மீன் வளர்ப்புடன் காய்கனி சாகுபடி: எதிர்கால விவசாயப் புரட்சி Aquaponics பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
அக்வாபோனிக்ஸ் என்றால் நேரடியாக நிலத்தைப் பயன்படுத்தாமல், மீன் வளர்ப்போடு சேர்த்து நீரிலேயே காய்கறிகளையும் விளையச் செய்வது. இந்த முறைதான் எதிர்கால உலகில் விவசாயத்தில் புதிய புரட்சி செய்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முக்கிய அங்கம் வகிக்கப் போகிறது.
நெதர்லாந்தில் உள்ள இந்தோவன் தொழிற்பூங்காவின் நடுவில் பழைய பால் பொருள் தயாரிப்பு ஆலையின் நடுவே ஓர் ஊதா நிறத்தில் ஓளிரும் விண்கலம் போல ஜொலிக்கிறது ’ஃபுட் ஃபார்ம்’ என்ற பசுமை இல்ல பண்ணை. ஓளிரும் இந்த விண்கலம் பறக்காது, ஆனால் இது எதிர்காலத்தில் வேளாண்மையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லத் தயாராக உள்ளது.
ஐந்து இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்தப் பண்ணையில், வாரம்தோறும் சுமார் 200 கிலோ லெட்டூஸ் (முட்டைகோஸ் போல இருக்கும் இது பாஸ்ட்புட்டில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்) கிடைக்கிறது. டென்னிஸ் கோர்ட்டை விட மிகவும் சிறிய இடத்தில் அக்வாபோனிக்ஸ் (aquaponics) என்ற நவீன முறையில் இவர்கள் விவசாயம் செய்து இந்த விளைச்சலைப் பெற்று வருகின்றனர்.
’அக்வாபோனிக்ஸ்’ கேட்பதற்கு வித்தியாசமாக, புதியதாக இருக்கிறதா? ஆம், விவசாயத் துறைக்கு இது புதிது தான். ஆனால் எதிர்கால விவசாயத்தில் இது முக்கிய இடத்தைப் பிடித்து புதிய புரட்சியையே செய்யும் என்கிறார்கள் இந்த ஐந்து இளைஞர்கள்.
சரி, முதலில் அக்வாபோனிக்ஸ் என்றால் என்ன என்று பார்க்கலாம். அதாவது நேரடியாக நிலத்தைப் பயன்படுத்தாமல், மீன் வளர்ப்போடு சேர்த்து நீரிலேயே காய்கறிகளையும் விளையச் செய்வது தான் அக்குவாபோனிக்ஸ். சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரே கல்லில் விவசாயிகள் இரண்டு மாங்காய் பறிக்கும் யுக்தி.
தொடர்ந்து ஒரே மாதிரியான பயிர்களை மட்டுமே பயிர் செய்வது மற்றும் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் கொஞ்சம் கொஞ்சமாக மலடாகி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலும் பெரும்பாதிப்பை சந்தித்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
வாகனப் பெருக்கத்தால் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உணவு உற்பத்தியின் மூலமாகவும் ஐந்தில் ஒரு பகுதி பசுமை இல்ல வாயு வெளியாவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, உலகத்தில் உள்ள 70 சதவீத குடிநீர் விவசாயத்திற்கே பயன்படுத்தப் படுவதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதனால் வருடத்தின் பல மாதங்கள் உலகின் பல பகுதிகளில் உள்ள மக்கள் போதிய குடிநீர் இல்லாமல் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர்காலத்தில் இந்த அக்வாபோனிக்ஸ் விவசாய முறை நல்லதொரு தீர்வைத் தரும் என்கிறார்கள் ஃபுட் ஃபார்ம் நிர்வாகிகள். காரணம் இந்த புதிய முறையில், வழக்கத்தைவிட 90 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
கிரீன்ஹவுஸில், ஆவியாகும்போது அல்லது தாவரங்களால் உறிஞ்சப்படும் போது மட்டுமே தண்ணீர் இழக்கப்படுகிறது என்கிறார் ஃபுட் ஃபார்ம் இணை நிறுவனர் டிம் எல்ஃப்ரிங்.
அக்வாபோனிக்ஸ் முறையில் செடிகளை வளர்ப்பது ஒன்றும் அவ்வளவு கடினமானதில்லை. விதைகளில் இருந்து லெட்டூஸின் செடிகள் முளைக்கத் தொடங்கியதும், அதன் வேர்கள் நீரில் மூழ்கி உள்ளவாறு அமைக்கப்படுகிறது. அறுவடை செய்வதற்கு முன்னதாக சுமார் ஐந்து முதல் ஆறு வாரங்கள் லெட்டூஸ் இப்படி நீரில் மிதந்த நிலையிலேயே வளர்கின்றன.
இந்த ஆலையில் லெட்டூஸ் வளரும் தொட்டிகளுக்கு முன்னால் இரண்டு பெரிய குளங்கள் உள்ளன, பொதுவாக காற்று, மண் மற்றும் நீரிலிருந்து உருவாகும் இயற்கை பாக்டீரியாக்கள், மீன்களின் கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மையுள்ள அம்மோனியாவை நைட்ரேட்டாக மாற்றுகின்றன. இந்த நைட்ரேட்டை லெட்டூஸ் கிரிகித்துக் கொண்டு செழித்து வளர்கின்றன. இவ்வாறு தாவரங்கள் நைட்ரேட்டை கிரகித்துக் கொள்வதால், தண்ணீர் தூய்மையாகிறது. இது மீன்கள் வளரும் குளத்தில் மீண்டும் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அக்வாபோனிக்ஸ் அமைப்பில் தாவரங்கள் மீன்களின் கழிவுகளை உரமாக எடுத்துக் கொள்வதால் கூடுதல் உரம் தேவையில்லை. அதே நேரத்தில் குளமும் சுத்தரிகரிக்கப்படுகிறது என்று எல்ஃப்ரிங் கூறுகிறார்.
மேலும், இந்த அமைப்பு ஓர் மூடிய கட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால் பூச்சிகள் தாக்குதலுக்கு வாய்ப்பில்லாததால், பூச்சிக்கொல்லிகளும் தேவையில்லை. வழக்கமான மீன் வளர்ப்புடன் ஒப்பிடுகையில், மகசூலும் கணிசமாக அதிகமாக இருக்கிறது என்கிறார் லீப்னிஸ் நன்னீர் சூழலியல் மற்றும் உள்நாட்டு மீன்வளத் துறை விஞ்ஞானி வெர்னர் க்ளோஸ்.
"உங்களிடம் 10 லிட்டர் தண்ணீர் இருந்தால், நீங்கள் 2.5 கிராம் மீன்களை ஒரு மூடிய மறுசுழற்சி முறையில் உற்பத்தி செய்யலாம், அதேபோல் முழுமையாக உருவாக்கப்பட்ட அக்வாபோனிக்ஸ் அமைப்பு மூலம், 100 கிராம் மீன்களைப் பெறலாம், அதே நேரத்தில் 500 கிராம் தக்காளியையும் உற்பத்தி செய்யலாம்," என்கிறார்.
தக்காளி, கத்தரிக்காய், கீரைகள், மூலிகைகள் மற்றும் காய்கறிகளை கூட இவ்வாறு வளர்க்கலாம். கோட்பாட்டளவில், தானியங்கள் மற்றும் சோளத்தைக் கூட அக்வாபோனிக்ஸ் முறையில் நடவு செய்வது சாத்தியமாகும். ஆனால் அதற்கான உள்கட்டமைப்பு முதலீடு மிக அதிகமாக இருக்கும். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அதிக நீர்த் தேவைப்படும் பழங்கள் மற்றும் தாவரங்கள் இம்முறையில் நடவு செய்ய பொருத்தமானவை அல்ல.
