முன்னுரிமை வெளியீடு மூலம் ரூ.250 கோடி திரட்ட அனுமதி பெற்ற 'வெராண்டா லேர்னிங்'
வெராண்டா லேர்னிங், பிபி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை ரூ.126.2 கோடி மற்றும் நவ்கர் டிஜிட்டல் இன்ஸ்டிடியுட் 65 சதவீத பங்குகளை ரூ.45.5 கோடிக்கும் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கல்வி நிறுவனம் 'வெராண்டா லேர்னிங்' (Veranda Learning) முன்னுரிமை வெளியீடு வாயிலாக இந்த நிதியாண்டிற்குள் ரூ.250 கோடி நிதி திரட்ட அனுமதி பெற்றுள்ளது. நிறுவனத்தின் பரந்த நிதி திரட்டும் திட்டத்தின் அங்கமாக இது அமைகிறது.
“தனிப்பட்ட வெளியீட்டிற்கு முன்னணி முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைத்த ஆதரவு ஊக்கம் அளிக்கிறது. இந்த நிதி திரட்டல் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான மூலதனத்தை சாத்தியமாக்குவதோடு, எங்கள் நோக்கம் மற்றும், வளர்ச்சியில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை உணர்த்துகிறது,” என்று வெரண்டா லேர்னிங் செயல் இயக்குனர் மற்றும் தலைவர் சுரேஷ் கல்பாத்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியை நிறுவனம் கையகப்படுத்தல், நிலுவை பரிவர்த்தனை மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்கு பயன்படுத்த உள்ளது.
வெராண்டா லேர்னிங் நிறுவனம், பிபி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை ரூ.126.2 கோடிக்கு மற்றும் நவ்கர் டிஜிட்டல் இன்ஸ்டிடியூட்டில் 65 சதவீத பங்குகளை ரூ.45.5 கோடிக்கும் கையகப்படுத்தியுள்ளது. சிஏ கல்வியாளர் பன்வர் போரனாவால் துவக்கப்பட்ட பிபி வர்சுவல்ஸ் சிஏ மாணவர்களுக்கான சிறந்த மேடையாக அறியப்படுகிறது.
'பிபி வர்சுவல்ஸ்' மூலம் வெராண்டா தனது வீச்சை அதிகமாக்கி, வணிகத் துறையில் தொழில்முறை கல்வி நாடும் மாணவர்களுக்கு மேலும் ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளது.
17 ஆண்டு கல்வி அனுபவம் உள்ள ஹித்தேஷ்குமார் ஷாவால் துவக்கப்பட்ட நவ்கர், குஜராத்தில் சிஏ மாணவர்களுக்கான சிறந்த மேடையாக அமைகிறது.
இந்த கையகப்படுத்தல்கள், சிஏ மற்றும் காஸ்ட் மேனெஜ்மெண்ட் சார்ந்த துறைகளில் நிறுவனத்தின் பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் வகுப்புகளை மேம்படுத்தும். ஜேகே ஷா வகுப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.
"இந்த கையகப்படுத்தலை நிதியாண்டிற்குள் நிறைவேற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது மற்றும் மேற்கொண்டு எந்த சமபங்கு விலக்கல் நடவடிக்கையும் இருக்காது," என சுரேஷ் கல்பாத்தி கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதம், கேரளாவின் லாஜிக் மேனேஜ்மெண்ட் டிரைனிங் கழகத்தை வெராண்டா நிறுவனம் கையகப்படுத்தியது.
நிறுவனத்தின் வணிக கல்வி திட்டத்தின் அங்கமாக, லாஜிக், ஜேகே ஷா வகுப்புகளுடன் கூட்டாக செயல்படும். BPEA இன்வெஸ்ட்மண்ட் மேனேஜர்சிடம் இருந்து பங்குகளாக மாற்ற முடியாத பத்திரங்கள் வாயிலாக ரூ.425 கோடி கடன் நிதி திரட்டிய ஒரு மாதத்தில் இது நிகழ்ந்தது.
வெரண்டா வளர்ச்சி உத்திகள் கையகப்படுத்தல் உத்தியை சார்ந்துள்ளது. 12க்கும் மேலான நிறுவனங்களை கையகப்படுத்த ரூ.1000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. நிறுவனம், தனது இயக்குனர் குழுமத்தை மேலும் தொழில்மயமாக்கும் வகையில், பேராசிரியர்கள் ஜிதேந்திர காந்திலால் ஷா, அசோக் மிஸ்ரா, என்.அலமேலு ஆகியோரை குழுவில் நியமித்துள்ளது.
முன்னதாக நிர்வாக தொழில்மயமாக்கல் நோக்கத்துடன், குழும தலமை செயல் அதிகாரியாக ஆதியா மாலிக்கை நியமனம் செய்தது. வெராண்டா நிறுவனம் கல்வித்துறையில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து விரிவாக்கம் செய்து வருகிறது. பெருந்தொற்று வளர்ச்சிக்கு பிறகு இத்துறை ஆட்குறைப்பு மற்றும் நிதி சவாலை எதிர்கொண்டு வருகிறது. 24 நிதியாண்டில் நிறுவனம் தனது வருவாயை இருமடங்காக்கி, நஷ்டத்தை மேலும் குறைத்துள்ளது.
கல்வித்துறை, வணிகம், அரசுத்தேர்வு தயாரிப்பு, வெளிநாட்டு கல்வி ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு வெராண்டா செயல்படுகிறது.
வணிக கல்வி ஏற்கனவே 2025 நிதியாண்டில் ரூ.120 கோடி வருவாய் (EBITDA) மற்றும் 26 நிதியாண்டில் ரூ.100 கோடி லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள பிரிவுகளை ஒன்றிணைப்பதன் மூலம் செயல்திறனை அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமத்தால் 2018ல் துவக்கப்பட்ட வெராண்டா லேர்னிங் போட்டித்தேர்வு தயாரிப்பு மற்றும் திறன் வளர்ச்சி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் பல வகை வகுப்புகளை வழங்கி வருகிறது.
Edited by Induja Raghunathan