இனி இலங்கை, மொரிஷியஸிலும் UPI பணப்பரிமாற்றம்; இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவின் யுபிஐ பணப்பரிமாற்ற வசதியை இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இன்று பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

இனி இலங்கை, மொரிஷியஸிலும் UPI பணப்பரிமாற்றம்; இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Monday February 12, 2024,

2 min Read

இந்தியாவின் யுபிஐ பணப்பரிமாற்ற வசதியை இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இன்று பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

மத்திய அரசு 2016ல் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியை அறிமுகப்படுத்தியது. இது ஆரம்பத்தில் பெரிய அளவில் வெற்றி காணவில்லை.

UPI

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்சிபிஐ) ஏப்ரல் 2016ல் 21 உறுப்பினர் வங்கிகளுடன் ஒரு சோதனை தொடக்கத்தை நடத்தியது. அதன் பின்னர், UPI பயன்பாடு இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் முறை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

ஏற்கனவே, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங் காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி, அரேபியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை, மொரிஷியஸில் தொடக்கம்:

இந்தியாவின் UPI அடிப்படையிலான பணப்பரிவர்த்தனையை இன்று இலங்கை மற்றும் மொரிஷியஸில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது தவிர, இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் RuPay அட்டை சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இலங்கை அல்லது மொரீஷியஸ் சென்றால், அங்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் UPI மூலம் பணம் செலுத்தலாம். அல்லது, நீங்கள் ரூபே கார்டைப் பயன்படுத்தலாம்.

UPI

இலங்கையில் முதல் UPI பரிவர்த்தனையை இந்தியர் ஒருவர் மேற்கொண்டுள்ளார். UPI சேவைகளை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்தியது. மொபைல் போன்கள் மூலம் வேகமாக வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சரகம் கூறுகையில்,

“இலங்கை மற்றும் மொரிஷியஸ் உடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகள் வலுவடைந்து வரும் வேளையில் இந்த நாடுகளில் இந்தியாவின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” எனத்தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மொரிஷியஸில் தற்போது UPI அமைப்பு இருப்பதால், நாடுகளுக்கு இடையேயான டிஜிட்டல் இணைப்பு மேம்படுத்தப்பட்டு, பலதரப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் மென்மையான டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.