6 லட்சம் மக்கள், 2 லட்சம் லிட்டர் சர்பத்; இலவச வாழைத்தண்டு சர்பத் வழங்கிய ‘வாழைவிஞ்ஞானி’முருகன்!
ஒவ்வொரு சம்மரிலும், நொந்து போகும் மக்களுக்காக இலவசமாய் வாழைத்தண்டு சர்பத்தை நாள்தோறும் அண்டா அண்டாவாக தயாரித்து அளித்து வரும் முருகன், வாழைத் தண்டிலிருந்து பட்டு நூல் பிரித்தெடுக்கும் கருவியை தயாரிக்க 8 ஆண்டுகளாக 40 தோல்விகளுக்கு பின் கண்டுபிடித்த பாராட்டுக்குரியவர்.
வெளுக்கும்வெயிலில் இருந்து தப்பிக்க, ஏடிஎம் ரூமுக்கள் குடி கொள்தல், மொக்கைப்படத்துக்கு டிக்கெட் வாங்கி தியேட்டருக்கு ஆல்டராகுதல், ஜில்லு ஜில்லு... குளு குளு ஐயிட்டங்களை உள்ளிறக்குதல் போன்ற சம்மர் சமாளிபிகேஷன்களை மக்கள் செய்து கொண்டிருக்க, தூத்துக்குடியில் கோடை வெயிலுக்கு இதமான வாழைத்தண்டு சர்பத்தை பொது மக்களுக்கு இலவசமாய் வழங்கி வருகிறார் முருகன்.
சம்மர் தொடங்கியதிலிருந்து சாலையோரத்தில் ஸ்டால் அமைத்து 30,000 லிட்டர் வாழை தண்டு சர்பத்தை அளித்துள்ள முருகன், வாழைத் தண்டிலிருந்து பட்டு நூல் பிரித்தெடுக்கும் கருவியை தயாரித்து, பிரபலமாகியவர்.
“ஒரு முறை அப்துல்கலாம் ஐயாவை சந்தித்து பேசுகையில், ‘உன்னுடைய ஆராய்ச்சி மக்களை சென்றடைந்ததா?’ என்று கேட்டார். இல்ல ஐயா, அந்தளவுக்கு ஆராய்ச்சி முடிவு பெறவில்லை என்றேன். இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தலாம், யோசிங்கனு சொன்னார். அந்த முயற்சியில் செய்ததே வாழைத் தண்டு சர்பத்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, திருச்செந்தூருக்கு போயிருந்தப்போ அங்கங்க பொங்கல் பிரசாதமாக கொடுத்திட்டு இருந்தாங்க. நாம ஏன் இந்த சர்பத்தை கொடுக்கக் கூடாதுனு கொடுத்தோம். மக்கள் விரும்பி குடிச்சாங்கா. ஓகே, அப்போ தொடர்ந்து செய்யலாம்னு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இலவசமாய் வழங்கி வருகிறோம். இதுவரை 6,00,000பேர் வாழைத் தண்டு சர்பத்தை குடித்துள்ளார்கள் என்று நினைக்கையிலே ஒருவித திருப்தி கிடைக்கிறது,” என்று கூறி ஆனந்தம் கொள்ளுகிறார்.
‘ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் பிராசஸ்’ என்ற முறையில் 48மணி நேரங்கள் வாழைத்தண்டை சர்க்கரை கரைசலில் ஊறவைக்க வேண்டும். இந்த படிநிலையின் மூலம் துவர்ப்பு மிகுந்த வாழைச் சாறு வெளிவந்து சர்க்கரை கரைசல் வாழை தண்டுகளில் இடம்பிடிக்கிறது. வாழைத்தண்டினுடைய வாசம் நன்றாக இருக்காததால் மக்கள் அதை பருகுகையில் முகம் சுழித்துவிடுவர் என்ற காரணத்தினால், நன்னாரியையும், ஏலக்காயும் சரியான விகிதத்தில் கலந்து, எலும்பிச்சை, இஞ்சி, வேட்டிவேர் சேர்த்து சுவையான வாழைத்தண்டு சர்பத் தயாரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சர்பத்துக்குத் தேவையான வாழைத்தண்டு ஊறவைத்த சர்க்கரை கரைசல் மட்டும் 18,000லிட்டர் தயாரித்து கொள்கிறார். பின்பு, அதிலிருந்து தேவைப்படும் நேரங்களில் நீர் சேர்த்தல் அச்சிரப்பிலிருந்து 1 லட்சம் லிட்டர் சர்பத் தயாரித்து கொள்ள முடியும் என்கிறார்.
