டிவிட்டர் சி.இ.ஓ பதவியில் இருந்து பராக் அக்ரவால் நீக்கப்பட்டால் $42 மில்லியன் இழப்பீடு கிடைக்கும்!
டிவிட்டர் நிறுவனத்தை வாங்க உள்ள எலான் மஸ்க், டிவிட்டர் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ள நிலையில், சி.இ.ஓ பாரக் அகர்வாலுக்கு ஜேக் டோர்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் சி.இ.ஓவாக பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டு ஐந்து மாதங்களே ஆகும் நிலையில், நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் வாய்ப்பு உள்ளதால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும், நல்ல செய்தி என்னவெனில், பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டால் அவருக்கு 42 மில்லியன் டாலர் இழப்பீடு தொகை கிடைக்கும்.
டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிக் கொள்ளும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் கோரிக்கை இன்று ஏற்கப்பட்ட நிலையில், அண்மையில் அவர் டிவிட்டர் நிர்வாகக் குழு பற்றி விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஏப்ரல் 14ம் தேதி, எஸ்.இ.சி அமைப்பிடம் தாக்கல் செய்த தகவலில், டிவிட்டர் நிர்வாகத்தில் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், 12 மாதங்களுக்குள் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவர் 42 மில்லியன் டாலர் இழப்பீடு பெறுவார் என ஈக்விலர் தெரிவிக்கிறது. அக்ரவாலின் ஆண்டு ஊதியம் மற்றும் நிறுவனத்தில் அவரது பங்கு ஆகியவை அடிப்படையில் இந்தத் தொகை அமைகிறது.
அக்ரவால் நிறுவனத்தின் சி.டி.ஓவாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சி.இ.ஓவாக உயர்த்தப்பட்டார். அப்போது அவருக்கான இழப்பீடு 30.4 மில்லியன் டாலராக இருந்தது, இவற்றில் பெரும்பகுதி பங்குகளாகும்.
டிவிட்டரின் புதிய உரிமையாளர் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தாலும், முன்னாள் சி.இ.ஓ ஜேக் டோர்சி அவரை ஆதரித்துள்ளார். மிகவும் நம்பகமான மற்றும் பரவலாக உள்ளடக்கிய மேடையை உருவாக்குவதில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்பது இருவருக்கும் பொதுவான அம்சம் என்று டோர்சி கூறியுள்ளார்.
ஊழியர்களுடனான கூட்டத்தில் எதிர்காலம் பற்றி தெளிவில்லை என்றாலும் ஆட்குறைப்பு திட்டம் இல்லை என அகர்வால் கூறியிருந்தார்.
ஆங்கிலத்தில்: தாருதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்