மத்திய பட்ஜெட் 2021-ல் தமிழகத்துக்கான திட்டங்கள் என்னென்ன?
பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தனியாக சிறப்புத் திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் அறிவப்பு!
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 1 மணி நேரம் 50 நிமிடங்களில் 2021 - 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வாசித்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. இதில், பொதுவான திட்டங்கள், துறைவாரியான நிதிகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றாலும், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தனியாக சிறப்பு திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளன.
* முதலாவதாக தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடி முதலீட்டில் புதிய சாலை திட்டங்கள். 3500 கி.மீட்டர் தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம் போடப்பட உள்ளது. மதுரை - கொல்லம் இடையே புதிய பொருளாதார மண்டல வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தமிழகம் மற்றும் கேரளாவில் ஒருங்கிணைந்த சாலைத் திட்டமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூரு - சென்னை 278 கி.மீ தூரத்துக்கு அதிவேக நெடுஞ்சாலை. நடப்பு நிதி ஆண்டில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
* சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகளுக்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. அதன்படி, சென்னையில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னை உள்பட 5 முக்கிய மீன்பிடிதுறைமுகங்கள் விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு. தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா மற்றும் தமிழகத்தில் கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி.
* 100 நகரங்களில் எரிவாயு விநியோகக் குழாய் கட்டமைப்பு திட்டம்
* மிக முக்கியமான சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் இந்த ஆண்டே தொடங்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடு.