#100Unicorns | 'யுனிக்' கதை 13 - ReNew Power - 'என் வழி; தனி வழி...!' அரசியல் பற்றாமல் பிசினசில் சக்சஸ் ஆன சுமந்த் சின்ஹா!
இதுவரை நாம் பார்த்த யூனிகார்ன் ஸ்டார்ட்-அப்கள் பெரும்பாலும் இணையத்தை சார்ந்து அல்லது நிதியை சார்ந்தாகவே இருந்தன. ஆனால், இன்றைய யூனிகார்ன் அத்தியாயம், இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இன்னும் சொல்வதென்றால், உலகம் இப்போது உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் ஒரு துறையில் சாதித்த ஒரு நிறுவனத்தின் கதை இது.
#100Unicorns | 'யுனிக் கதை 13 |
இதுவரை நாம் பார்த்த யூனிகார்ன் ஸ்டார்ட்-அப்கள் பெரும்பாலும் இணையத்தை சார்ந்து அல்லது நிதியை சார்ந்தாகவே இருந்தன. ஆனால், இன்றைய யூனிகார்ன் அத்தியாயம், இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இன்னும் சொல்வதென்றால், உலகம் இப்போது உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் ஒரு துறையில் சாதித்த ஒரு நிறுவனத்தின் கதையே இந்த யூனிகார்ன் பார்வை.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) அல்லது பசுமை ஆற்றல் துறையில் இந்தியாவின் முதல் யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற ‘ரீநியூ பவர்’ (ReNew Power) நிறுவனம்தான் அது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவி வெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றலே. தற்போதைய காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப உலகிற்கு மிக அவசியமாகும் ஆற்றலும் இதுவே.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த ஆற்றல் உற்பத்தியில் தீவிரம் காட்டிவர, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதில் ஆதிக்கம் செலுத்திவருகிறது ReNew Power.
2011-ல் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்டு இன்று இந்தியாவின் முன்னணி பசுமை ஆற்றல் நிறுவனமாக ReNew Power நிறுவனம் வளர்ந்துள்ளது என்றால், அதன் பின்புலத்தில் இருப்பது முழுக்க முழுக்க சுமந்த் சின்ஹா என்ற ஒற்றை நபர்தான்.
வங்கியாளர் டு யூனிகார்ன் நிறுவனர்
சுமந்த் சின்ஹா பெயரில் இருக்கும் சின்ஹா இந்தியர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட பரிச்சயமான பெயர். ஆம், இருமுறை இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்து சமீபத்தில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவின் இரண்டாவது மகனே இந்த சுமந்த். இவரின் குடும்பமே பாரம்பரிய அரசியல் குடும்பம். தந்தை முன்னாள் நிதி அமைச்சர் என்றால், அண்ணன் ஜெயந்த் சின்ஹாவும் நிதித் துறை, விமானத் துறையில் அமைச்சராக இருந்தவர்.
சுமந்திற்கு தந்தையை போல அரசியலில் காலூன்ற வேண்டும் என்ற ஆசை இல்லை. ஆனால், அவரைப்போல ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த கனவுடன் பள்ளிப் படிப்பை முடித்த அவர், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் படிப்பில் சேர்ந்தார். இங்கு படித்த ஏரளாமானோர்கள் அரசு அதிகாரிகளாக சென்றுள்ளதால் அதே கனவுடன் இருந்த சுமந்த்தும் அதே கல்லூரியைத் தேர்வு செய்தார். இவரின் கனவு இப்படியாக இருந்தாலும், விதி அவருக்கு வேறு ஒன்றை தேர்வு செய்திருந்ததுபோல.
1983-இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த வேலைநிறுத்தம் காரணமாக அதன்கீழ் இருந்த செயின்ட் ஸ்டீபன் கல்லூரி திறப்பதற்கு மாதங்கள் பல தாமதம் ஆனது. இந்த சமயத்தில் டெல்லியில் ஐஐடி புதிதாக தொடங்கப்பட, அது எப்படி இருக்கிறது என்பதை பார்க்கச் சென்ற சுமந்த் அங்கேயே சேர்ந்தும் விடுகிறார். பொருளாதாரம் படிக்கச் சென்றவர் சிவில் இன்ஜினியரிங் சேர்கிறார்.
பொருளாதாரத்திற்குப் பதிலாக சிவில் இன்ஜினியரிங் படிக்கும் அந்த முடிவு, அடுத்த மூன்று தசாப்தங்களில் வணிகங்கள் மற்றும் கண்டங்களை தாண்டிய ஒரு தொழில்முறை வாழ்க்கையை அவருக்கு கொடுக்கும் நினைக்கவில்லை. ஆனால், அது நடந்தது.
