2 மினிட்சில் ஃப்ளைட்டில் எடுக்கப்பட்ட வெட்டிங் போட்டோஷூட்!
புதுமண தம்பதிகள் கல்யாண ஆடையில் அதே சந்தோஷத்தில் மணமாலை அணிந்தபடி விமானத்தின் உள்ளும், வெளியும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல் ஆனது.
திருமணத்திற்குத் தயாராகி வரும் இன்றைய தோழர்களும், தோழிகளும், திருமணத்தின் முக்கிய சடங்குகளை காட்டிலும் திருமண வீடியோ ஆல்பத்தை உருவாக்குவதிலே எக்கச்சக்கமாய் மெனக்கெடுகின்றனர். அதற்காக போட்டோகிராபர்களும் அன்னத்தண்ணி பற்றிய கவலையின்றி மணமக்களின் மகிழ்ச்சியான தருணங்களுக்காக காத்திருந்து கேமிரா கண்களால் காலத்தை உறைய வைக்கின்றனர். அப்படி சமீபத்தில் சேட்டன் தேசத்தில் விமானத்தில் எடுக்கப்பட்ட மணமக்களது போட்டோஷூட் ஒன்று கேரளா பார்டர் தாண்டி தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் கொள்ளைக் கொண்டது.
கல்யாண ஆடையில் அதே சந்தோஷத்தில் மணமாலை அணிந்தபடி விமானத்தின் உள்ளும், வெளியும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடந்த வாரம் சோஷியல் மீடியாக்களை ஆக்கிரமித்து நெட்டிசன்களை ‘வாவ்’ சொல்ல வைத்தது. அந்த ‘கேரள திருமண போட்டோஷூட்டின்’ கதாநாயகன் லால் கிருஷ்ணாயும் கதாநாயகி ஷ்ருதியும் ஆயுர்வேத மருத்துவர்கள்.
தம்பதிகளுக்கு அவர்களது திருமண புகைப்படங்கள் தனியே தன்னந்தனியே என இருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாமில்லை. அவர்களது வாழ்க்கையின் வெகு முக்கிய நிகழ்வினை எக்காலத்திற்குமான பொக்கிஷமாக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்.
“ஃப்ளைட்டில் போட்டோ எடுத்தது தற்செயலாக நடந்த ஒன்றே. செப்டம்பர் 1ம் தேதி மணமகளின் சொந்த ஊரான கண்ணூரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு நாங்கள் இருவரும் அங்கிருந்து கிட்டத்தட்ட 500 கி.மீ தூரத்தில் உள்ள எங்க சொந்த ஊருக்கு செல்ல வேண்டும். எனவே கண்ணூரிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டோம். ஒரு வாய்ப்பு கிடைத்தால் விமான நிலையத்திலிருந்து சில புகைப்படங்களையும் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் போட்டேகிராபர்களுக்கும் விமான டிக்கெட்டுகளை எடுத்தோம். ஃப்ளைட்டில் போட்டோ எடுக்கலாம் என்பது எங்க போட்டோகிராபரின் ஐடியா.
இந்த போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. திருமணம் முடிந்து ஃப்ளைட்டில் செல்லும்போது சில நிமிடங்களில் நாலஞ்சு போட்டோ எடுத்தோம். அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்த பிறகு, ஏகப்பட்ட போன் கால்ஸ் எனக்கு.
நிறைய பேரு வாழ்த்தினாங்க. ஏர்போர்டுக்கு கல்யாண டிரசிலே போனதால பார்க்குற அத்தனை பேரும் வாழ்த்தினாங்க. ஃப்ளைட்டில் ஏறிய பிறகு விமான பணியாளர்கள், பயணிகள், ஏன் கேப்டன் மைக்ல வாழ்த்தை தெரிவித்தார்.
ரொம்ப சந்தோஷம் எங்களுக்கு. அவங்க எங்களுக்கு அனைத்து உணவுகளையும் இலவசமாக வழங்கினர். இண்டிகோ ஊழியர்களும் கேபின் குழுவினரும் ரொம்ப அருமையா நடந்து கொண்டனர். உண்மையில் அவர்கள் எங்கள் நாளை மறக்கமுடியாத ஒன்றாக ஆக்கியுள்ளனர்,” என்று மகிழ்வுடன் தெரிவித்தார் புதுமாப்பிள்ளை.
