‘திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி’ - வைரலாகும் ட்ரான்ஸ் ஜோடியின் கர்ப்பகால போட்டோஷூட்!
கேரளாவைச் சேர்ந்த சஹத்-ஜியா ஜோடி, இந்தியாவில் முதல் மூன்றாம் பாலினத் தம்பதி பெற்றோர் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். சமீபத்தில் இவர்கள் நடத்திய கர்ப்பகால போட்டோஷூட் லைக்குகளைக் குவித்து வருகிறது.
திருநங்கை, திருநம்பி... கடந்த காலங்களைவிட இப்போது மாற்று பாலினத்தவரின் மீதான பார்வை சமூகத்தில் நன்றாகவே மாறி வருகிறது. தங்களுக்கு எதிரான கண்ணுக்குத் தெரியாத தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து, சமூகத்தில் தங்களுக்கென தனி இடத்தைப் பிடித்து வருகின்றனர் இவர்கள்.
குடும்பங்கள் சேர்ந்ததுதானே சமூகம். அந்த வகையில், தங்களது வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, அடுத்த மாதம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து ’இந்தியாவின் முதல் மூன்றாம் பாலினப் பெற்றோர்’ என்ற பெருமையைப் பெற இருக்கின்றனர் கேரளாவைச் சேர்ந்த சஹத்-ஜியா ஜோடி.
பெற்றோர் ஆகப்போகும் மாற்று பாலின ஜோடி
கோழிக்கோடு உம்மலத்தூர் என்ற பகுதியை சேர்ந்தவர்கள், இந்த மூன்றாம் பாலினத் தம்பதிகளான சஹத்- ஜியா ஜோடி. பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவரான சஹத்தும், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவரான ஜியாவும் 2020ம் ஆண்டு கொரோனா அலை வீசிக் கொண்டிருந்தபோது, காதலில் விழுந்தனர். அதனைத் தொடர்ந்து, திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த மூன்று வருடங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் ஜியா ஒரு நடனக் கலைஞர் ஆவார். சஹத் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். மற்ற புதுமணத் தம்பதிகளைப் போலவே இவர்களுக்கும் குழந்தை ஆசை ஏற்பட, முதலில் தங்களுக்கான வாரிசை தத்தெடுக்க திட்டமிட்டனர். ஆனால், இருவருமே மூன்றாம் பாலினத்தவர் என்பதால், சட்டரீதியாக குழந்தையைத் தத்தெடுப்பதில் இவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
தாயாக மாறிய தந்தை
எனவே, தங்களது குழந்தையை தாங்களே பெற்றெடுப்பது என அவர்கள் முடிவு செய்தனர். மருத்துவரின் உதவியோடு, பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சஹத்தால், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் எனத் தெரிந்து கொண்டனர். ஏனெனில், பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட பெண் சம்பந்தப்பட்ட உள் உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது அவர்களுக்குள் புது நம்பிக்கையை விதைத்தது.
ஆனால், ஏற்கனவே பெண்ணாக இருந்து ஆணாக மாறியதில் பல சிக்கல்களைச் சந்தித்ததால், தன்னால் கர்ப்பமாக முடியுமா என்பதில் சஹத்திற்கு முதலில் தயக்கம் இருந்துள்ளது. இருப்பினும் தன் காதல் மனைவி ஜியாவை தாயாக்க வேண்டும் என்பதற்காகவே, தன் குழந்தையை அவர் வயிற்றில் சுமக்க முடிவெடுத்தார்.
சஹத்திற்கு வேறு எந்தவொரு உடல்நிலை பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அவருக்கு முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது. அதில், சஹத் முழு ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சிகிச்சைத் தொடங்கப்பட்டது.
ஜியாவின் விந்தணுவைப் பெற்று அதை சோதனைக் கூடத்தில் கருவாக வளர வைத்து சஹத்தின் கருப்பைக்குள் செலுத்தினர் மருத்துவர்கள். மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்ட சஹத், ஜியா மூலம் கருவுற்றார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் சஹத்திற்கு, அடுத்த மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்ப்பகால போட்டோஷூட்
இந்நிலையில், தனது மனைவி ஜியாவுடன் கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் சஹத். அதில், சட்டை அணிந்தபடி தன் 8 மாத கர்ப்பத்தைக் காட்டுவது போல், வயிறு தெரியும்படி ஜியாவுடன் அவர் போட்டோகளுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘தன்னால் குழந்தை பெற முடியாது என்பதால் சஹத் குழந்தை பெறுவதாகவும், குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பாலை வாங்கி குழந்தைக்கு தர முடிவு செய்திருப்பதாகவும்’ ஜியா கூறியுள்ளார்.
கூடவே, விரைவில் தாயாகப் போகும் தனது மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகப் பகிர்ந்துள்ளார் ஜியா. அதில்,
“நான் பிறப்பாலோ அல்லது என்னுடைய உடலமைப்பாலோ பெண்ணாக இல்லாவிட்டாலும், ‘அம்மா' என ஒரு குழந்தை அழைக்க வேண்டும் என்ற பெண்மைக்கே உண்டான கனவு எனக்குள் இருந்தது. நாங்கள் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. எனக்கு எப்படி அம்மாவாக வேண்டும் என்ற கனவு இருக்கிறதோ, அதேபோன்று சஹத்திற்கும் அப்பாவாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இப்போது, அவருடைய வயிற்றில் எட்டு மாத உயிர் அவருடைய முழு ஒப்புதலுடன் அசைந்துகொண்டிருக்கிறது," என நெகிழ்ச்சியுடன் அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘தங்களுக்குத் தெரிந்தவரை இந்தியாவிலேயே திருநம்பி ஒருவர் கர்ப்பமடைந்திருப்பது இதுவே முதன்முறை’ என்றும் அப்பதிவில் ஜியா குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பமாக இருப்பதால், ஹார்மோன் சிகிச்சையை இருவருமே நிறுத்தி வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தங்களது சிகிச்சையைத் தொடர இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
எப்போது திருமணம்?
தங்களது கர்ப்ப கால புகைப்படங்கள் வைரலானது குறித்து சஹத் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில்,
“இந்தப் புகைப்படங்களை எங்களுக்காகத்தான் எடுத்தோம். ஆனால், இவ்வளவு வரவேற்பும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நெகட்டிவ் கமெண்ட்டுகளும் வரத்தான் செய்கிறது. ஆனால், அதையும் பாசிட்டிவாகவே பார்க்கிறோம்.”
குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என இப்போதே தயாராகி வருகிறோம். அதன் பாலினத்தை அக்குழந்தையே தீர்மானிக்கட்டும். குழந்தையை நல்ல மனிதனாக வளர்த்து முன்னேற்றுவோம். அறுவைசிகிச்சை மூலம்தான் எனக்குப் பிரசவம் நடக்கும். பின்னர் கர்ப்பப்பையை அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ள உள்ளோம், எனத் தெரிவித்துள்ளார்.
தங்களது குழந்தைக்கு ஒரு வயது ஆன பிறகே இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளனராம்.
“எப்போது குழந்தை பிறக்கும் என என்னைப் போலவே ஜியாவும் ஆர்வமாக இருக்கிறார். இந்தக் குழந்தைக்கு நான் அப்பா, ஜியா அம்மா. எங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தானம் அளிக்க பெண் ஒருவர் முன்வந்துள்ளார். மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டதில் எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி,” என்கிறார் சஹத்.
இதன் மூலம் இந்தியாவில் குழந்தையை பெற்றெடுக்கும் முதல் மூன்றாம் பாலின தம்பதி என்ற பெருமையை சஹத்-ஜியா ஜோடி பெற்றுள்ளனர். விரைவில் பெற்றோராகப் போகும் இந்த ஜோடிக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.