஊதியத்துக்கும், திறமையாளர்கள் பெறும் குறைந்த ஊதியத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது சமூகத்தில் பணக்காரர்களுக்கும் மற்றவர்களும் இடையிலான வருவாய் சமத்துவமின்மையை அதிகரிப்பதற்கான எச்சரிக்கை மணி.
> இந்த வருவாய் சமத்துவமின்மையை எடுத்துக்கொண்டால் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் அதிகம். அந்த நாடுகளுடன் ஒப்பிட்டால் ஸ்வீடனில் குறைவுதான்.
> தனிதிறமைகள், புத்திசாலித்தனத்தைக் காட்டிலும் குடும்பச் சொத்து வளமும் அதிர்ஷ்டமும்தான் அதிக ஊதியத்துடன் உயர் பதவிகளில் வெற்றிகரமாக வலம் வரக் காரணமாக இருக்கிறது.
இந்தத் தகவல்களை விட, நம்மில் பெரும்பாலானோரும் அன்றாடம் அனுபவித்து வரும், பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஓர் அம்சம் குறித்தும் அவர் பேசியுள்ளார். அது:
“ஸ்மார்ட்னஸ் துளியும் இல்லாமல் அதிக ஊதியம் வாங்கிக் கொண்டு உயர் பதவியில் இருக்கும் திறமையற்றவர்கள் எடுக்கும் பல முடிவுகளும் பல நேரங்களில் மக்கள் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உயர் பதவிகளில் சரியான - தகுதியான நபர்கள் இருப்பதே சமூகத்துக்கு சாலச் சிறந்தது.
கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால், அலுவலகங்களில் பணிபுரியும் நம்மில் பலருமே மேற்கண்டவற்றை அனுபவ ரீதியில் உணர்ந்திருப்போம் என்பதால், இந்த ஆய்வு ஸ்வீடனுக்கு மட்டுமல்ல, நம்ம ஊருக்கும் பொருந்தும் என்பது தெளிவு.
சக ஊழியர்களில் சிலர் திறமையும் இல்லாமல், சரியாக பணியும் செய்யாமல் இம்மீடியட் பாஸ்களுக்கும், பாஸ்களுக்கும் குழலூதிக்கொண்டு அப்ரைசல்களை அள்ளுவதைப் பார்த்திருப்போம்.
அதேபோல், நிர்வாக ரீதியில் சரியான முடிவுகள் எடுப்பதில் நம் இமீடியட் பாஸோ, பாஸோ மோசமாக இருப்பதையும் கவனித்திருப்போம். அவர்களின் முட்டாள்தனமானமான முடிவுகளால் நாம் வழக்கத்தைவிட கூடுதலாக உழைப்பதுடன், மோசமான ரிசல்டையே பெற வேண்டிய நிலையும் ஏற்படும்.
இப்படி நாள்தோறும் வேலைக்காக நம்மை நாமே வாட்டிக்கொள்ளும் நமக்கு கடைசியில் கிடைப்பதோ, மற்றவர்களை விட மிகவும் குறைவான சம்பளமே.
சரி, இதற்குத் தீர்வுதான் என்ன?
ரொம்ப கஷ்டமான சிம்பிள் யோசனை இதுதான்:
ஸ்மார்ட்டாக வேலை செய்யக் கற்றுக்கொண்ட நமக்கு, ஸ்மார்ட்டாக அதிகம் சம்பாதிக்கக் கற்றுக்கொள்ள முடியாதா என்ன?
Edited by Induja Raghunathan