‘காய்கறிக்காரர்’-னு கூப்டவங்க ‘டாக்டர் அப்பா’-னு கூப்பிட வெச்சது பெருமை - Dr.சிவகாமியின் இன்ஸ்பிரேஷன் கதை!
தெருவோரத்தில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்த ரத்தினத்தின் மகள் மருத்துவர் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கல்வி ஒன்றே வாழ்க்கையை முன்னேற்றும் என்ற லட்சியத்துடன் படித்து மருத்துவம் முடித்து இன்று வெளிநாட்டில் ரேடியாலஜிஸ்டாக இருக்கிறார் Dr.சிவகாமி.
'காய்கறிக்காரரே' என்று என் அப்பாவை அழைத்தவர்கள் பிறகு 'டாக்டர் அப்பா' என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு ரொம்பவும் பெருமையா இருந்துச்சு என்னுடைய வாழ்க்கையில கல்வி மேல எனக்கு அக்கறை வரத்துக்கு அந்த மழை தான் காரணம் அந்த மழை தான் என் வாழ்க்கையில் கல்வியின் தரத்தை உயர்த்தியது. எனக்கும் வாழ்க்கையை புரிய வைத்தது.
டாக்டர் சிவகாமி ஆன கதை
தெருவோரத்தில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்த ரத்தினத்தின் மகள் மருத்துவர் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலை ஓரத்தில் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்து, மூன்று பெண் இரண்டு ஆண் குழந்தைகள் என வசித்து வந்தவர் ரத்தினம். முடிந்தவரை பிள்ளைகளை படிக்க வைக்க முயன்றார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்த நிலை அப்பாவின் சிரமத்தை அறிந்தவர்களாகவே இரண்டு பிள்ளைகளும் அப்பாவை போலவே காய்கறி கடையில் வேலைக்கு வந்தனர். சிவகாமி மட்டும் படிப்பில் ஆர்வமானவராக ஆனார். அதுவும் கூட நான்காவது படிக்கும் போது தான் எனக்கு கல்வி மீது ஆர்வம் வந்தது என்கிறார் சிவகாமி.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சாமரோவ் பள்ளியில் படித்து வந்த சிவகாமி, ஒரு நாள் பள்ளியில் இருக்கும் பொழுது பெய்த கனமழை மாணவர்களிடையே ஒரு உரையாடலை நிகழ்த்தியது. ஒவ்வொருவரும் தன்னுடைய பெற்றோர்கள் இந்த மழை நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்று பேசிக்கொண்டனர்.
அப்போது சாலை ஓரத்தில் கடை வைத்துக் கொண்டிருக்கிற தன்னுடைய பெற்றோர்கள் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்தார் சிவகாமி. அதை அவரே சொல்கிறார்.
“எல்லோரும் வசதியான குடும்பத்தில் இருப்பவர்கள் மழை நேரத்தில் ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்களை அடைகாத்துக் கொள்வார்கள். ஆனால், சாலை ஓரத்தில் வெயில், மழை என கடை நடத்தி அதில் வருகிற வருமானத்தை வைத்து தான் என்னுடைய அப்பா எங்கள் குடும்பத்தை வழிநடத்தி வருகிறார். இப்போது பெய்கிற இந்த அடை மழையில் அவர் வைத்திருக்கும் கடை என்ன நிலையாக இருக்கும். நமக்காகத்தானே இவ்வளவு சிரமப்படுகிறார் அப்பா என்று தான் மிகவும் வருந்தியதாக, கூறுகிறார்.
அதற்கு பலனாக தன்னுடைய அக்கறை முழுவதும் கல்வியில் இருக்க வேண்டும் என முடிவு செய்து அன்றிலிருந்து கல்வி மீது மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டதாக சொல்லுகிறார் சிவகாமி.
கல்வியே வாழ்வின் வெளிச்சம்
நான்காம் வகுப்பில் இருந்து பள்ளி இறுதி ஆண்டு வரையிலும் தான் முதல் மதிப்பெண் தான் எடுத்து வந்ததாகவும், மருத்துவம் படிக்க கல்லூரிக்கு சென்ற போது கூட முதல் மதிப்பெண்ணிலே தொடர்ந்ததாகவும் அதனை தொடர்ந்து மருத்துவ உயர்கல்விக்காக தான் உத்தர பிரதேசத்தில் மூன்று ஆண்டுகள் ரேடியாலஜி படிக்கும் போது வரை தொடர்ந்து முதல் மதிப்பெண்ணே எடுத்து வந்ததாக சொல்லுகிறார் சிவகாமி.
இவை அனைத்தும் தனக்காக சிரமப்பட்டு வரும் அப்பாவுக்கும் அம்மாவுக்குமே சமர்ப்பணமாக இருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.
பத்தாம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு 460 மதிப்பெண் எடுத்திருக்கிறார் சிவகாமி. பனிரெண்டாம் வகுப்பில் 1200 மதிப்பெண்ணுக்கு 1134 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்ததாகவும் சொல்லுகிறார். எல்லாவற்றை விட தான் தமிழ் வழி கல்வியில் படித்ததாக பெருமையோடு கூறிக் கொள்ளுகிறார் சிவகாமி.
