'எதிர்காலத்தில் எந்த சிக்கலும் வரக்கூடாது' - டிவிஎஸ் குடும்ப உறுப்பினர்கள் MOU-யில் கையெழுத்து!
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் எமரிட்டஸ் வேணு சீனிவாசனின் குடும்ப உறுப்பினர்கள் போட்டி மற்றும் டி.வி.எஸ் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் எமரிட்டஸ் வேணு சீனிவாசனின் குடும்ப உறுப்பினர்கள் போட்டி மற்றும் டி.வி.எஸ் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
TAFE - டிராக்டர்ஸ் அன்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மல்லிகா சீனிவாசன், TVS மோட்டார் நிறுவனத்தின் இயக்குநரும், TAFE மோட்டார்ஸ் மற்றும் டிராக்டர்ஸ் லிமிடெட் துணை நிர்வாக இயக்குனருமான Dr.லட்சுமி வேணு, மற்றும் TVS மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு ஆகியோரும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
லக்ஷ்மி வேணு மற்றும் சுதர்சன் வேணு ஆகியோர் வேணு மற்றும் மல்லிகா சீனிவாசனின் வாரிசுகள் ஆவார்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், சுதர்சன் வேணு, அலுமினியம் மற்றும் மெக்னீசியம் டை காஸ்டிங் அல்லது OEMகளுக்கான இயந்திர வார்ப்புகள் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் வழங்கல் உள்ளிட்ட சில வணிகங்கள் தொடர்பாக TVS உள்ளிட்ட சில வர்த்தக லோகோக்களை அவரும் அவரது கீழ் உள்ள நபர்களும் பயன்படுத்த மாட்டார்கள் என ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ள காலம் வரை, டிராக்டர்கள் உள்ளிட்ட விவசாய இயந்திரங்கள் மற்றும் சுயமாக இயக்கப்படும் பண்ணை உபகரணங்களின் வணிகத்திலும் போட்டியிட மாட்டோம் என உறுதியளித்துள்ளார்.
மறுபுறம், மல்லிகா சீனிவாசனும், டாக்டர் லக்ஷ்மி வேணுவும்,
"TVS தொடர்பான வணிக முத்திரைகளை இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், நிதிச் சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் வணிகம் உள்ளிட்ட வர்த்தகத்தில் தாங்களும் அவர்களால் கட்டுப்படுத்தப்படும் நபர்களும் பயன்படுத்த மாட்டோம்,” என ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், சுதர்சன் வேணுவைப் போலவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள சில காலத்திற்கு, இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், அத்தகைய வாகனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட வணிகங்களில் ஈடுபட மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறுவனத்தின் வணிகத்தை எந்த வகையிலும் பாதிக்காது என TVS நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வேணு சீனிவாசன் நிறுவனத்தின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், டிசம்பர் 10, 2020 தேதியிட்ட குடும்ப ஒப்பந்த, அதாவது, மெமோராண்டம் ஆஃப் ஃபேமிலி அக்ரிமென்ட்டின் (எம்.எஃப்.ஏ) அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களிடையே குடும்ப தீர்வைச் செய்ததைத் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிவிஎஸ் குடும்ப உறுப்பினர்களிடையே எட்டப்பட்ட வாய்வழி புரிதல் மற்றும் அவர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நபர்களிடையே நிறைவேற்றப்பட்ட பிற ஒப்பந்தங்களையும் பதிவு செய்துள்ளது.
மெமோராண்டம் ஆஃப் ஃபேமிலி அக்ரிமென்ட் மூலமாக டிவிஎஸ் பிராண்ட்டின் பயன்பாடு உள்ளிட்டவற்றில் வேணு சீனிவாசன், மல்லிகா சீனிவாசன், டாக்டர் லக்ஷ்மி வேணு மற்றும் சுதர்சன் வேணு ஆகியோரும் தங்களுக்குள் ஒரு புரிதலுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான வணிகங்களைக் கொண்ட மிகப்பெரிய குழுமத்தை வாரிசுகள் வழிநடத்தும் போது டிரேட் மார்க், லோகோ போன்ற விஷயங்களில் சர்ச்சைகள் வருவது இயல்பானது. இதனை தடுக்கும் விதமாகவே டிவிஎஸ் குழுமம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.