ஐஐடி-க்கு பிறகு ஐஐஎம்-கொல்கத்தாவில் தொழில் நிர்வாகம் முடித்துவிட்டு டாடா குழுமத்தில் இணைந்தார். அங்கிருந்து அவர் சர்வதேச விவகாரங்களில் முதுகலைப் படிப்பிற்காக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம். பின்னர், அமெரிக்காவின் பொருளாதார தலைநகராக சொல்லப்படும் வால் ஸ்ட்ரீட்டின் முக்கிய வங்கிகளில் பணி. முதலில் சிட்டி பேங்கிலும், பின்னர் ஐஎன்ஜி பேரிங்ஸிலும், அமெரிக்கா மற்றும் லண்டன் என மாறிமாறி பணியாற்றினார்.
2002ல் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்தியா திரும்பினார். அல்ட்ராடெக் சிமென்ட், ஐடியா செல்லுலார் மற்றும் நோவெலிஸ் என ஆதித்யா பிர்லா குழுமம் முதலீடுகளை குவித்தது. அவற்றின் லட்சியமும் பெரியதாக இருந்தது. அந்த லட்சியத்தின் ஒருபகுதியாக செயல்பட்ட வந்த சுமந்த், 2007ல் ஆதித்யா பிர்லா ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
இந்தப் பதவி உயர்வு பெற்ற சில மாதங்களில் அவரின் வாழ்க்கையை மாற்றிய அந்த அழைப்பு வந்தது. இம்முறை, இந்திய காற்றாலை மின் உற்பத்தி சந்தை மூலதனத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்புக்கொண்ட நிறுவனமாக இருந்த சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து வந்தது. ஆதித்யா பிர்லா குழுமத்தில் சேர்ந்தபோது கிடைத்த அதே தலைமை நிதி அதிகாரி பதவியே இங்கும். இதற்காக சுஸ்லான் நிறுவனர் மற்றும் தலைவர் துளசி தன்டியை சந்தித்தார் சுமந்த்.
அப்போது துளசி தன்டி இந்தியாவின் 10-வது பணக்காரர். அவரின் மதிப்பு 10 பில்லியன் டாலர். அவருடனான சந்திப்பு மற்றும் உரையாடல் சுமந்த்தின் சிந்தனையையும் பார்வையையும், ஏன் அவர் தேடிச் சென்ற பதவியையும் மாற்றியது. CFO பதவிக்குச் சென்றவர், சுஸ்லான் நிறுவனத்தின் 2வது உயர்ந்த பதவியான COO ஆக உயர்ந்தார்.
பதவி உயர்ந்த நேரத்தில் சிக்கலும் வந்தது. அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனமான லெஹ்மன் பிரதர்ஸ் திவால் நிலைக்கு செல்ல, உலகளாவிய நிதி நெருக்கடி தொடங்கியது. இந்த நெருக்கடி சூறாவளியில் சுஸ்லான் எனர்ஜியும் தப்பவில்லை. அங்கிருந்து செல்ல வேண்டிய நேரம் இது என்று சின்ஹா எண்ணினார், வெளியேறினார்.
ReNew Power உதயம்
"புரிதல் இல்லாமலேயே இந்தத் துறைக்குள் பலரும் நுழையும்போது, நம்மால் ஏன் தடம் பதிக்க முடியாது என்று உணர்ந்தேன்!"
- சுமந்த் சின்ஹா
அது 2010 காலகட்டம். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறை மெல்ல உருமாறியது. எந்த அனுபவமும் இல்லாத பலர் இத்துறையில் கால்பதித்துக் கொண்டிருந்தனர். அதற்குக் காரணம், அரசு அளித்த ஊக்கமும், மானியமும். காற்றாலை மின்சாரம் உற்பத்தியாளர்களுக்கு ஒவ்வொரு யூனிட்டிற்கும் 0.5 ரூபாய் கூடுதல் வழங்கின அரசுகள். இது சின்ஹாவை யோசிக்க வைத்தது.
மேலும், இந்தத் துறையை உண்மையில் புரிந்து கொள்ளாத பலர் அனைவரும் உள்ளே நுழைகிறார்கள் என்றால், இந்தத் துறையில் இத்தனை ஆண்டுகால அனுபவம் நிதித்துறையில் பின்புலம் கொண்ட அவரால் ஏன் சாதிக்க முடியாது என்ற எண்ணம் அவரை துரத்தியது. அந்த எண்ணத்தின் விளைவாக 2010ன் இறுதியில் ReNew Power Ventures உதயமானது.
சின்ஹா தனது சொந்தப் பணத்தைக் கொண்டு ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கினார். என்றாலும் தனக்கு கீழ் ஒரு குழுவை உருவாக்கி நிதி திரட்ட ஆரம்பித்தார். மிகவும் ஆரம்ப நிலையில் இருந்த அவர்களுக்கு யாரும் நிதிக்கொடுக்க முன்வரவில்லை. முன்னாள் வங்கியாளரான சுமந்த் விடாமல் தனது நெட்வொர்க்கை கொண்டு நிதிதிரட்டலில் தீவிரம்காட்டினார்.
