தான் வளர்த்த தென்னை மரங்களை வெட்ட மனமில்லாமல் மாற்று இடத்தில் நடவு செய்து அசத்திய விவசாயி..!
திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் 20 ஆண்டுகளாக ஆசையாக வளர்த்த தென்னை மரங்களை வெட்ட மனமில்லாமல், அதனை வேறு இடத்திற்கு மாற்றி உயிர் கொடுத்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் 20 ஆண்டுகளாக ஆசையாக வளர்த்த தென்னை மரங்களை வெட்ட மனமில்லாமல், அதனை வேறு இடத்திற்கு மாற்றி உயிர் கொடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு தாங்கள் வளர்க்கும் தென்னை மரங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு ஒப்பானவையாக கருதப்படுகின்றன. பருவமழை பொய்த்து போன சமயங்களில் கூட விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டுவது கிடையாது. பார்த்து, பார்த்து வளர்க்கும் தென்னம்பிள்ளைங்களை வறட்சி, பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களுக்காக வெட்டி வீசும் போது கூட விவசாயிகள் கலங்கிப்போவது உண்டு.
அப்படித்தான் திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் தான் ஆசையாய் வளர்த்த தென்னை மரங்களை வெட்டி வீச மனமின்றி, யாருமே நினைத்து பார்க்க முடியாத அசத்தலான செயலை செய்துள்ளார்.
மாற்று இடத்தில் நடப்பட்ட தென்னை மரங்கள்:
திருப்பூர் நாச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 54 வயது விவசாயி சண்முகசுந்தரம், இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். ஆனால், அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கிய போது, தென்னை மரங்களை வெட்டி அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 50 தென்னை மரங்கள் உள்ள இடத்தில் வீடு கட்ட முடிவெடுத்த போது, அவற்றை வெட்டுவதற்கு மனம் இல்லாத விவசாயி சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்திற்கு மாற்ற முடிவெடுத்துள்ளார்.
அப்பகுதியில் வீடு கட்டுவதற்கு இடையூறாக இருந்த சுமார் 50 தென்னை மரங்களில் 35 மரங்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, புத்தாண்டு தினத்தன்று, தென்னை மரங்களை கிரேன் உதவியுடன், ஜேசிபி இயந்திரம் மூலம், வேரோடு பிடுங்கி லாரி மூலம் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள மற்றொரு தோட்டத்தில் நடவு செய்துள்ளார்.
இதுபோன்ற மரங்களை மீண்டும் வளர்க்க 20 ஆண்டுகள் ஆகும் என்பதாலும், தனது தந்தை நினைவாக வைத்து வளர்த்து வரும் மரங்களை வெட்ட மனமின்றி வேறு இடத்தில் மாற்றி நடவு செய்ததாகவும் விவசாயி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
“20 ஆண்டுகளாக வளர்த்த மரங்களில் 35 மரங்களை இடமாற்றம் செய்ய நினைத்தேன். அதில் கடந்த மாதம் மட்டும் 25 மரங்களை இட மாற்றம் செய்து நடவு செய்துள்ளேன். அதில் 2 மரங்கள் மட்டும் பட்டுபோய்விட்டன. மீதமுள்ள 23 மரங்கள் தற்போது நல்ல முறையில் மீண்டும் காய்க்க ஆரம்பித்துள்ளன. தற்போது வரை மொத்தம் 35 மரங்களை இடமாற்றம் செய்துவிட்டேன். அதில் 33 மரங்கள் நல்ல முறையில் காய்க்க தொடங்கியுள்ளன,” என்றார்.
விவசாயத்தை கைவிட்டுவிட்டு பலரும் மாற்று தொழிலுக்கு திரும்பி வரும் இந்நிலையில், தான் வளர்த்த தென்னை மரங்களை வெட்டி வீசாமல், வேறோடு பிடுங்கி வேறு இடத்தில் நட்ட விவசாயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.