#100Unicorns | யுனிக்' கதை 09 | Hike: சூப்பர் தொடக்கம், ஆனால் சமாளிக்க முடியாமல் போராடிய கவின் பார்தி மிட்டல்!
இந்திய மெசேஜிங் சந்தையில் வெற்றிகரமாகத் தொடங்கிய Hike வாட்ஸ்-அப் போட்டி மற்றும் லாபம் ஈட்டமுடியாத பல காரணங்களால் யூனிகார்ன் ஸ்டேட்டசை அடந்த பின்னரும் தோல்வி அடைந்து மூடப்பட்டது தான் இந்த கதை.
#100Unicorns | 'யுனிக் கதை' 09 | Hike
தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி என்பது கடிதம் டு லேண்ட்லைன் தொலைபேசிகள், பேஜர் டு ஸ்மார்ட்போன் என வேகமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. ஸ்மார்ட்போன் துணையுடன் உருவான மெசேஜிங் பிளாட்ஃபார்மில் சாதித்த ஒரு ஒரு நிறுவனம், அதே வேகத்தில் சரிந்த கதைதான் இந்த யூனிகார்ன் எபிசோட்.
வெற்றியில் இருந்து மட்டுமல்ல, பிறரது தோல்வியிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள முக்கியப் பாடங்கள் இருப்பதை உணரும் தருணம் இது.
மெசேஜிங் பிளாட்ஃபார்மில் வி-சாட், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், லைன் என உலகின் மிகவும் பிரபலமான நிறுவனங்களைப் பற்றி பேசும்போது நாம் தவறவிடக் கூடாத ஒரு பெயர் கவின் பார்தி மிட்டல். இவருக்குச் சொந்தமானது ‘Hike’ மெசஞ்சர்.
மொபைல் இன்டர்நெட் வளர்ந்துகொண்டிருந்த 2010 காலகட்டத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வேறுநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கோலோச்சிக் கொண்டிருக்க, இந்தியாவுக்கென பிரத்யேகமாக உருவான ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன்தான் ‘ஹைக்’. இதன் நிறுவனர், புகழ்பெற்ற பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டலின் மகன் கவின் பார்தி மிட்டல்.
லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு, கூகுள் நிறுவனம் மற்றும் கோல்ட்மென் சாக்ஸ் நிறுவனத்திலும் பயிற்சி பெற்றவர் என கவின் மிட்டலின் ஆர்வம் தந்தையை போலவே, சுயதொழிலில் இருந்தது.
தந்தையிடம் இருந்து வாங்கிய 20,000 ரூபாயை முதலீடாக கொண்டு தொழில் தொடங்கிய சுனில் மிட்டல், ஏர்டெல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய கதையை இன்ஸ்பிரேஷனாக கொண்டு லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார் கவின் மிட்டல். என்றாலும், அவரின் முதல் முயற்சி ‘ஹைக்’ அல்ல.
முதல் முயற்சி:
மொபைலில் திரைப்படங்களுக்கு டிக்கெட்டுகள் புக் செய்ய ‘ஆப்ஸ்பார்க்’ என்னும் அப்ளிகேஷனை 2009ல் உருவாக்கினார். 2011ல் Foodster என்னும் அப்ளிகேஷனையும் தொடங்கினார். இவற்றுக்கு கிடைத்த வரவேற்பில் அடுத்த முயற்சியாக தொடங்கியது தான் ‘Hike’.
2010-ல் உலகின் மற்ற நாடுகளை ஆட்கொண்டிருந்த வாட்ஸ் அப், இந்தியாவிலும் கால்பதித்தது. வாட்ஸ் அப்பின் மெசேஜிங் கான்செப்ட்டில் இந்தியாவுக்கென பிரத்யேக மெசேஜிங் அப்ளிகேஷனாக வெளிவந்தது ஹைக். Foodster, ஆப்ஸ்பார்க் வெற்றியால் அடுத்த முயற்சியாக மாற்றுத் தொழில் குறித்த சிந்தனையில் இருந்த கவின், ஹைக்-ஐ உருவாக்கினார். அந்த அப்ளிகேஷனுக்கு கிடைத்த வரவேற்பு, உற்சாகம் தர அடுத்த முயற்சியாக தொடங்கியதுதான் Hike Messenger.
ஹைக் Vs வாட்ஸ் அப்
2012 டிசம்பர் 12-ல் ஹைக் வெளியிடப்பட்டது. ஆரம்பகட்டத்தில் கவின் தந்தையின் பார்தி ஏர்டெல் மற்றும் ஜப்பானிய தொலைத் தொடர்பு நிறுவனமான சாஃட் பேங்க் முதலீடு செய்தாலும், எதிர்பார்த்த வரவேற்பை ‘ஹைக்’ பெறவில்லை. முதல் இரண்டு ஆண்டுகளில் 35 மில்லியன் பயனர்களை மட்டுமே ஈர்த்திருந்தது.
‘ஹைக்’ பெரிதாக மக்களை அடையாததற்குக் காரணம் வாட்ஸ் அப். எளிமையாக செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் வசதியால் இந்தியர்களின் மொபைல்களில் அப்போது நீங்கா இடம்பெற்றுவந்தது வாட்ஸ் அப். அதை எதிர்த்து போரிட்டே ‘ஹைக்’ பயன்பாட்டை மக்களிடம் கொண்டுசேர்க்க முடியும்.
அதற்கான மாற்றுவழிகளை ஆராய்ந்தார் கவின். என்னதான், எளிமையான செயலி என்றாலும் வாட்ஸ்அப் இந்தியர்களின் நேட்டிவிட்டிக்கு தகுந்தது போல் இல்லை. தனது ஆராய்ச்சியில் இந்தப் பாயின்டை பிடித்த கவின், இதுவே வாட்ஸ்அப்பில் இருந்து ஹைக்கை தனித்தன்மையாக்கும் நம்பினார். அப்படி நடந்தால், வாட்ஸ் அப் இருக்கும் ஒரே மொபைலில் ஹைக்கையும் மக்களை பயன்படுத்த வைப்பது எளிது என்பதறிந்து கியரை மாற்றினார்.
ஹைக்கின் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான அப்டேட்கள் வாட்ஸ் அப் உடனான போட்டியை பலப்படுத்தின. பயனர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் கூப்பன், 9 இந்திய மொழிகள் பயன்படுத்தும் வசதி, கோப்புகளை 100 MB வரை பரிமாறிக்கொள்ளும் வசதி, செய்திகள் மற்றும் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கும் வசதி என வாட்ஸ்அப்பில் இல்லாத, இந்தியர்களின் ரசனைகளை ஏற்ற வசதிகளை அடுத்தடுத்த அப்டேட் ஆக்க, பயனர்கள் எண்ணிக்கையும் உச்சம் தொட்டது.
ஸ்டிக்கருக்கு முன்னோடி ஹைக்...
வாட்ஸ் அப்பின் தனித்தன்மை எமோஜிக்கள் என்றால், ஹைக்கின் தனித்தன்மை, அடையாளம் என்றால், அது ஸ்டிக்கர்கள். வாட்ஸ் அப்-பில் சிரிப்பது, அழுவது என ஸ்மைலி போட்டு எமோஷனை வெளிப்படுத்தியவர்களுக்கு ஸ்டிக்கர்கள் வரப்பிரசாதமாக அமைய நண்பர்களை கலாய்ப்பதற்கும் உரையாடுவதற்கும் ஹைக்கை நாடத் தொடங்கினர்.
கோலிவுட், பாலிவுட் சினிமாக்களின் டயலாக், வடிவேலு, சந்தானம் போன்ற காமெடியன்களின் ரியாக்சன்கள் என இளைஞர்களுக்கு பிடித்தவற்றை ஸ்டிக்கர்களாக இறக்கி ஹைக் அதகளம் செய்ய இரண்டாவது இரண்டு வருடங்களில் 100 மில்லியன் பயனர்கள் எண்ணிக்கையை தொட்டது.
"ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் வளர்ச்சியையும், கற்றுகொள்ளும் திறமையையும் பொறுத்தது. எனவே, என்னை தினமும் அப்டேட் செய்துகொண்டே இருக்கிறேன்," - கவின் மிட்டல்
முதலீடுகள்...
10 கோடிக்கும் அதிகமான பயனர்களுடன் வீறுநடை போட்ட ஹைக்கை தேடி முதலீடுகளும் குவிந்தன. 2013-ம் ஆண்டு பார்தி ஏர்டெல், சாஃப்ட்பேங்க் என இரண்டு நிறுவனங்களும், 2014ல் டைகர் குளோபல் நிறுவனமும், அடுத்தடுத்து டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ், பாக்ஸ்கான் டெக்னாலஜி என நிறுவனங்கள் வரிசை கட்டி முதலீடுகள் செய்தன.
மொத்தமாக, 2016 வரை 17.5 கோடி டாலர் முதலீட்டைத் திரட்டியது ஹைக். நான்கு முறை நிதி திரட்டியதன் மூலம், 140 கோடி டாலர் மதிப்பிலான நிறுவனம் என்ற பெருமையுடன், இந்தியாவின் 9-வது யூனிகார்ன் என்ற அந்தஸத்தை பெற்றது ஹைக்.
"சுயதொழில் தொடங்க நிறைய பேர், நிறைய யோசனைகளோடு வருகிறார்கள். ஆனால், விடாமுயற்சி இல்லாததால் சில நாட்களில் காணாமல் போய்விடுகிறார்கள்" - கவின் மிட்டல்
வீழ்ச்சியும் பாடமும்
ஸ்டிக்கர் சாட்டிற்கான காரணகர்த்தா, 10 பிராந்திய இந்திய மொழிகளில் சேவை கொடுத்த நிறுவனம் என புகழப்பட்ட ஹைக், லாபத்தில் கவனம் செலுத்தாததால் மூடப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் முதலீட்டைப் பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சில ஆண்டுகளிலேயே காணாமல் போக வாய்ப்புண்டு. உதாரணமாக இன்று நிற்கும் ஹைக், மூடப்படும் அளவுக்கு சென்றதுக்கு முக்கியக் காரணம் வாட்ஸ் அப் கொடுத்த போட்டியே.
