துபாய் பணியை துறந்து தன் சொந்த கிராமத்தில் சேவை புரியும் பேராவூரணி இளைஞர்!
31 வயதான நிமல் ராகவன் நல்ல சம்பளத்துடன்கூடிய பணியை விட்டு விலகி கஜா புயலால் சேதமடைந்த பேராவூரணி பகுதி மற்றும் விவசாயிகளை மீட்டெடுக்க தன்னார்வத் தொண்டு நிறுவனம் தொடங்கினார்.
2018-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை கஜா புயல் புரட்டிப்போட்டது. வீடுகள் சிதைந்துபோயின. மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன. நீர்நிலைகள் அசுத்தமாகி மாசு படிந்தன. கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. அந்தமான் தீவுகளில் காற்றழுத்த மண்டலமாக உருவாகி பின்னர் புயலாக மாறி தீவிரமடைந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதி, தென்னை உள்ளிட்ட மரங்கள், செடிகள் என பசுமையாகக் காட்சியளிக்கும். கஜா புயல் இந்தப் பகுதியை மோசமாக சேதப்படுத்தியது. விவசாயிகளின் பல ஆண்டு கால உழைப்பு நொடியில் அழிந்துபோனது. பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது.
31 வயதான நிமல் ராகவனின் சொந்த ஊர் பேராவூரணி. அவர் துபாயில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கஜா புயல் பாதித்த சமயத்தில் நிமல் பேராவூரணியில் இருந்துள்ளார். அந்தப் பகுதி அழிந்து நாசமானதைக் கண்டு வேதனையடைந்தார். தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று தீர்மானித்தார்.
“என் அப்பா ஒரு விவசாயி. விவசாயத்தின் மூலம் அவர் ஈட்டிய வருவாயைக் கொண்டே அன்றாட செலவுகளை சமாளித்தோம். பள்ளிக் கட்டணத்தை அதன் மூலமாகவே அவர் கட்டினார். விவசாயத்தையே நம்பியுள்ள கிட்டத்தட்ட 300-க்கும் அதிகமான குடும்பங்கள் இந்தப் புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தெரிந்துகொண்டபோது என்னால் அமைதியாகக் கடந்து சென்றுவிட முடியவில்லை. என்னால் இயன்ற உதவியை செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன்,” என்று நிமல் தெரிவித்தார்.
பள்ளியில் சீனியர் மாணவரான நவீன் ஆனந்தனுடன் இணைந்து நிமல் பேரிடர் நிவாரண பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தினார். தனது பகுதி மட்டுமல்லாது சுற்றியுள்ள சுமார் 90 கிராமங்களையும் இணைத்துக்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் சாலைகள் சீரமைப்புப் பணி, மின் இணைப்புகள் சீரமைப்பு, மரம் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நிமலின் முயற்சி அத்துடன் முடிந்துவிடவில்லை. உள்ளூர் மக்கள் பலர் இந்த முயற்சியில் இணைந்துகொண்ட பிறகு தனது பணிகளை மேலும் விரிவுபடுத்தினார். அந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயத்தைத் கைவிடக்கூடாது என்பதற்காக நிலையான விவசாய நடைமுறைகளை ஆராய்ந்தார்.
இதற்காக கடைமடை ஏரியா இண்டெக்ரேடட் ஃபார்மர்ஸ் அசோசியேஷன் (KAIFA) அமைத்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை புதுப்பிப்பதற்காக வாய்ப்புகள் ஆராயப்படுவதே இந்த அமைப்பின் நோக்கம்.
நிலையான தீர்வுகள்
நிமல் பேராவூரணியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு புதுக்கோட்டையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படித்தார். இதை முடித்த கையோடு புனேவில் ஒரு கால் செண்டரில் பணிபுரியத் தொடங்கினார். அதன் பிறகு பணி காரணமாக துபாய் சென்றார்.
நிமல் தனது சொந்த ஊர் மோசமான நிலையில் சேதமடைந்ததைக் கண்டு அந்தப் பகுதியை மீண்டும் பசுமையாக மாற்றுவதில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளத் தீர்மானித்தார்.
