மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு மீண்ட வம்சி வர்தன் சமூக ஆர்வலராக மாறிய கதை!
31 வயது வம்சி வர்தன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட பிறகு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவ என்ஜிஓ நிறுவியுள்ளார்.
பெரிது பெரிதாக வேர்கள், காய்ந்த இலைகள், ஆங்காங்கே புதர்கள் என அடந்திருந்த காடு. பாதை தெரியாத அந்த காட்டிற்குள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வம்சி வர்தனையும் மூன்று பஞ்சாயத்து ஊழியர்களையும் மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதி மாவட்டம் பீடபூமி, சுரங்கங்கள், அடர்ந்த மலைப்பகுதிகள் போன்றவற்றிற்கு மட்டுமல்ல கம்யூனிஸ்ட் நடவடிக்கைகளுக்கும் இந்தப் பகுதி பிரபலமானது. 31 வயதான வம்சி 2014ம் ஆண்டு பிரதம மந்திரி ஊரக வளர்ச்சி ஃபெலோஷிப்பின் (PMRDF) ஒரு பகுதியாக நகானியா கிராமத்தின் தொலைதூரப் பகுதிகளில் நல வாழ்வு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தபோது துப்பாக்கி சூட்டில் மாட்டிக்கொண்டார்.
“நான் கீழே விழுந்து கிடந்தேன். குண்டுகளின் சத்தம் என் காதுகளைத் துளைத்தது. பயத்தில் ரத்தம் உறைந்து போன உணர்வு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 மாவோயிஸ்டுகள் என்னைச் சுற்றியிருந்தனர். நடுக்காட்டில் இருந்தேன். படுக்க பிளாஸ்டிக் ஷீட் கொடுத்தார்கள். இரண்டு வேளை உணவு கொடுத்தார்கள். என் வாழ்க்கை அத்துடன் முடித்துவிடும் என்று பலமுறை நினைத்தேன்,” என்று வம்சி வர்தன் `சோஷியல்ஸ்டோரி’-இடம் தெரிவித்தார்.
பரஸ்நாத் வனப்பகுதிகளில் மூன்று நாட்கள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் மத்திய பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
வம்சி மாவோயிஸ்டுகளிடம் சிக்கியதால் பதட்டமடைந்தார். இருப்பினும் பொதுநலப் பணிகளில் ஈடுபடவேண்டும் என்கிற அவரது வேட்கையை இந்தச் சம்பவம் மேலும் அதிகரிக்கச் செய்தது. PRMD ஃபெலோவாக சேவையாற்றியவாறே யூபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாரானார்.
ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு அருகிலேயே Akanksha என்கிற அரசு சாரா நிறுவனத்தை நிறுவினார். இன்று ஐ.ஆர்.எஸ் பயிற்சியை நிறைவு செய்துள்ள வம்சி, பணி நியமத்திற்காக காத்திருக்கிறார். அத்துடன் 75-க்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பிற்கு உதவி வருகிறார். தனது கிராமத்துக் குழந்தைகளுக்கு Akanksha முயற்சியின்கீழ் வகுப்பெடுக்கிறார்.
ஆரம்ப நாட்கள்
கர்னூலின் திம்மனாயுனிபேட்டா கிராமத்தில் பிறந்த வம்சி ஆரம்பத்தில் அருகிலிருந்த தனியார் பள்ளி ஒன்றில் படித்தார். 6ம் வகுப்பிற்குப் பிறகு தாத்தா, பாட்டியுடன் வசிக்க அனந்தபூர் மாவட்டத்திற்கு மாற்றலானார்.
“என் குழந்தைப் பருவம் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது. என் பெற்றோரால் என் படிப்பிற்கு செலவிட முடியவில்லை. என் தாத்தா, பாட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் சில ஆண்டுகள் என் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு உறவினர் சிலரும் உதவினார்கள். இந்தச் சம்பவங்கள் பின்னாட்களில் என்னிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. படிப்பின் மதிப்பை உணர்த்தியது. தேவை இருப்போர்களின் நிலையையும் புரிந்துகொள்ள முடிந்தது,” என்கிறார் வம்சி.
2006ம் ஆண்டு வம்சி திருப்பதியின் ஸ்ரீ வித்யாநிகேதன் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் சேர்ந்தார். அந்த சமயத்தில் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்த முயற்சிகள் பலவற்றில் பங்களித்தார்.