மிகப்பெரிய நிறுவனம், நிறைய முதலீடுகள், வருங்காலத் திட்டங்கள் என வாட்ஸ் அப் சிறிது சிறிதாக ஹைக்கை பலவீனப்படுத்தியது. ஒருகட்டத்தில் வாட்ஸ் அப் தந்த போட்டியை சமாளிக்க முடியாத நிலையை எட்டிய ஹைக்கின் வீழ்ச்சியை அடுத்து கவினின் தந்தை சுனில் மிட்டல்,
"இந்தியாவில் சர்வதேச நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்திய நிறுவனங்கள் வளர முடியாது," என்று ஓபன் ஸ்டேட்மென்ட்டாக கொடுத்தார்.
ஹைக் தொடர்பான கடைசி ட்வீட்டில்கூட, "டெலிகிராம் அல்லது சிக்னல் போன்றவற்றுடன் எந்தவொரு இந்திய மெசேஜிங் செயலியினாலும் போட்டியிட முடியாது," என்று அந்நிய நாட்டின் செயலிகளை விமர்சிக்க அவர் தவறவில்லை.
ஹைக்கின் வீழ்ச்சி வெளிநாட்டு செயலிகள் மட்டுமில்லை காரணம். வேறு சிலவும் உள்ளன. லாபத்தில் கவனம் செலுத்தாத ஹைக், ஸ்நாப்பை போலவே ஹைக் ஸ்டோரிஸை அறிமுகப்படுத்தியது. எந்த வருவாய் மாதிரியும் இல்லாமல் கட்டணங்களை நேரடியாக செலுத்தும் வசதி என வழியை மாற்றியது. இதுவும் வீழ்ச்சிகளுக்கு அடித்தளமிட, அவற்றுடன் வாட்ஸ் அப் கொடுத்த போட்டியும் ஹைக்கை இருந்த இடம் தெரியாமல் காலி செய்ய வைத்தன.
"ஹைக் செயலிக்கு போட்டியாக நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் அவை எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே எங்களின் வளர்ச்சி இருக்கும்," என்று கணித்த கவின் மிட்டல், மற்ற நிறுவனங்களில் வளர்ச்சியால் வீழ்ந்தார் என்பதே உண்மை.
சிக்னல், டெலிகிராம் போன்ற வாட்ஸ்அப்பிற்கான மாற்று ஆப்களின் பட்டியலில் 'ஹைக்' செயலி வந்திருக்க வேண்டும். ஆனால், 2021 ஜனவரி மாதத்தோடு தனது சேவையை முடித்துக்கொண்டு பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியது.
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்பார்கள். அதுபோலவே வீழ்ச்சியும் எழுச்சியுமே ஒரு பிசினெஸ்மெனுக்கு அழகு. ஹைக் நிறுவனம் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டாலும் நிறுவனம் இன்னும் உள்ளது.
ஆம், ஹைக் தற்போது வெப்3 கேமிங் பிளாட்ஃபார்மை (ரஷ் கேமிங் யுனிவர்ஸ்) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ரஷ் அவதாரை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஷ் என்பது ஹைக்கின் ஒரு மினி-கேம்ஸ் பிளாட்ஃபார்ம் ஆகும். இது மைக்ரோ டிரான்ஸாக்ஷன்களை உள்ளடக்கிய சாதாரண கேமிங் அனுபவங்களை பயனர்களுக்கு வழங்கும்.
ஆன்லைன் கேமிங் உடன் நிற்காமல் ’வைப்’ (Vibe) சமூக ஊடக செயலியையும் கொண்டுள்ளது. மேலும், கிரிப்டோ தொழில்துறையிலும் ரஷ் அவதார் பெயரில் கால் பதித்து புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது ஹைக்.
"ஆரம்பத்தில் முதலீடுகளை கொண்டுவர நிறையவே சிரமப்பட்டேன். ஒருகட்டத்தில் இதை மூடிவிடலாமா என்றுகூட சிந்தித்திருக்கேன். ஆனால் அனைத்தையும் தாண்டிதான் தொழில்முனைவராக ஆக முடியும் என்பதை உணரவே போராடினேன். அப்படித்தான் நான் இவற்றை கடந்து வந்தேன்."
- இது ஒரு பேட்டியில் கவின் கூறியது.
ஆம், இன்னும் போராடிக் கொண்டுதான் உள்ளார் அவர். ‘வட சென்னை’ படத்தில் வரும் ‘ஜெயிக்கிறமோ இல்லையோ... முதல்ல சண்டை செய்யணும்...’ என்ற டயலாக் கச்சிதமாக இங்கே பொருந்தும். முதல் இன்னிங்ஸில் ஹைக்கை கரைசேர்க்க விடவில்லை என்றாலும், இப்போது இரண்டாம் இன்னிங்ஸில் புதிய பரிணாமத்தில் ஜொலிப்பார் என்று வாழ்த்துவோம்.
கட்டுரை உதவி: ஜெய்
யுனிக் கதைகள் தொடரும்...