#100Unicorns | 'யுனிக்' கதை 12 - MakeMyTrip: வெற்றிக் கதையைத் தாண்டி பாடம் சொல்லும் தீப் கால்ராவின் கதை!
#100Unicorns | 'யுனிக் கதை 12 |
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக இந்தியர்கள் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களில் ஒருவரின் பங்களிப்பு நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என்றால், அது தீப் கால்ராவைத் தவிர வேறு யாருமல்ல. இப்போது நம்மில் ஒருவர், சுற்றுலா செல்லவோ, வெளி இடங்களுக்குச் செல்லவோ திட்டமிட்டால் அதற்கு உதவுவது ஆன்லைன் டிராவல் வெப்சைட்களே.
அப்படியான ஆன்லைன் டிராவல் தளங்களுக்கு முன்னோடியும், இந்தியர்களின் பயணங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘மேக் மை ட்ரிப்’ (MakeMyTrip) தளத்தின் நிறுவனர்தான் தீப் கால்ரா.
இன்றைய யூனிகார்ன் பார்வை, மிகப்பெரிய இந்திய ஆன்லைன் டிராவல் புக்கிங் தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் மேக் மை ட்ரிப் குறித்தும், அதை உருவாக்கி யூனிகார்ன் தளமாக வளர்த்தெடுத்த தீப் கல்ராவைப் பற்றியே.
தீப் கால்ரா தொடங்கியது எப்படி?
டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம், ஐஐஎம்-அகமதாபாத்தில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்தவர் தீப் கால்ரா. 23 வயதில் எம்பிஏ படித்த பிறகு எல்லோரும் செய்வதுபோல் பாதுகாப்பான மாத வருமானம் வரக்கூடிய வேலையைத் தேர்ந்தெடுப்பதிலேயே இவருக்கும் விருப்பம். அவ்வாறே வாழ்க்கையைத் தொடங்கினார்.
முதல் வேலையாக,வங்கித் துறையில் இருந்து தீப்பின் தொழில் வாழ்க்கை தொடங்கியது. ஏபிஎன் அம்ரோ வங்கி போன்ற நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை. மாத சம்பளத்துக்கே உரிய உற்சாகத்துடன் முதல் மூன்று வருடங்கள் பணியாற்றிய தீப்புக்கு, அந்த வேலை சலிப்பு தட்ட ராஜினாமா செய்துவிட்டு மனதுக்கு பிடித்த, அதேநேரம் சவால் நிறைந்த பணி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.
நல்ல பேக்கேஜ்களுடன் பல வங்கிகளிலிருந்து அவருக்கு சலுகைகள் வந்தாலும், வழக்கத்திற்கு மாறாக வேறு ஒன்றை செய்ய வேண்டும் என்பதே அவரது சிந்தனையில் இருந்தது. அப்போது அமெரிக்காவில் பிரபலமாக இருந்த 10-பின் பவுலிங் விளையாட்டு. அதான் ராஜா ராணி படத்தில் ஜெய் - நயன்தாரா ஒரு கிளப்பில் விளையாடுவார்களே அந்த விளையாட்டுதான் 10-பின் பவுலிங்.
ஒரு வருட ரெஸ்டுக்கு பிறகு இதை செய்துவந்த அமெரிக்க நிறுவனமான "AMF பவுலிங்"-இல் பணிக்கு சேர்ந்த தீப்புக்கு அந்த விளையாட்டை இந்தியாவில் கொண்டுவர வேண்டும் என்பதும். அதற்காக முதலீட்டை திரட்ட வேண்டும் என்பதும்தான் டாஸ்க்.
தனது விருப்பத்திற்கு ஏற்ற வேலை இது இல்லை என்பதும், அவரது சிந்தனையில் இருந்தது இது இல்லை என்றாலும் கடினங்களும், சவால்களும் நிறைந்தது என்பதால் நான்கு வருடங்கள் இதில் பணிபுரிந்தார். ஏதோ ஒரு அமெரிக்க முதலாளியின் கட்டளைக்கு கீழ்ப்படிந்துகொண்டு அங்கு இருந்த அவரின் திறமைக்கு மதிப்பு இல்லை என்பதும் தான் நினைத்தது இது இல்லை என்பதும் உணர்த்திக்கொண்டே இருக்கவே, இதையும் ராஜினாமா செய்வது என்ற ரிஸ்க்கை எடுத்தார்.