சுமார் பத்துக்கு 20 அளவு கொண்ட வாடகை வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார். சிவகாமி படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வீட்டில் டிவி கூட வாங்கி வைக்க வில்லையாம் அவருடைய அப்பா. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் டிவி வாங்கி இருக்கிறார்கள் ஆனால் கூட அந்த டிவியை சிவகாமி படிக்கும் பொழுது யாரும் பார்ப்பது இல்லையாம்.
தனக்காக தங்களுடைய கேளிக்கை ஆசைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ளாத குடும்பத்தை எண்ணி தன்னுடைய கவனத்தை முழுவதுமாகவே படிப்பில் செலுத்தி இருக்கிறார் சிவகாமி.
மருத்துவம் படிக்க ஆசை வந்தது எப்படி?
பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. இப்போது போல அப்போது நீட் தேர்வு எதுவும் கிடையாது. நுழைவுத் தேர்வு மட்டுமே இருந்து வந்த நிலையில், அதற்காக பயிற்சி எடுக்க பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
சிவகாசி அப்போது தனக்கு ஆசிரியராக இருந்த சாந்தாபாய் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் தங்களுக்கு தெரிந்த ஒரு கோச்சிங் சென்டரில் குறைந்த கட்டணத்தில் சேர்த்து விட்டதாகவும் அதற்கான தொகையை கூட அவர்களே செலுத்தியதாக மெய் சிலிர்க்கிறார்.
அப்போது, மருத்துவம் மேல்படிப்பு படிக்க தனது நண்பர்கள் மூலம், மருத்துவர் பன்னீர்செல்வம் முயற்சியுடன் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சிவகாமிக்கு ஒன்றரை லட்சம் ரூபாயை வழங்கியிருக்கிறார்.
மேலும், இவரைப் பற்றிய செய்தி வந்த செய்தித்தாள்களில் பார்த்த நல்ல உள்ளங்கள் 100 ரூபாயில் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரையும் சிவகாமியின் படிப்பிற்காக வழங்கி இருக்கிறார்கள். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற சிவகாமி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு தேர்வாகி கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறார்.
”தமிழ் மீடியத்துல படிச்சிட்டு வந்ததால எனக்கு பெரிய அளவில் ஆங்கிலம் பேசவே தெரியல என்னோட படிக்கிறவங்க எல்லோரும் ஆங்கில வழிக் கல்வியில் படிச்சிட்டு வந்தவங்க எல்லாரும் சரளமாக ஆங்கிலம் பேசுறாங்க எனக்கு அவங்க முன்னாடி கூனிக்குறுகி நிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுச்சு. ஆனாலும் நான் சோர்ந்து போகல. ஆங்கிலமும் கத்துக்க ஆரம்பிச்சேன் கல்லூரியில் படித்த ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுல நான்தான் முதல் மதிப்பெண்.”
எங்க அப்பாவுக்கு இது எல்லாம் ரொம்ப பெருமையா இருக்கும். காலைல நாலு மணிக்கு அப்பாவும் அம்மாவும் எழுந்திரிப்பாங்க. அப்ப எல்லாம் மாட்டு வண்டியில் போய் தான் காய்கறி வாங்கிட்டு வரணும். காய்கறி வாங்கிட்டு வந்து அஞ்சு மணிக்கு எல்லாம் திருவல்லிக்கேணி பகுதியில் தெருவோரத்தில் ஒரு கடையில் உட்கார்ந்து வியாபாரத்து தொடங்குவார் அப்பா.
போகும்போது வரும் போதெல்லாம் ’காய்கறிகாரரே' என்று கூப்பிட்டவங்க நான் கல்லூரி முடிச்ச உடனே ’டாக்டர் அப்பா’-ன்னு எங்க அப்பாவ கூப்பிட ஆரம்பிச்சாங்க எனக்கு அது ரொம்பவும் பெருமையா இருந்துச்சு.
ரேடியாலஜி துறையில் சிவகாமி
எம்பிபிஎஸ் படிச்சி முடிச்ச உடனே அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று, அதற்குப் பிறகு ரேடியாலஜி படிக்கணும்னு ஒரு ஆர்வம் இருந்தது.
அதுக்காக உத்தரப்பிரதேசத்தில் இருக்கிற ஒரு கல்லூரியில் சேர்ந்து எம்டி படிக்கத் தொடங்கினேன் மூன்று ஆண்டுகள் அங்கேயும் முதல் மதிப்பெண் தான். இவ்வளவும் படிச்சு முடிச்ச பிறகு புதுச்சேரியில் இருக்கிற மனக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த ரெண்டு வருஷம் அங்க வேலை செஞ்சேன்.
அதற்குப் பிறகு, சென்னையில் இருக்கிற அப்போலோ மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தேன். இதற்கிடையில் என்னுடைய காதல் கணவர் பிரதீப் குமார் அவர் ஒரு பொறியாளர். வீட்ல அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு இரு வீட்டார் சம்மதத்தோட திருமணம் செஞ்சுக்கிட்டோம். எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தைங்க பிரகதி, செந்தமிழ்.
என்னுடைய கணவர் ஓமன் நாட்டுல வேலைக்கு போயிருந்தார் அப்போ அங்க இருக்கிற ஒரு மிகப்பெரிய ’திவான் ஹெல்த் சென்டர்’ மருத்துவமனையில் மருத்துவரா எனக்கும் வேலை கிடைத்தது.
“சொந்த நாட்டிலே படிச்சிட்டு வேலை செய்யணும்னு எனக்கு ஆசை இருந்தாலும் பொருளாதார ரீதியா ரொம்பவும் நசுங்கிப் போன குடும்பங்கள்ல எங்க குடும்பமும் ஒன்னு அது உயர்த்தனும் அப்படிங்கறதுக்காக நான் ஓமனுக்கு வேலைக்கு போனேன். நல்ல வருமானம். அதுக்கு பிறகு இப்ப துபாய் அமீரகத்தில் ஒரு பெரிய மருத்துவமனையில் மருத்துவரா வேலை செய்கிறேன்.”
கடந்த கொரோனா காலத்துல என்னுடைய அப்பா அந்த நோய்க்கு பலியானார் அவருடைய நினைவு இன்னமும் என்கிட்ட இருந்து கிட்டே தான் இருக்கு. ஆனாலும் அவர் இல்லாத ஒரு நிலையை எண்ணி பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் வந்துரும்.
அம்மாவுக்கு சர்க்கரை நோய் கூட இருந்து பார்த்துக்கணும் ஆனாலும் நான் வெளிநாட்டில் வேலை செய்யறதுனால இப்பயும் ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை அம்மாவை வந்து பாத்துட்டு போறேன்.
“நான் எவ்வளவு சிரமப்பட்டு படித்து வந்தேனோ அந்த சிரமங்களை எல்லாம் என்னுடைய குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டு வருகிறேன். அவங்களும் சமூகத்தில் ஒரு தலை சிறந்தவங்களா வரணும்னு எனக்கு ஆசை.”
என்னுடைய மகளுக்கு என்னைப் போலவே மருத்துவராகணும்னு ஒரு ஆசை என்னுடைய மகனுக்கு பாதுகாப்புத் துறையில் ஏதாவது ஒரு வேலை செய்யணும் அப்படின்னு ஒரு ஆசை ஏன்னா என்னுடைய மாமனார் இந்திய ராணுவத்தில் பணியாற்றி சேவையை செய்தவர்.
அதுபோல படிப்புங்கறது ரொம்பவும் வாழ்க்கையில முக்கியம் அப்படிங்கிறத நான் நேரடியாகவே உணர்ந்தேன். இப்பயும் எனக்கு ஆசை எல்லாம் தாய் நாட்டுக்கு திரும்பி வந்து எங்க அப்பா அம்மா நினைவா ஒரு மருத்துவமனையை கட்டி ஏழைகளுக்கு ஒரு பெரிய சேவை செய்யணும் அப்படிங்கறதுதான். விரைவில் அது நிறைவேறும் அப்படின்னு நினைக்கிறேன்.
எதைக் கண்டும் நான் பிரமிச்சுப் போவதில்லை ஏன் அந்த பிரமிப்பை நம்மளால முறியடிக்க முடியாதா? அப்படிங்கற நம்பிக்கை எனக்குள்ள இன்னமும் இருந்துகிட்டே இருக்கு. எல்லோருக்குள்ளேயும் அது இருக்கணும் அப்படின்னு நான் நினைக்கிறேன். என்கிறார் சிவகாமி.
தற்போது தன்னுடைய சகோதரிகளின் குழந்தைகள் படிப்பு செலவு சகோதரர்கள் குடும்பம் அப்படின்னு எல்லாத்தையும் சிவகாமி தான் நிர்வகிக்கிறாங்க. ஏழ்மை அப்படிங்கறது கல்விக்கு ஒரு விதிவிலக்கா இருக்கக் கூடாதுங்கிறதான் அவருடைய கருத்தா எல்லாருக்கும் சொல்றாரு.
சாதாரண ஒரு காய்கறிக் கடைக்காரர் உடைய மகளாகப் பிறந்து மருத்துவத்துறையில் ஒரு மிகப்பெரிய ஆளாக இப்போதும் நிலைத்து நிற்கிற சிவகாமியின் வாழ்க்கை ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தினாலும், அது எல்லோருக்கும் சாத்தியமாக வாய்ப்புண்டு என்று எடுத்துக்காட்டாகவே வாழ்ந்து வருகிறார் சிவகாமி.
கட்டுரையாளர்: ஜோதி நரசிம்மன்
‘அம்மாவின் பூக்கடையில் கற்ற மார்க்கெட்டிங்’ - மாதம் ரூ1.5 லட்சம் வருமானம் ஈட்டும் மகன்!