கடலில் அதிகளவில் மீன்களை பிடிப்பதால், கடல் சுற்றுச்சுழல் பாதிப்புக்குள்ளாகிறது. இதற்கான மாற்றுத் திட்டமாக அக்வாபோனிக்ஸ் முறையில் அதிகளவில் மீன்களையும் வளர்த்து நாம் உணவுத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் மீன் வளமும், கடல் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
உலகளவில் அதிகமாக பிடிபடும் மீன்களில் சுமார் 20 சதவிகிதம் மீன்கள் வளர்ப்புத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று சுற்றுச்சூழல் அமைப்பு WWF கூறுகிறது. ஜிலேபி மற்றும் கெண்டை போன்ற மீன்கள் தாவரங்களுக்கு அதிகளவில் அம்மோனியாவை அளிக்கக்கூடியவை. இதன்மூலம் அக்வாபோனிஸ் விவசாய முறைக்கு இந்த மீன்கள் மிகுந்த பயன் அளிப்பவையாக உள்ளன.
வங்கதேச வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி அப்துஸ் சலாமின் கருத்துப்படி ஆப்பிரிக்கா, ஆசியா அல்லது லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளரும் நாடுகளில் இதுபோன்ற அக்வாபோனிக்ஸ் மறுசுழற்சி அமைப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுமார் 10 சதுர மீட்டர் (108 சதுர அடி) இடத்தில் உள்ள இந்த அக்வாபோனிக்ஸ் அமைப்பில், பங்களாதேஷில் உள்ள ஒரு குடும்பம் "ஆண்டு முழுவதும் தங்களுக்குத் தேவையான கிட்டத்தட்ட 70 சதவிகிதம் காய்கறிகளை அறுவடை செய்யலாம்" என்கிறார்.
பருவநிலை மாற்றத்தால் அதிகளவில் பாதிக்கப்படும், மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட வளரும் நாடுகளில் இம்முறை மிகுந்த பயனளிப்பதாக உள்ளது. இந்த அக்வாபோனிக்ஸ் விவசாய முறையை நகரம் மற்றும் கிராமங்களில் செய்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம் என்றும் தெரிவிக்கிறார்.
நாள்தோறும் அதிகரித்து வரும் உலக மக்கள்தொகை மற்றும் பற்றாக்குறையான வளங்களுள்ள நாடுகளின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க, உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய அக்வாபோனிக்ஸ் விவசாய முறை எதிர்காலத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என்கிறார் வெர்னர் க்ளோஸ்.
டச்சு நிறுவனமான ஒமேகா பார்ஸ் அக்வாபோனிக்ஸ் அமைப்பை எப்படி செய்ய வேண்டும் என விளக்கிறது. மீன் பண்ணை, அதனோடு இணைந்த தக்காளி தோட்டத்துடன் பகிரப்பட்ட நீர் மற்றும் ஊட்டச்சத்து சுழற்சியை நிறுவி வெற்றி பெற்றுள்ளது.
என்னுடைய பார்வையில் இன்னும் 5 முதல் 10 வருடங்களில் அக்வாபோனிக்ஸ் மட்டுமே விவசாய முறையாக இருக்கும் என்கிறார் க்ளோஸ். மீன் மற்றும் தாவர உற்பத்தி மேம்பாட்டு முறையான அக்வாபோனிக்ஸ் எதிர்கால உணவுப் பாதுகாப்பின் ரகசியமாக இருக்கும் என்கிறார்.
அக்வாபோனிக்ஸ் என்கிற விண்கலம் இன்று புறப்படத் தயாராக தரையில் காத்திருக்கிறது. எதிர்காலத்தில் அது விண்ணில் சீறிப் பாய்ந்து விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியை விண்ணுயரச் செய்ய காத்திருக்கிறது என நம்பலாம்.
ஆங்கிலத்தில் அஞ்சு நாராயணன் | தமிழில் பரணீதரன்.