கோல்ட்மேன் சாக்ஸ் இந்தியாவில் ஆரம்ப கட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தளங்களுக்கு ஆதரவளிக்க இருப்பதை அறிந்துகொண்டு, அமெரிக்கா விரைந்தார். அவரிடம் தெளிவான எதிர்காலத் திட்டங்கள் இருந்தன. அடுத்த ஐந்தாண்டுகளில் 900 மெகாவாட் அளவை எட்ட தேவையான திட்டங்களை கோல்ட்மேன் சாக்ஸிடம் முன்வைத்தவர், 200 மில்லியன் டாலர் முதலீட்டு ஒப்பந்தத்துடன் இந்தியா திரும்பினார்.
செப்டம்பர் 26, 2011 அன்று, ReNew Power கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்திடமிருந்து 1,000 கோடி ரூபாய் வரையிலான பங்கு முதலீட்டைப் பெற்றதாக அறிவித்தது. இது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் மிகப்பெரிய முதலீடாக அறியப்பட்டது. இவ்வளவு பெரிய முதலீடு கையில் இருந்த தைரியத்தில் சுமந்த் தனது எதிர்கால திட்டங்களை நோக்கி தீர்க்கமாக அடியெடுத்துவைத்தார்.
“ஒரு தொழில்முனைவருக்கு எந்த நேரமும் சிறந்த தருணமே!” - சுமந்த் சின்ஹா
முதல் ப்ராஜெக்ட் குஜராத்தின் ஜஸ்தானில் 25.2 மெகாவாட் காற்றாலை பண்ணை. ஒரு சில பிரச்சனைகள் இதில் வந்தாலும் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி, மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கியவதுவத்தை அறிந்து அந்த சிக்கல்களை தீர்த்துவைத்தார். விரைவில் காற்றாலை வணிகம் சூடுபிடித்தது.
அடுத்ததாக, சூரிய மின் உற்பத்தி. 2014-ல் மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் 57.6 மெகாவாட் திட்டமாக சூரிய மின் உற்பத்தி மையம் ரீநியூ பவர் சார்பில் அமைக்கப்பட்டது. சீராக, அனைத்தும் நடக்க 2015ல் ரீநியூ பவர் 500 மெகாவாட் திறனைத் தாண்டியது. 2016ல், அது 1,000 மெகாவாட்டாக இரட்டிப்பாகியது. தற்போது 2 ஜிகாவாட் (1,500 மெகாவாட் காற்று மற்றும் 800 மெகாவாட் சோலார்) திறனை தாண்டி உற்பத்தி செய்து இந்தியாவின் புதுப்பிக்க ஆற்றல் துறையில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. இன்றளவும் இதுதொடர்கிறது.
2017ல் இந்தியாவின் 13வது யூனிகார்ன் நிறுவனமாகவும், இந்தியாவின் முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் யூனிகார்னாகவும் புதிய உச்சத்தைத் தொட்ட இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 2 பில்லியன் டாலருக்கும் அதிகம். 2011 முதல் இப்போது வரை பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து 850 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி திரட்டியது. இதில் ஆரம்பகால கோல்ட்மேன் சாக்ஸ் முதலீடு மட்டுமே 250 மில்லியன் டாலர் ஆகும்.
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் ரீநியூ பவர் இரண்டு நாள்களுக்கு முன்னதாகக்கூட அடுத்த இரண்டு ஆண்டுகளில் பசுமை ஆற்றல் துறையில் மேலும் 30,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது சுமந்த் சின்ஹாவின் முயற்சிக்கு கிடைத்துள்ள மற்றொரு வெற்றியே.
தனது குடும்பம் அதிகாரம் மிகுந்த அரசியல் பாரம்பரியம் கொண்டது என்றாலும், ’தன் வழி தனி வழி’ என தனக்கான பாதையை தானே அமைத்துக் கொண்டவர் சுமந்த் சின்ஹா. குடும்பப் பின்புலம் மீது ஈடுபாடு கொள்ளாமல் கடின உழைப்பையே தனது மூலதனமாகக் கொண்டவராகவே திகழ்கிறார். இது அவரது மேற்கோள் ஒன்றிலிருந்தே எளிதில் வெளிப்படுகிறது.
“எனக்கு பரம்பரை மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. என் பாதையை நானே உருவாக்க விரும்புகிறேன். யாருடையை பாதச் சுவடுகளையும் நான் பின்பற்ற விரும்பவில்லை!”
கட்டுரை உதவி: ஜெய்
#100Unicorns | 'யுனிக்' கதை 12 - MakeMyTrip: வெற்றிக் கதையைத் தாண்டி பாடம் சொல்லும் தீப் கால்ராவின் கதை!