உலகம் முழுவதுமே, வேறு லெவலில் சிந்தித்தோ, கட்டவிரல் தேய கூகுள் கடலில் தேடியோ வித்தியாச தீமில் திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் எடுப்பது சமீபத்திய டிரெண்ட். பல ஆண்டுகளாக கேரளாவில் எடுக்கப்பட்டு வந்த திருமண புகைப்படம் எடுக்கும் விதத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
திருமணத்திற்குப் பின் எடுக்கப்படும் போட்டோஷூட்டை அதிக எண்ணிக்கையிலான கேரள மணமக்கள் விரும்புவதற்கான காரணம், பிரம்மாண்டமும், பேரழகும் உடைய மலைகள் சூழ இயற்கையின் ஒட்டுமொத்த அழகினையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் மாநிலத்தின் வியத்தகு நிலப்பரப்பே.
லால் மற்றும் ஷ்ருதியின் திருமண தேதி அறிவிப்பு வீடியோவையும் மாநிலத்தின் பிரபலமான திருவிழாவான ‘திரிசூர் பூரம்’-லிருந்து நேரடியாக ஷூட் செய்துள்ளனர். அந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகியது.
இவை அனைத்திற்கும் காரணகர்த்தாவாக லால் கையை காட்டுவது எண்ணங்களுக்கு ஏற்றபடி படம் பிடித்து, மகிழ்ச்சியில் திளைக்கும் தம்பதிகளுக்கு கூடுதல் மகிழ்வை அளிக்கும் ‘மோஷன் பிக்சர்ஸ் வெட்டிங் பிளானர்ஸ்’-ன் இயக்குனரும், முதன்மை போட்டோகிராபருமான அம்பு ரமேஷ். ஆம், லால்-ஷ்ருதியின் திருமணம் உட்பட அனைத்து போட்டோஷூட்களையும் நடத்தியது அவரே.
“கல்யாணம் முடிந்தவுடன் புதுப்பொண்ணை அழைத்து கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வது வழக்கம். மாப்பிள்ளையின் வீட்டிற்கும், மணப்பெண்ணின் வீட்டிற்கும் இடையே அதிக தூரம். 10 மணிநேரம் டிராவல் செய்ய வேண்டும் என்பதால், திருமணம் முடிந்த மறுநாள் ஃப்ளைட் டிக்கெட் புக் செய்திருந்தனர்.
கல்யாண ஆடையிலே செல்வதால் ஒருவேளை ஃப்ளைட்டுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்தால் போட்டோ எடுக்கலாம் என்ற ஐடியாவில் தான் சென்றோம். ஆனால், நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அது வெறும் 2 மினிட்சில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். கொச்சினில் ஃப்ளைட் லேண்ட்டாகிய பின், பயணிகள் எல்லோரும் இறங்கிய அப்புறம் 2 போட்டோ எடுத்தோம். ஆனால், அந்த போட்டோ எடுக்கும் போதே அந்த போட்டோஸ் மக்களை சென்றடையும்னு நம்பிக்கை இருந்தது.
ஏன்னா, மக்கள் அவ்வளவு எதிர்பாக்குறாங்க. புதுபுது ஐடியாக்களை அவர்களே நிறையா யோசிக்கிறாங்க, வெரைட்டீஸ் எதிர்பார்க்குறாங்க. சோ, அவங்க எதிர்பார்ப்புக்கும் மீறி நாம போட்டோ எடுக்க வேண்டும்.
அதிலும் கேரளாவில் போட்டோகிராபர்கள் மத்தியில் பயங்கர காம்படீஷன் இருக்கு. எத்தனை போட்டோ, எப்படி எடுக்குறோம் என்பதை விட மணமக்களுக்கு எப்பவும் பார்த்து ரசிக்கிற போட்டோவை எடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம்,” என்றார் போட்டோகிராபர் அம்பு ரமேஷ்.
திருமணத்துக்கு முன்பு ஒரு போட்டோஷூட், திருமணத்துக்குப் பிறகு ஒரு போட்டோஷூட், வெட்டிங் வீடியோ டீஸர், ட்ரெய்லர், சாங் வீடியோ என்று திருமணத்தை சினிமாக்களுக்கு இணையாக எண்ணுகின்றனர் இன்றைய தலைமுறையினர்.
தென்னிந்தியாவில் பெரும்பாலான மணமக்கள் அவர்களது டீரிம் போட்டோஷூட்டை நிகழ்த்த தேர்ந்தெடுக்கும் ரொமான்டிக் இடம் என்றால் அது கேரளம். “அனைவருக்கும் புதிய மற்றும் வித்தியாசமான இடங்களில் போட்டோஷூட் நடத்த விருப்பப் படுகின்றனர். மற்றவர்கள் செய்ததை நகலெடுக்க யாரும் விரும்புவதில்லை. உண்மையில், போட்டோஷூட் எடுக்க கேரளாவில் இன்னும் பல நல்ல இடங்கள் உள்ளன. ஆனால் அவை இன்னும் பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்,” என்று கூறிய லால் கிருஷ்ணாவிடம் வாழ்த்துகள் தெரிவித்து முடித்து கொண்டோம்.