100 மடங்கு அதிக மகசூல் தரும் 'செங்குத்து மஞ்சள் விவசாய முறை’
மஞ்சள் என்பது சமையலுக்கு மட்டுமல்லாது காஸ்மெடிக்ஸ், ஃபார்மா போன்ற துறைகளிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மக்கள்தொகை அதிகரிப்பதால் வீடுகளும் சாலைகளும் தொழிற்சாலைகளும் பெருகி வரும் சூழலில் விவசாய பயன்பாடுகளுக்கான நிலம் அருகி வருகிறது. இதனால் மாற்று விவசாய முறைகள் பிரபலமாகி வருகின்றன. அப்படிப்பட்ட முறைகளில் ஒன்றுதான் ”வெர்டிக்கல் ஃபார்மிங்” 'Vertical Farming' எனப்படும் செங்குத்து விவசாய முறை.
குறிப்பாக மஞ்சள் சாகுபடியைப் பொருத்தவரை இந்த செங்குத்து விவசாய முறை பயனுள்ளதாக இருக்கிறது. 100 ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் மகசூலை ஒரே ஏக்கர் நிலத்தில் பெற்றுவிடலாம் என்று சொல்லப்படுகிறது. மஞ்சள் என்பது சமையலுக்கு மட்டுமல்லாது காஸ்மெடிக்ஸ், ஃபார்மா போன்ற துறைகளிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
செங்குத்து விவசாய முறையில் மஞ்சள் சாகுபடி
தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த AS Agri & Aqua LLP என்கிற நிறுவனம் செங்குத்து விவசாய முறையில் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளது.
செங்குத்து விவசாய முறையில் கண்டெயினர்களில் GI பைப்புகள் செங்குத்தாக பொருத்தப்படுகின்றன. இது 2-3 அடி ஆழத்திலும் 2 அடி அகலத்திலும் வைக்கப்படுகின்றன. கண்டெயினரின் மேல் பகுதி திறந்து வைக்கப்பட்டிருக்கும். இதில் மஞ்சள் வளர்க்கப்படும்.
பெரும்பாலும் செங்குத்து விவசாயம் என்பது ஏரோபோனிக், ஹட்ரோபோனிக் என இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள இந்நிறுவனம் மண்ணில் மஞ்சள் சாகுபடி செய்கிறது.
செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும் கண்டெயினர்களில் மண் நிரப்பப்பட்டு இதில் கோகோ பீட் மற்றும் மண்புழு உரம் கலக்கப்படுகின்றன. வெப்பநிலையை கட்டுப்படுத்த இவற்றின் மீது பெரிய ஷெட் அமைக்கப்படுகிறது.
மஞ்சள் சாகுபடியில் வெப்பநிலை மிகவும் முக்கியமானது. 12 டிகிரி முதல் 26 டிகிரி வரை இருந்தால் மகசூல் சிறப்பாக இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது ஃபாகர்ஸ் (foggers) பயன்படுத்தப்படும்.
தானியங்கி முறையில் இயங்கும் இந்த ஃபாகர்ஸ், வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவைக் கடந்து அதிகரிக்கும்போது தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும். அல்லது தானியங்கி முறையில் இல்லாமல் மனிதத் தலையீட்டுடன் இயங்கும் ஃபாகர்ஸையும் பயன்படுத்தி தேவை ஏற்படும்போது ஆன் செய்துகொள்ளலாம்.
ஒட்டுமொத்த அமைப்பையும் GI பைப் கொண்டு உருவாக்குவதால் 20-25 வருடங்களுக்கு நீடித்திருக்கும். ஒருமுறை இதற்காக செலவு செய்துவிட்டால் போதும், பல ஆண்டுகள் சாகுபடி செய்துகொள்ளலாம்.