அந்த சமயத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கம் வகுக்கும் வளர்ச்சிக் கொள்கைகளில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் இருப்பதை உறுதிசெய்ய வம்சி இந்த சட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். இதன் மூலம் திம்மனாயுனிபேட்டா பகுதிகளில் மின்சாரம், தண்ணீர் விநியோகம், சாலை இணைப்பு வசதிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்தார்.
வம்சி பட்டப்படிப்பு முடித்ததும் டிசிஎஸ் நிறுவனத்தில் உதவி கணிணி பொறியாளர் பணி கிடைத்தது. எனினும் 22 வயதான வம்சி அந்தப் பணியில் சேர இருந்தபோது உள்ளூர் எம்.எல்.ஏ-வால் கடுமையாக தாக்கப்பட்டார்.
“நான் நான்காண்டுகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் 30-40 விண்ணப்பங்கள் பதிவு செய்தேன். ஆனால் எம்.எல்.ஏ ஒருவரின் செயல்பாடுகள் குறித்து தகவல் கோரியபோது அவரது ஆட்கள் எனது வீட்டை தாக்கியதுடன் என்னையும் மோசமாக தாக்கினார்கள்,” என்றார்.
வம்சியின் நண்பர்களும் உறவினர்களும் வம்சிக்கு எதிராகவே பேசினார்கள். அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.
“அப்போதுதான் ஆர்வலப் பணிகளில் இருந்து விலகிக்கொண்டு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடத் தீர்மானித்தேன்,” என்றார் வம்சி.
அந்த சம்பவத்திற்குப் பிறகு டிசிஎஸ் பணியில் சேர்ந்தார். இருப்பினும் சமூக நலப் பணிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஓராண்டிற்குப் பிறகு தனது பணியை விட்டு விலகி PMRDF-ல் சேர்ந்தர். அதன் பிறகு தனது நண்பர் ராஜேஷ் பதுலா உடன் இணைந்து Akanksha நிறுவினார்.
சமூக மாற்றம்
கல்வியின் முக்கியத்துவத்தையும் வலிமையையும் வம்சி நன்கு உணர்ந்திருந்தார். மக்களின் வாழ்க்கையிலும் அடுத்து வரும் சந்ததியினரிடையேயும் கல்வியால் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்க்கமுடியும் என்பதே இவரது திடமான நம்பிக்கை.
வம்சி தனது கிராமத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் சிலரது படிப்பிற்கு உதவ தனது சொந்த சேமிப்பை பயன்படுத்தினார். 2015-ம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு தன்னைத் தயார்படுத்திக்கொண்டவாறே தனது முயற்சியை மேலும் விரிவடையச் செய்து கற்றல் மையம் ஒன்றைத் தொடங்கினார்.
குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க முடியாமல் கஷ்டப்படும் குடும்பங்களைக் கண்டறிவதில் Akanksha குழு முதலில் கவனம் செலுத்தியது. அதன் பிறகு பயிற்சியாளர்கள் சிலரின் உதவியுடன் இந்நிறுவனம் அந்தக் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கியது.
“2016ம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஆண்டு. சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 220-வது ரேங்க் எடுத்தேன். ஐ.ஆர்.எஸ் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி படிப்பிற்கு மட்டுமல்லாமல் விளையாட்டு, தியேட்டர், கலை, இசை, நடனம் என பாடதிட்டம் சாராத கூடுதல் நடவடிக்கைகளுக்கும் பயிற்சியாளர்களும் தன்னார்வலர்களும் கிடைத்தனர். மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமைத் திறன் வளர்ச்சிக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன,” என்றார் வம்சி.
Akanksha 'டிஜிட்டல் ஆஷா' என்கிற முயற்சியையும் செயல்படுத்தியது. இது கிராமத்தைச் சுற்றியுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிஜிட்டல் ஆய்வகங்கள் அமைப்பதற்காக தொடங்கப்பட்ட முயற்சியாகும்.
நன்கொடை மற்றும் கூட்டுநிதி மூலம் இந்த என்ஜிஓ கிராமத்தில் மூன்று கம்ப்யூட்டர் லேப் தொடங்கியது. அத்துடன் ஆந்திரப்பிரதேசம், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் படிப்பிற்கு உதவியது.
“மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது மன நிறைவை அளிக்கிறது. எனவே என்னுடைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட விரும்புகிறேன். வரும் நாட்களில் 500 மாணவர்களின் படிப்பிற்கு உதவ விரும்புகிறேன். என் கிராமத்தின் அருகில் மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் குருகுலம் ஒன்றை அமைக்கவும் விளையாட்டு அகாடெமி அமைக்கவும் விரும்புகிறேன்,” என்றார் வம்சி.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா