மண்ணில்லா விவசாயமுறை மூலம் 8 கோடி விற்றுமுதல் ஈட்டும் சென்னை ’Future Farms'
Hydrophonics எனும் மண்ணில்லாமல் செடி மற்றும் தாவரங்கள் வளரும் விவசாயமுறை செய்யும் நிறுவனம் தொடங்கிய ஸ்ரீராம் கோபால் இன்று அதை நாடெங்கும் விரிவாக்கம் செய்து வருகிறார்.
சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார் ஸ்ரீராம் கோபால். 5 வருடங்களுக்கு முன் அவரின் நண்பர் யூட்யூபில் காண்பித்த வீடியோ அவரின் வாழ்க்கையையே இன்று மாற்றி அமைத்துள்ளது. Hydrophonics எனும் மண்ணில்லாமல் செடி மற்றும் தாவரங்கள் வளரும் முறையை பற்றிய யூட்யூப் வீடியோ தான் அது. அதைப் பார்த்த ஸ்ரீராம் அந்த விவசாய முறையால் ஈர்க்கப்பட்டு அதை ஒரு தொழிலாக செய்ய முடிவெடுத்தார்.
ஹைட்ரோபோனிக்ஸ் துறையின் உலக சந்தை மதிப்பு சுமார் $6934 மில்லியனாக உள்ளது. வரும் 2025க்குள் இது $12106 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Hydrophonics முறை என்றால் என்ன?
காய்கறிகள், செடிகள் மற்றும் தாவரங்களை சமமான நிலம் அல்லது வீடுகளிலேயே வெறும் தண்ணீர் மட்டும் கொண்டு மண் இல்லாமல் வளர்க்கக்கூடிய முறையே ஹைட்ரோபோனிக்ஸ். இது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு விவசாய முறையாக உள்ளது.
இத்துறையில் கால்பதித்துள்ள சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கோபால், 'Future Farms' என்று ஸ்டார்ட்-அப்’ நிறுவனமாக தொடங்கி Urban Farmer அதாவது நகர விவசாயி ஆகியுள்ளார். 2014ல் தொடங்கப்பட்ட future farms அதிவேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக 34 வயதாகும் அந்நிறுவனத்தில் சிஇஒ மற்றும் நிறுவனர் ஸ்ரீராம் கோபால் தெரிவிக்கிறார்.
“Future Farms 2015-16ல் 38 லட்சம் விற்றுமுதல் கண்டது. பின் 2016-17ல் ரூ.2 கோடி விற்றுமுதல் அடைந்தது. அது அடுத்த ஆண்டு மூன்று மடங்கு உயர்ந்து 300% வளர்ச்சி அடைந்தது, கடந்த ஆண்டு ரூ.7 கோடி விற்றுமுதல் பெற்றது,” என்கிறார் ஸ்ரீராம்.
தற்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறை, இடமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஹைட்ரோபொனிக்ஸ் முறை சரியான தீர்வாக இருக்கும் என்கிறார் மேலும். இம்முறையில் கீரை வகைகள், கத்தரிக்காய், புதினா, என்று பலவகையாக காய்கறிகளை விளைவிக்கமுடியும். இதற்கு முக்கியத்தேவையான தண்ணீர், ஊட்டச்சத்து மற்றும் சூரிய ஒளி இருந்தால், வீட்டின் மொட்டை மாடி, சிறிய நிலப்பகுதி என எங்கும் பயிரிடமுடியும்.
எம்பிஏ முடித்துவிட்டு யூகே-வில் பணிபுரிந்த ஸ்ரீராம், சென்னை திரும்பி தனது சொந்த ஐடி நிறுவனத்தை நடத்தி வந்தார்.
“நான் என் மூன்று நண்பர்களுடன் இணைந்து தலா 5லட்சம் முதலீட்டில் தொடங்கிய ஐடி நிறுவனம் 2 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி பெற்றது. சுமார் 2 கோடி விற்றுமுதல் பெற்று அது நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதில் சவாலாக எதுவும் தற்போது இல்லாததால் ஹைட்ரோபோனிக்ஸ் பக்கம் என் கவனத்தை திருப்பினேன்,” என்கிறார்.
இப்பொழுதும் ஐடி நிறுவனத்தில் பங்கு வகிக்கும் ஸ்ரீராம், ஹைட்ரோபோனிக்ஸ் துறையை இந்தியா முழுதும் தனது நிறுவனம் மூலம் விரிவாக்க தீவிரமாக உழைத்து வருகிறார்.
Future Farms 70 பேர் கொண்ட குழுவுடன் 16 வகையான பயிர்களை வளர்கின்றன. சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நாடு முழுதும் 10 மாநிலங்களில் இவர்களின் ஃபார்ம்கள் உள்ளது. டெல்லி, குஜராத், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா என எல்லா முக்கிய மாநிலங்களிலும் இவர்களின் விவசாயமுறை ஃபார்ம்கள் உள்ளன.
Future Farms இம்முறையின் மூலம் 90 சதவீத தண்ணீர் பயன்பாட்டை குறைத்து, விவசாய செலவுகளை பாதியாக குறைத்துள்ளது என்கிறார் ஸ்ரீராம். அதே சமயம் பயிர்களின் விளைச்சலும் அதிகரித்து, 120-160 டன்கள் முதல் 250-270 டன்களை வரை ஆண்டுக்கு செய்துள்ளதாக கூறுகிறார்.
“இந்த நகர விவசாய தொழில்நுட்பம் 100% தூய்மான ஒன்று. இதில் பூச்சிக்கொல்லி கெமிக்கல் மீதம் இருப்பதில்லை. குறைந்த மனித உழைப்போடு, குறைந்த செலவில் அதிக லாபமும், விளைச்சலும் கிடைத்து சத்தான காய்கறிகள் கிடைக்கின்றது,” என்கிறார்.
இந்நிறுவனம் ஹைட்ரோபோனிக் கிட்களை அவர்களின் இணையதளம் மூலம் 999 ரூபாய் முதல் 69,999 வரை விற்பனை செய்கின்றது. 200 சதுர அடி ஹைட்ரோபோனிக் ஃபார்மை நிறுவ சுமார் 1லட்ச ரூபாய் ஆகும். இந்த முதலீட்டை வருவாயாக 24-30 மாதங்களில் சம்பாதிக்கமுடியும் என்கிறார்.
வலைதளம்: Future farms