மஞ்சள் சாகுபடி
செங்குத்து விவசாய முறையில் மஞ்சள் சாகுபடி செய்யும்போது அவை 10-10 செ.மீ இடைவெளியில் நடவு செய்யப்படவேண்டும். இந்த இடைவெளி நேராக இல்லாமல் வளைந்து வளைந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி செய்யும்போது இரண்டு வரிசையாக மண் தொட்டிகளில் மஞ்சள் விதைகள் விதைக்கலாம். கீழே உள்ள அடுக்குக்கும் மேலே உள்ள அடுக்குக்கும் இடையில் 1 அடி இடைவெளி இருக்கவேண்டும்.
மஞ்சள் சாகுபடிக்கு அதிக சூரியவெளிச்சம் தேவைப்படாது. நிழலான இடத்திலேயே நன்கு வளரும். இதனால் செங்குத்து விவசாய முறை மஞ்சள் சாகுபடிக்கு பொருத்தமானதாக இருக்கும். அதிக லாபமும் ஈட்டமுடியும்.
மஞ்சள் பயிர் 9 மாதங்களில் முழுமையாக தயாராகிவிடும். செங்குத்து விவசாய முறை பருவநிலை சார்ந்து இருப்பதில்லை என்பதால் மூன்றாண்டுகளில் நான்கு முறை அறுவடை செய்யலாம். ஆனால், நிலத்தில் மஞ்சள் பயிரிடும்போது பருவநிலை சார்ந்து பயிர்கள் வளர்வதால் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யமுடியும்.
சாகுபடிக்கு மண்ணைத் தயார்படுத்தும் முறை
செங்குத்து முறை விவசாயத்திற்கு மண்ணைத் தயார்படுத்தும்போது அதில் கோகோ பீட் மற்றும் மண்புழு உரம் கலக்கப்படும். இது மஞ்சளின் வேர்கள் நன்கு பரவ உதவும். இந்த மண் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அதிலுள்ள ஊட்டச்சத்து மதிப்பிடப்படும். தேவைக்கேற்ப ஊட்டச்சத்துகள் சேர்க்கப்படும். இந்த விவசாய முறையில் ஊட்டச்சத்து திரவ வடிவில் செடிகளுக்கு கொடுக்கப்படும். சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சப்படும்.
செலவு-லாபம்
ஒரு ஏக்கர் நிலத்தில் 11 அடுக்குகளாக அமைக்கப்படும்போது 6.33 லட்சம் விதைகள் விதைக்கமுடியும். இதில் பவ்லேறு காரணங்களால் 33 ஆயிரம் செடிகள் சேதமடைவதாக வைத்துக்கொண்டாலும்கூட 6 லட்சம் செடிகளின் உற்பத்தி கிடைக்கும். சராசரியாக ஒரு செடிக்கு 1.67 கிலோ மஞ்சள் கிடைக்கும் என்றாலும் ஒரு ஏக்கரில் 10 லட்சம் கிலோ (1100 டன்) மஞ்சள் கிடைக்கும்.
நிலத்திலிருந்து பெறப்படும் மஞ்சள் சுத்தம் செய்யப்பட்டு, கொதிக்க வைக்கப்பட்டு உலர்த்தப்படும். அதன் பிறகே சந்தையில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு உலர்த்தப்படும்போது நான்கில் ஒரு பங்கு எடை கிடைக்கும். அதாவது, 250 டன் மஞ்சள் கிடைக்கும். கிலோ 100 ரூபாய் என விற்பனை செய்தாலும் 2.5 கோடி ரூபாய் கிடைக்கும். 50 லட்ச ரூபாய் செலவுகளுக்கு எடுத்துக்கொண்டாலும் 2 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஆரம்பத்தில் கட்டமைப்பை உருவாக்க அதிகம் செலவு செய்யவேண்டும் என்பது உண்மைதான் என்றாலும் 2-3 ஆண்டுகளில் இந்தத் தொகையை திரும்ப எடுத்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: ஸ்ரீவித்யா