“பேராவூரணி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நகர்புறங்களுக்கு வேலை தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதைக் கண்டு மனம் வருந்தினேன். நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கேயே தங்கியிருந்து என்னுடைய பகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் முழுவீச்சில் செயல்படத் தீர்மானித்தேன்,” என்று நிமல் நினைவுகூர்ந்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 90 கிராமங்களுக்கும் துணிகள், மளிகைப் பொருட்கள், தனிநபர் சுகாதாரப் பொருட்கள், தார்பாலின் ஷீட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை சேகரித்து விநியோகிப்பதற்காக நிமல் #BounceBackDelta என்கிற பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் தொடங்கினார். நிமல் தன்னுடைய முயற்சியில் நண்பர்கள் மற்றும் ஒத்த சிந்தனையுடையவர்களை இணைத்துக்கொண்டார். பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள கிராம மக்கள் மற்றும் உள்ளூர் மக்களை ஒருங்கிணைத்தார்.
“மக்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்பட சற்று அவகாசம் தேவைப்பட்டது. ஆனால் அப்படி நம்பிக்கை ஏற்பட்டதும் அனைவரும் களமிறங்கி மின் இணைப்புகளை சீரமைப்பது, சாலைகளை சீரமைப்பது, மரம் நடுதல் என அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டனர். மக்களிடம் இருந்த ஆர்வத்தைக் கண்டு #DeltaSaplingChallenge என்கிற மற்றொரு பிரச்சாரத்தைத் தொடங்கினேன். விரைவில் இதன் மூலம் கணிசமான தொகை திரட்டப்பட்டது,” என்றார்.
நிலைமை ஓரளவிற்கு சீரானதும் விளைநிலங்களை மீட்டெடுக்கத் தீர்மானித்தார். இந்த சமயத்தில்தான் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை மிகப்பெரிய சவாலாக இருந்ததை உணர்ந்தார்.
அந்தப் பகுதிக்கு 50 முதல் 60 சதவீத தண்ணீர் காவிரியில் இருந்தே பெறப்பட்டது. எனினும் முறையான சேமிப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் பின்பற்றப்படாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 150 டிஎம்சி தண்ணீர் வீணாக்கப்பட்டது. நிமலின் KAIFA இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தது.
KAIFA முதல் பிராஜெக்டின் மூலம் பேராவூரணி ஏரி தூர்வாறப்பட்டது. 564 ஏக்கர் பரப்பளவு கொண்டு இந்த பிரம்மாண்ட ஏரி 6,000 ஏக்கர் நிலத்தில் பாசனம் செய்யும் திறன் கொண்டது. இந்தப் பணியில் நிமலுக்கு உதவ 70-க்கும் மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்தனர். மூன்று மாதங்களுக்குள்ளாகவே இக்குழுவினர் இந்த ஏரியின் ஆழத்தை அதிகப்படுத்தினர்.
“ஆரம்பத்தில் எங்களிடம் 21,000 ரூபாய் இருந்தது. ஆனால் விரைவில் பலர் பங்களித்தனர். மூன்று மாதங்களுக்குள்ளாகவே ஏரியின் ஆழத்தை அதிகப்படுத்தி கரையை நான்கு முதல் ஐந்து மீட்டர் அளவிற்கு உயர்த்தினோம். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணித் துறை எங்களது முயற்சிக்கு ஆதரவளித்து அதிக சிக்கலின்றி தேவையான அனுமதிகளை வழங்கியது,” என்று நிமல் விவரித்தார்.
அதுமட்டுமின்றி நிமல் மற்றும் குழுவினர் ஒன்றிணைந்து டெல்டா பகுதிகளில் இருந்த 54 ஏரிகளை புதுப்பித்தனர். மேலும் பயன்பாட்டில் இல்லாத பல்வேறு போர்வெல்களை மழை நீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்றினார்கள்.
போராட்டங்கள்
நிமல் இந்த முயற்சிகளை மேற்கொள்வதற்காக துபாயில் அதிக சம்பளத்துடன்கூடிய வேலையை ராஜினாமா செய்தபோது அவரது உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் அவரை கேலி செய்துள்ளனர். ஆனால் நிமல் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
“நான் மிகவும் கடினமாக முடிவெடுக்கவேண்டியிருந்தது. என் அப்பாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர் விவசாயத்தை கைவிட்டார். என் குடும்பம் என் வருவாயை மட்டுமே சார்ந்திருந்தது. இருப்பினும் என் சொந்த ஊரைச் சேர்ந்த மக்களுக்கு உதவவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்,” என்றார் நிமல்.
நிமலின் மன உறுதியாலும் அர்ப்பணிப்பாலும் இன்று 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்திற்குத் திரும்பியுள்ளன. நிலையான விவசாய முறைகள் குறித்த புரிதல் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் தென்னை மரங்கள் மட்டுமல்லாது அரிசி, கோதுமை, காய்கறி உள்ளிட்ட விரைவாக விளைச்சல் தரக்கூடிய பயிர் வகைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா