மகளுக்காக தந்தையாக மாறி வாழும் ஒற்றைத் தாய் ‘பேச்சியம்மாள்’!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற கைம்பெண் தனது ஒற்றை மகளுக்காக ஆண் வேடமிட்டு வாழத் தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக தாயாகவும் தந்தையாகவும் இருந்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

மகளுக்காக தந்தையாக மாறி வாழும் ஒற்றைத் தாய் ‘பேச்சியம்மாள்’!

Tuesday May 10, 2022,

3 min Read

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் ஊருக்கு அருகே காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். கணவனை இழந்து ஒற்றைத் தாயாக குடும்பத்தை நடத்தும் பல பெண்களில் தனது பாலினத்தை மறைத்துக் கொண்டு மகளுக்காக வாழும் இவர் இந்த ஆண்டு அன்னையர் தினத்தின் சிறந்த தாயாக சமூக ஊடகங்களில் வாசகர்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

யார் இந்த ‘முத்து மாஸ்டர்’ என்கிற பேச்சியம்மாள்?

'முத்து மாஸ்டர்' வீடு எது என்று கேட்டால் அந்த ஊர் மக்கள் அடையாளம் காட்டுவது பேச்சியம்மாளின் வீட்டை. 57 வயதான பேச்சியம்மாள், வேட்டி, சட்டை உடுத்தி, கிராப் தலையுடன் ஆணாகவே காட்சியளிக்கிறார். 30 ஆண்டுகளாக இதே தோற்றத்தில் நடமாடும் இவர், பெண் என்று அந்த ஊரின் சில பெரியவர்களைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.

பேச்சி

பட உதவி: புதிய தலைமுறை

“எனக்கு 20 வயதில் கல்யாணம் முடிந்தது, 15 நாள்லயே அவர் மாரடைப்புல இறந்து போயிட்டாரு. வாழ்க்கையே வெறுத்துப் போய், என்ன செய்றதுன்னு திகைச்சு நின்னப்ப தான், நான் கர்ப்பமாக இருக்கிறது தெரிய வந்தது. மனச தேத்திக்கிட்டு அந்த சிசுவுக்காக வாழனும்னு முடிவு செஞ்சேன். சேலை கட்டிட்டு துறைமுகத்துக்கு வேலைக்குப் போனப்ப லாரி ஓட்டுனர் கைய பிடிச்சு இழுத்தாரு. என் மகளுக்காக வாழனும்னா பேச்சியம்மாள் முத்துவா மாறனும்னு முடிவு செஞ்சேன்.

”பொம்பளப் பிள்ளை பிறந்த கையோடு உறவினர்கள் கிட்ட குழந்தையை குடுத்துட்டு நேரா திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போய் மொட்டை போட்டுட்டு கைலி, பனியன், துண்டு வாங்கி உடுத்திக்கிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.” அப்போதில் இருந்தே இது என்னுடைய அடையாளமாக மாறிப் போனது என்கிறார் பேச்சியம்மாள்.

இயல்பாகவே என்னுடைய குரல் சற்று கரகரப்பான குரல் என்பதால் உடையை மாற்றிக் கொண்டதும் வேலைக்குச் சேர்ந்த இடத்தில் என்னைப் பற்றி தெரியாதவர்கள் பலர் என்னை ஆண் என்றே நினைத்துப் பழகினர். குரல் மேலும் கரகரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பீடி பிடிக்கத் தொடங்கினேன்.

டீக்கடை தொடங்கி, பரோட்டா கடை வரை வேலை பார்த்துவந்ததால் எல்லோரும் என்னை மாஸ்டர் என்றே கூப்பிட ஆரம்பித்ததால் அதுவே என்னுடைய அடையாளமாகிப் போனது என்கிறார் இவர்.

உருவ மாற்றம் எனக்கும் என்னுடைய மகளுக்கும் பாதுகாப்பை தந்தது. மேலும் பணி இடத்திலும் பயமின்றி இருக்க முடிந்தது. ஒரு நாள் இரவு 11 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது மது போதையில் தள்ளாடியபடி வந்த ஒருவர் என்னிடம் தீப்பெட்டி கேட்டு வாங்கி சிகரெட் பத்த வெச்சார். இதுவே நான் சேலை கட்டிட்டு நடுராத்திரியில வந்திருந்தா எனக்கு என்ன நடந்திருக்குமோ தெரியல. என்னுடன் வேலை பார்க்கிற பலருக்கும் நான் பெண் என்பது தெரியாது, நானும் அப்படி வெளிக்காட்டிக் கொள்ள மாட்டேன் என்கிறார் முத்து மாஸ்டர்.

எந்த மகளுக்காக ஆண்வேடம் தரித்தாரோ, அந்த மகளுக்கு கஷ்டப்பட்டு எந்த வேலையாக இருந்தாலும் சமைத்தல், பெயின்ட் அடித்தல் என்று தனக்குத் தெரிந்த எல்லா வேலைகளையும் செய்து மகளை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இப்போதும் 100 நாள் வேலை, மளிகைக்கடை, தேங்காய் கடை என கிடைக்கும் வேலைகளை செய்துவருகிறார் இவர்.

“மகள் என்ற உறவுக்காகவும், தனது சுயமரியாதைக்காகவும் தோற்றத்தையே மாற்றிக்கொண்டேன் இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கணவர் இறந்தபோது இறப்புச் சான்று வாங்கவில்லை, ஆதார் அட்டையிலும் முத்து என்ற ஆண் பெயரே இருப்பதால் விதவை நிதி உதவி, முதியோர் ஓய்வூதியத்தொகை எதுவும் கிடைக்கவில்லை. அரசின் நிதியுதவி கிடைத்தால், தள்ளாத வயதில் உதவியாக இருக்கும்,” என்கிறார் முத்துமாஸ்டர் என்ற பேச்சியம்மாள்.
paint pechi

அதே போல, ஆண் போன்ற தோற்றத்தில் இருப்பதால் அரசுப் பேருந்துகளிலும் தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கும் மகளிருக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற சலுகையும் தனக்கு கிடைக்கவில்லை என்கிறார் பேச்சியம்மாள்.

“பஸ்சில் போகும் போது ஆண்கள் சீட்டிலேயே உட்கார்ந்து கொள்வேன். ஏனென்றால் ஒரு முறை பெண்கள் இருக்கை பக்கமாக நின்ற போது ஒரு அம்மா மீது லேசாக உறசியதற்கு அவர் என்னை திட்ட ஆரம்பித்து விட்டார். இது என்னடா கொடுமை என்று மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன். வேற வழி இல்லை அந்த அம்மாகிட்ட நான் பெண் என்று சொல்ல முடியாததால அப்போது முதலே ஆண்கள் இருக்கையிலேயே அமரத் தொடங்கிவிட்டேன் என்று ஆதங்கப்படுகிறார் பேச்சியம்மாள்.

வாழும் போது மட்டுமல்ல இறந்த பின்னர் அடக்கம் செய்யும் போது கூட தனக்கு இதே உடை தான் போட வேண்டும் என்று மகளிடம் சொல்லி வைத்திருக்கிறார் பேச்சியம்மாள். இளம் வயதில் இந்த சமுதாயத்தின் பார்வையில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஆடைகளை மாற்றி தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு கம்பீரமாக வாழ்ந்து மகளை கரை சேர்த்தவர், தள்ளாத வயதில் ஆதரவுக்காக அரசின் உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

பட உதவி: புதிய தலைமுறை