இந்த நான்கு வருட உழைப்பு தனது தனிப்பட்ட தோல்வியாக கருதிய தீப்பின் அடுத்த புகலிடம் மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஜிஇ கேபிடல். 1999-ல் ஆன்லைன் மூலமே பெரும்பாலும் வேலைகளை செய்துவந்த ஜிஇ கேபிடல், தீப்பின் சிந்தனைக்கேற்ற இடமாக விளங்கத் தொடங்கியது.
இணையம் தீயாக பரவிக்கொண்டிருந்த காலகட்டம் அது. எதிர்காலம் முற்றிலும் இணையமே என்ற தீப் உணர்ந்த தருணமும் இங்கேதான். இணையத்தின் சக்தியை உணரத் தொடங்கிய அவர், எதிர்காலம் முற்றிலும் இணையத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு தனக்கான வணிகமும் இணையத்தை அடிப்படையாக கொண்டு இருந்தால், எளிதாக இயங்க முடியும் என்ற முடிவெடுத்தார். அப்போது அமெரிக்க மட்டுமல்ல, இந்தியாவிலும் இணையம் மெல்ல மெல்ல கால் பதித்துக் கொண்டிருந்தது.
MakeMyTrip உதயம்
தீப் கால்ரா விரைவில் ஜிஇ கேபிடல் நிறுவனத்தின் வேலையையும் ராஜினாமா செய்தார். இப்போது அவரது ஒரே கவனம் ஆன்லைனை அடிப்படையாகக் கொண்டு தனக்கான ஒரு சொந்த பிசினஸ். ஒவ்வொரு துறையாக அலசியவருக்கு, இந்தியாவின் சுற்றுலாத் துறையை ஆராய்ந்தபோது, இந்திய மக்கள் தங்கள் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு டிக்கெட் கவுன்டர்களில் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்த சிரமங்கள் குறித்து தெரியவந்தது.
மக்களின் இந்தப் பிரச்சனையை கருத்தில் கொண்டு, மக்களின் பயணத்தை எளிமையாகவும் எளிதாகவும் மாற்றும் வகையில் இணையதளம் தொடங்கலாம் என்ற ஐடியாவின் தொடர்ச்சியாக உதயமானது MakeMyTrip.
ஆரம்பத்தில் தனியாளாக இதை தொடங்கலாம் என்று நினைத்தாலும், அதில் இருந்த சிரமங்கள் அந்த எண்ணத்தை கைவிட வைத்தது. மாறாக, ஈவென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் 2-மில்லியன் டாலர் நிதியுதவியுடன் நண்பர்கள் ராஜேஷ் மாகோவ், கேயூர் ஜோஷி மற்றும் சச்சின் பாட்டியா ஆகியோரை இணை நிறுவனர்களாக சேர்த்துக்கொண்டு MakeMyTrip-ன் பயணத்தை தொடங்கினார் தீப்.
2000-ம் ஆண்டில் அமெரிக்க சந்தையில் வெளிநாட்டில் வாழும் இந்திய சமூகத்தின் தேவைகளை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குப் பயணிக்க உதவும் தளமாக இயங்கத் தொடங்கியது ’மேக் மை ட்ரிப்.’
எடுத்த எடுப்பில் இந்தியாவில் சேவையை கொண்டுவராததற்கு காரணம் ஆன்லைன் புக்கிங் துறையில் இந்தியச் சந்தை அப்போது முதிர்ச்சியடையாமலும் மக்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதில் இருந்த பயமே. அதனால் பாதுகாப்பாக தொழிலை நடத்த விரும்பி முதலில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டியது மேக் மை டிரிப்.
கடுமையான முடிவுகள்
அமெரிக்கச் சந்தையில் இயங்கினாலும் முதல் இரு வருடங்கள் தீப் நினைத்தது போல் பிசினஸ் நடக்கவில்லை. மீண்டும் முதலீடு செய்யவும் யாரும் தயாராக இல்லை. நிலைமை மிகவும் மோசமாக, நிறுவனத்தை காப்பாற்ற சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டியிருந்தது. அதைவிட, அடுத்த 18-மாதங்களுக்கு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் சம்பளம் இல்லாமல் பணிபுரிய வேண்டிய நிலை.