ஆனால், அவருக்கோ பலன்மிக்க பானத்தை பாட்டிலில் அடைத்து வருமானம் செழிக்கும் தொழிலாக்கும் எண்ணம் துளியுமில்லை. ஏனெனில், வணிக ரீதியாக தொழிலில் முனைப்புடன் இறங்கி காசு சம்பாதிக்க ஆரம்பித்துட்டால், வாழைத்தண்டு நூல் தயாரிப்புக்கான மேற்கண்ட ஆராய்ச்சிகளுக்கு அதுவே தடையாகிவிடும் என்கிறார்.
“வாழைத்தண்டில் பெக்டின், லிக்மின் என்ற இரு வேதிப்பொருள்கள் உள்ளன. அவை கேன்சரை தொற்றிவிக்கக்கூடிய செல்களை அழித்து, கேன்சரை குணப்படுத்துகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். அதனால், கிடைத்த உந்துதலில் நிறைய லிட்டரில் கொடுக்கணும்னு நினைக்கிறோம். ஒரு நாளுக்கு 10,000லிட்டர் சர்பத் தயாரித்தாலும், மக்கள் வீடு தேடி வந்து வாங்கிச் செல்வர். ஆனால், எனக்கு பதப்படுத்துதல் முறையில் பிடித்தமில்லை.
இதே சர்பத் சிரப்பில் சிட்ரிக் மற்றும் பொட்டாசியம் மேட்டா சல்பேட் சேர்த்தால் கெட்டு போகாமல் இருக்கும். ஆனால், இயல் பிலே சர்க்கரையின் அளவைகூட்டிக் கொண்டால், அதுவே பதப்படுத்தப்பட்டு விடும். ஆனாலும், நாங்கள் முன்கூட்டியே தயாரித்து வைக்கப்படும் இந்த சிரப்பை 4 நாட்கள் மட்டுமே பயன்படுத்துவோம்,” என்றார் அவர்.
வாழைகளுடனான வாழ்க்கை...
தூத்துக்குடி மாவட்டம் ப்ரைய்ன் நகரைச் சேர்ந்த முருகன் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் பட்டதாரி. வீட்டின் கடைக்குட்டியான அவர், ஒருவயது குழந்தையாக இருக்கும்போது அவருடைய தந்தை இறந்துள்ளார். அதன் பிறகு, அவருடைய மூத்த அண்ணனே முருகனின் வளர்ப்புக்கு முழுபொறுப்பேற்றுள்ளார். படிப்பில் படுகெட்டிக்காரரான முருகன், இன்ஜீனியரிங் படித்து முடித்து, முதல் பணிக்காக பாம்பே நோக்கி பயணித்துள்ளார்.
டிசைனிங் கம்பெனி ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது, பிளாஸ்டிக் சிரன்ஜி அச்சு டிசைன் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். அந்த டிசைனுக்கு கம்பெனி நிர்ணயித்து விற்ற விலை 10 லட்சம் ரூபாய். ஆனால், அதற்கான ஊதியமாய் முருகனுக்கு வழங்கப்பட்டதோ வெறும் 12 ஆயிரம் ரூபாய். உழைப்பு சுரண்டப்படுவதை உணர்ந்த அவர், வேலையினை ராஜினாமா செய்துள்ளார்.
“பாம்பேவில் இருக்கும்போது, சாப்ட்வேர் பயிற்சியெல்லாம் படித்திருந்தேன். தூத்துக்குடி வந்து சாப்ட்வேர் டெவலப்மெண்ட் கம்பெனி ஒன்றை தொடங்கினேன். வருவாய் கோடிகளில் கிடைத்தது. படிச்சது மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் என்பதால் அது தான் எதாச்சும் செய்யணும்னு தோணிட்டே இருக்கும்.”
”இந்த பகுதிகளில் பூ கட்டுவதற்கு வாழைமட்டையிலிருந்து நார் எடுத்தனர். அதை அப்படியே நூலாக்கினேன். ஆனால், பூ வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கல. அப்போது தான், இதில் வேறென்ன இருக்குனு ஆராய்ந்த அப்போ பட்டு நூல் எடுக்கலாம்னு தெரிஞ்சுகிட்டேன். அதுக்கு எப்படியும் மிஷின்லாம் இருக்கும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, எங்கேயுமே அதற்கான மிஷின் இல்ல. சரி நாமலே அதை உருவாக்கலாம் என்று முந்தைய பிசினசில் கிடைத்த மொத்த காசையும் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினேன்,” என்று எளிமையாக முருகன் சொல்லிவிட்டாலும், இயந்திர உருவாக்கலுக்கு பின் எட்டு ஆண்டு உழைப்பு அடங்கியிருக்கிறது. ஆம்,
சொந்த பந்தத்திலிருந்த மரியாதை போய், உருப்படாதவன் என்ற பெயர்பெற்று 8 ஆண்டு ஆராய்ச்சியில் 40 முறை தோல்வி அடைந்துள்ளார். கடைசி முயற்சி அதுவும் தோல்வி என்றால் கனவுகளை கலைத்துவிடலாம் என்ற நிலையில், அவருடைய கனவு நினைவாகியது.
ஆனால், அதற்கு மேல் ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியாது என்ற நிலைக்கு தள்ளியது பொருளாதாரம். அச்சமயத்தில் ஐஐடி மெட்ராஸ் 25,000ரூபாய் ஊக்கத் தொகை அளித்து விருது அளித்தது. இகழ்ந்தோரும் புகழத் தொடங்கினர். தொடர்ச்சியாய் விருதுகளும் குவிந்தன. ராஷ்டிரிய பவனில் குடியரசுத் தலைவரை சந்திக்கவும் அழைக்கப்பட்டார்.
வாழை விவசாயிகளிடமிருந்து ஒரு மரத்தை 5ரூபாயுக்கு விலைக்கு வாங்கி, பட்டுநூலை பிரித்தெடுத்து வருகிறார்.
“எந்வொரு மழை, பெருங்காத்து வீசினாலும் முதலில் அடியாகுவது வாழைகள் தான். விவசாயிகள் அதை அப்படியே எரித்துடவிடுவர். இப்போ, இந்த நூல் எடுப்பதற்கு மரங்களை வாங்கி விடுவதால், அவர்களுக்கு கொஞ்சம் வருமானம் கிடைக்கும்.” என்கிறார்.
தற்போதுவரை பிரித்தெடுக்கும் நூல்களைக் கைகளால் முடிச்சு போட்டு நூற்கண்டுகளை உருவாக்கி வருகிறார். கைகளால் நூற்கண்டு உருவாக்கி ஆடைகள் நெய்யப்படுவதால், வாழை பட்டு நூலில் நெய்யப் படும் துணிகள் படு காஸ்ட்லி. ஏனெனில், ஒரு மீட்டர் துணி உருவாக்க ஒரு ஊழியருக்கான சம்பளம் மட்டுமே 2,500ரூபாய் வழங்கப்படுகிறது.
“ஜப்பான்களில் வாழைநார் துணி ஆடையை அணியும் ஒரு விழாவே கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டவர்கள் மத்தியில் இந்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி, அதிகம் விருப்பப்பட்டு கேட்பவர்களுக்கு மட்டும் ஆடை நெய்து கொடுக்கிறேன். ஏனெனில் ஒரு மீட்டர் துணியின் விலை 10,000ரூபாய். ஒரு மரத்தில் ஆடவர்களுக்கான கோர்ட் 2 செய்துவிடலாம். ஆனால், அதை நெய்ய 20 நாட்கள் ஆகும். அதனால், ஆர்டர் கொடுப்பவர்களிடம் முன்கூட்டியே பணம் பெற்றுகொள்வேன்.
அப்படித்தான் ஒரு முறை டில்லியிலிருந்து ஒரு போன்கால் வந்தது இந்தமாதிரி ஒரு கோர்ட் பிரதமருக்கு செய்யணும்னு. நமக்கு டக்குனு நம்பிக்கை வராதுல்லய்யா. அட்வான்ஸ் கொடுங்க பண்ணி தர்றேன்னு சொல்லிட்டு வச்சிட்டேன். அவங்க வாழை சாகுபடியாளர்கள் சங்கத்தை அணுகி, மீண்டும் தொடர்பு கொண்டனர். மறுநாளே ப்ளைட் டிக்கெட் அனுப்பிவிட்டதும், நம்பிதான் ஆகணும் ஆகிவிட்டது. கிருஷி உன்னத்தி மேளா என்ற நிகழ்வில் தான் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வாழைநார் ஆடைகள் விரும்பி கேட்பவர்கள் எக்கச்சக்கம். ஆனால், அந்த அளவுக்கு டெக்னாலஜி இல்லாததால் வாழை பட்டு நூல்கண்டு சுற்றும் மிஷினினை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார் முருகன்.
அவருடைய நீண்ட கால முயற்சியான இம்மிஷின் உருவாக்கல் மட்டும் முடிவடைந்து விட்டால், வணிக ரீதியாக தொழிலை தொடங்கிவிடுவார். ஏனெனில், இதுநாள் வரை வருமானத்தை எதிர்பாராது சமூக வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அவரது வாழ்வாதாரத்திற்கான வழி வேண்டுமல்லவா!
தன்னலம் கருதாது சமூக முன்னேற்றத்துக்காக உழைத்துவரும் படைப்பாளரே பாராட்டுக்கள்!