காஷ்மீரில் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் அதிகாரிகள்!
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செயப்பட்டு, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது நாம் அறிந்ததே. இன்றும் காஷ்மீரில் பதட்டமான சூழல் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டதோடு பாதுகாப்பிற்கு பல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பல அதிகாரிகளுக்கு நடுவில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் இருவர் மட்டுமே; அவர்கள் டாக்டர் சையத் செஹ்ரிஷ் அஸ்கர் மற்றும் பி.கே.நித்யா.
கடந்த சில நாட்களாக ஸ்ரீநகரில் பணியில் இருக்கும் இவர்கள், அங்கு எழும் பிரச்சனைகளை சீர் செய்து, வெளியுலகத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நடப்பவைகளை அங்கு வசிப்பவர்களுக்கு தெரிவித்தும் வருகின்றனர்.
காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கு 4 நாள் முன்புதான் காஷ்மீரின் ஸ்ரீநகரில் தகவல் இயக்குனராக நியமிக்கபட்டார் டாக்டர் சையத் செஹ்ரிஷ் அஸ்கர் ஐஏஎஸ். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அங்கு இருப்பவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடன் தொடர்புக்கொள்ளவும், அவசரத்திற்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை அணுகவும் உதவி செய்து வருகிறார்
ஒரு வயது குழந்தைக்குத் தாயான இவர் ஜம்முவில் மருத்துவராக பணியாற்றிவந்தார், அதன்பின் UPSC தேர்வு எழுதி 2013ல் ஐஏஎஸ் ஆனார். இது குறித்து ABP செய்திக்கு பேட்டியளித்த அஸ்கர்,
“பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தான் நான் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என முடிவு செய்தேன். நான் எந்த பதவியில் இருந்தாலும் பெண்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று மிகவும் கடினமாக உழைப்பேன். என்னை போல் அவர்களும் வளர்ந்து சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும்.”
இவரது கணவரும் புல்வாமா மாவட்டத்தின் ஆணையராக பதவியேற்றுள்ளார். இவருடன் ஐபிஎஸ் அதிகாரி பிகே நித்யா ஸ்ரீநகரில் உள்ள ராம் முன்ஷி பாக் மற்றும் ஹர்வன் தச்சி கிராமங்கள் இடைய மேல்பார்வை பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார். நித்யா மேல்பார்வை காணும் 40 கி.மீ நீளம் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் தான் ஏரி பகுதி, ஆளுநரின் குடியிருப்பு மற்றும் வி.ஐ.பி.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதிகள் உள்ளது.
இப்பொழுது ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் நித்யா சத்திஸ்கரை சேர்ந்தவர், பி டெக் பட்டப்படிப்பை முடித்த இவர் 2016 ஐபிஎஸ் அதிகாரியாக பதவியேற்றுள்ளார்.
“மக்களை பாதுகாப்பதோடு VVIP க்களை மேல் பார்வை பார்ப்பதும் சவாலாக உள்ளது. சத்திஸ்கரில் நான் இருந்த அமைதியான வாழ்கையில் இருந்து இது மாறுபட்டுள்ளது. இருப்பினும் எனக்கு சவால்கள் பிடிக்கும்,” என்கிறார் 28 வயதான நித்யா.
இவர்களை தவிர்த்து மற்ற பெண் அதிகாரிகள் ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.