இதுபோன்ற கடினமான முடிவுகள், மூழ்கிக்கொண்டிருந்த மேக் மை டிரிப்-பை கரைசேர்த்தது. மெல்ல நிலைமை சீராக வணிகமும் அதிகரிக்கத் தொடங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் பெற்றது. இந்த தருணத்தில் தான் இந்திய ரயில்வே IRCTC மூலம் ஆன்லைன் புக்கிங்கை அறிமுகப்படுத்தியது.
IRCTC உதவியால் இந்திய பயணிகள் ஆன்லைன் புக்கிங்கிற்கு பழக்கப்பட தொடங்கி, ஆன்லைன் பேமென்ட் குறித்த பயத்தில் இருந்தும் வெளிவந்தனர். தான் காத்திருந்த தருணம் இதுதான் என்று அறிந்த தீப் இனியும் தாமதிக்காமல் மேக் மை ட்ரிப் போர்ட்ஃபோலியோவை செப்டம்பர் 2005ல், அதிகாரபூர்வமாக இந்திய சந்தையில் கால்பதிக்க வைத்தார்.
"ஒரு தொழிலதிபராக, உங்களது பலம் மற்றும் மிக முக்கியமாக உங்கள் பலவீனங்கள் பற்றிய சுய விழிப்புணர்வு உங்களுக்கு இல்லை என்றால், நீங்கள் உங்களை பெரிய அளவில் ஏமாற்றப் போகிறீர்கள் என்று அர்த்தம்." - தீப் கல்ரா.
விமான டிக்கெட்டுகளைத் தவிர, ஹாலிடே பேக்கேஜ்கள் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் என சற்று விரிவாக இந்தியாவில் வணிகம் செய்யத் தொடங்கியது மேக் மை ட்ரிப். விரைவாகவே ஐஆர்சிடிசி உடன் கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணி நடவடிக்கை ரயில்வே டிக்கெட் புக்கிங்கில் மேக் மை ட்ரிப்புக்கான இருப்பை அதிகரித்ததோடு இல்லாமல், இந்திய சந்தையில் அந்நிறுவனம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஊக்கத்தையும் அளித்தது.
அடுத்த சில ஆண்டுகளிலேயே வருவாய் ஈட்டத் தொடங்கியது. ஒருகட்டத்தில் இந்தியாவில் செய்யப்படும் உள்நாட்டு விமான பயணத்துக்கான 12 ஆன்லைன் புக்கிங்கில் ஒன்று மேக் மை ட்ரிப் மூலம் முன்பதிவு செய்யப்பட்டன. சில வருடத்திற்குள் 200,000 வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றது.
"ஒரு தொழில்முனைவோராக, சிறிய வெற்றிகளைக் கொண்டாடுவது மிகவும் முக்கியம். பெரிய ஒன்றை உருவாக்கும் முயற்சியில், ஒரு படி பின்வாங்குவதன் முக்கியத்துவத்தை மறந்துவிட்டு, நம் வெற்றியைப் பிரதிபலிக்க, சிறிய வெற்றிகளை கொண்டாட வேண்டும்" - தீப் கல்ரா
உண்மையில், 2008ல் உலகம் மந்தநிலையில் இருந்தபோது, மேக் மை ட்ரிப் நிறுவனம் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள லாபத்தைப் பதிவு செய்தது. அந்த ஆண்டில் மொத்த வருவாய் சுமார் 500 மில்லியன் டாலர் ஆகும். என்றாலும், ஆரம்பத்தில் இந்தியாவில் மேக் மை ட்ரிப் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறவில்லை.
அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களில் இந்தியர்கள் விமானக் கட்டணத்தை மட்டுமே தேடும் தளமாக இதனை பயன்படுத்தியதோடு முன்பதிவு செய்யவில்லை. இதே தருணத்தில் முக்கிய முதலீட்டாளரான eVentures முதலீட்டை திரும்பப் பெற்றது. இக்கட்டான இவ்வேளையில் மீண்டும் ரிஸ்க் எடுத்தார் தீப் கல்ரா. நண்பர்கள், குடும்பத்தினரின் உதவியுடன் முதலீடுகளை போட்டு நிறுவனத்தை சொந்தமாக்கினார்.
நிறுவனத்தை வாங்கினாலும் சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. சம்பளக் குறைப்பு போன்றவை மூலம் அதுவும் செய்யப்பட்டது. போதாத நேரம், மும்பை தீவிரவாத தாக்குதல் வேறு இந்திய சுற்றுலாத் துறையை கடினமாக்கியது. இப்படி பல சிக்கல்கள் இந்தியாவில் கால்பதித்த சில ஆண்டுகளிலேயே மேக் மை ட்ரிப்பை சுற்றினாலும், தீப் கல்ரா தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் நிறுவனத்தை இந்திய சந்தையில் வலுவாக காலூன்ற வைத்தார்.
பெருமித தருணம்
நம்பிக்கையான வாடிக்கையாளர்கள் பெருக, நிறுவனத்தின் வருவாயும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆகஸ்ட் 2010-ல் அமெரிக்க பங்குசந்தையான NASDAQ-ல் மேக் மை ட்ரிப் பட்டியலிடப்பட்ட நேரத்தில் அதன் உண்மையான வளர்ச்சி உலகிற்கு தெரியவந்தது. அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகச் சில இந்திய டாட்காம் நிறுவனங்களில் மேக்மைட்ரிப்பும் ஒன்று என்பது அப்போது இந்தியாவிற்கும் ஒரு பெருமையான தருணமாக இருந்தது.
2005ல் 30 மில்லியன் டாலராக இருந்த மேக் மை ட்ரிப்பின் மொத்த விற்பனை மதிப்பு NASDAQ-ல் பட்டியலிடப்பட்ட பின் சுமார் 20 மடங்கு உயர்ந்து, 600 மில்லியன் டாலராக அதிகரித்தது. 2018 நிதியாண்டில், இதன் வருவாய் 675 மில்லியன் டாலராகவும், 2020-ல் வருவாய் சுமார் 512 மில்லியன் டாலராகவும் இருந்தது.
மேக் மை ட்ரிப்பின் வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம், இன்ஃபோ எட்ஜ் சஞ்சீவ் பிக்சந்தானி. இந்தியாவின் முதல் ஆன்லைன் வேலைவாய்ப்பு போர்ட்டலை நிறுவிய சஞ்சீவ், மேக் மை ட்ரிப்பின் வளர்ச்சியை அறிந்து அந்த நிறுவனத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார்.
அவரின் ஆலோசனையின் பேரில் இந்திய பங்குசந்தையில் ஐபிஓ வெளியிடப்பட, 2016ல் இந்தியாவின் 12வது யூனிகார்ன் நிறுவனமாக யூனிகார்ன் கிளப்பில் இணைந்து கெத்துக்காட்டியது மேக் மை ட்ரிப்.
வெறும் வெற்றி மட்டுமல்ல...
மேக் மை ட்ரிப்பின் வெற்றிக் கதை வெறும் வெற்றியைப் பற்றியது மட்டுமல்ல. தொலைநோக்கு பார்வையும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும் என்பது தீப் கால்ராவின் பயணம் அதை உணர்த்துகிறது. ஹோட்டல் முன்பதிவுகள், விமான டிக்கெட்டுகள், சுற்றுலா பேக்கேஜ்கள், டாக்ஸி முன்பதிவுகள், ரயில் முன்பதிவுகள் போன்ற ஆன்லைன் பயண சேவைகளின் ராஜாவாக 37 இந்திய நகரங்களில் கோலோச்சி கொண்டிருக்கிறது. இந்தியாவை தாண்டி நியூயார்க் மற்றும் சிட்னியிலும் மேக் மை ட்ரிப் தடம் வலுவாக உள்ளது.
மேக் மை ட்ரிப் ஒரு முழு வெற்றியடைய ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆனது. அத்தனை ஆண்டுகள் கடின உழைப்பும் விடாமுயற்சியுடனும் இருந்து சாதித்து காட்டினார் தீப் கால்ரா.
"ஒரு தொழிலை உருவாக்குவதற்கு நேரம் எடுக்கும். மேலும் ஒரு தொழிலதிபர் முதல் ஐந்து முதல் ஆறு வருடங்களை எவ்வாறு கையாள்கிறார் என்பதுதான் நிறுவனத்தின் வெற்றி மற்றும் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. அவற்றை உருவாக்குவதில் தூக்கத்தை இழக்க வேண்டி வரும். தொழில்முனைவு என்பது ஒரு பயணமே தவிர இலக்கு அல்ல" - தீப் கால்ரா
கட்டுரை உதவி: ஜெய்
#100Unicorns | 'யுனிக்' கதை 11 - Snapdeal: 'நெருக்கடிகளை நொறுக்கி வெற்றிகளை வசப்படுத்திய இருவர்'