ஊரடங்கால் தேங்கிப் போன வெட்டிவேர்; முகமாஸ்க் தயாரித்து கலக்கும் இளைஞர்!
ஊரடங்கால் பயிர் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 500 டன் வெட்டிவேர் தேக்கமடைந்ததால், அதிலிருந்து முகக்கவசம் தயாரிக்கத் தொடங்கி இன்று ஆயிரக்கணக்கில் விற்பனை செய்து அசத்துகிறார்.
கொரோனா வைரஸ் உலகை தாக்கியதில் இருந்து, நாம் அனைவரும் பேசுவது இரண்டு முக்கியப் பாதுகாப்பு அம்சத்தை பற்றி மட்டுமே. ஒன்று முகக்கவசம் மற்றொன்று சமூக இடைவெளி.
இதில் முக மாஸ்க் என்பது இந்தியர்களான நமக்கு புதிதான ஒன்று. பெரும்பாலும், மருத்துவப் பணியில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தும் முகக்கவசத்தை நாம் அனைவரும் அணியவேண்டும் எனும் போது அதற்கான சந்தை இந்தியாவில் பிரகாசமாகத் தெரிந்தது. கோடிக்கணக்கில் மக்கள் தொகை உள்ள இந்தியா போன்ற நாட்டுக்கு மாஸ்க் தேவை பயங்கரமாக அதிகரித்தது.
துணியால் ஆன பருத்தி மாஸ்க், என்95 மாஸ்க், மருத்துவர்கள் பயன்படுத்தும் சர்ஜிகல் மாஸ்க் என பலவித முகக்கவசம் சந்தையில் புழக்கத்துக்கு வந்தது. இதில் தற்போது சேர்ந்திருப்பது, இயற்கைக் குணம் கொண்ட ‘வெட்டிவேர் மாஸ்க்’.
ஊரடங்கு காரணமாக தேக்கம் அடைந்துள்ள மருத்துவக் குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்து அசத்தி வருகின்றனர் கடலூர் மற்றும் புதுச்சேரி இளைஞர்கள்.
வெட்டிவேர் நறுமணமிக்கது மட்டுமல்லாமல் பல மருத்துவக் குணங்களையும் கொண்டது. வெட்டிவேரில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட வாசனைத் திரவியங்கள், அழகுச் சாதனப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் இங்கிருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளி நாடுகளுக்குச் செல்ல வேண்டிய வெட்டிவேர் தடைப்பட்டது.
இப்பகுதியில் பயிர் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 500 டன்னுக்கும் மேலான வெட்டிவேர் தேக்கமடைந்தது. மேலும், இதில் இருந்து தயாரிக்கப்பட்ட பாய், தலையணை, காலணி மற்றும் அழகு சாதனப் பொருட்களும் விற்பனை இல்லாமல் தேங்கின.
இந்த நிலையில், வெட்டிவேரை வைத்து என்ன செய்யலாம் என யோசித்த வெட்டிவேரை பயிர் செய்யும் கடலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பிரசன்னா மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து வெட்டிவேரில் இருந்து முகக்கவசம் தயாரிக்கத் தொடங்கினர்.
வெட்டிவேரை நன்கு சுத்தம் செய்து நறுமணமிக்க மருத்துவக் குணம் கொண்ட அழகிய முகக்கவசங்கள் உருவாயின. நறுமணத்துடன் இருக்கும் இந்த முகக்கவசம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ரூ.50க்குக் கிடைக்கும் இந்த முகக்கவசங்கள் பயன்படுத்திவிட்டு மீண்டும் துவைத்துப் பயன்படுத்தலாம்,” என்கிறார் பிரசன்னா.
வெட்டி வேர் நோய் எதிர்ப்பு அதிகம் தரும் என்றும், நுரையீரலை தூய்மையாக வைத்திருக்கும் என்றும், சித்த மருத்துவத்தில் மிக முக்கியமானதாகக் கூறப்படுகிறது.
கடலூரில் மிகவும் பிரபலம் அடைந்துள்ள இந்த வெட்டிவேர் முகக்கவசங்கள் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் வரை தயாரிக்கப்பட்டாலும் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்துவிடுகிறது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் DR.அருண் முகக்கவசங்களை வாங்கி மக்களுக்கு வழங்கியுள்ளார்.
தேங்கிக் கிடக்கும் வெட்டிவேரை முகக்கவசமாக தயாரிக்கும் பணிகளை மே மாதத்தில் தொடங்கியதாக கூறும் பிரசன்னா, அதற்கு தொடக்கத்தில் இருந்தே நல்ல டிமாண்ட் இருப்பதாக கூறினார்.
“மே மாத தொடக்கத்தில் வெட்டிவேரை மாஸ்காக தயாரிக்கும் பணியைத் தொடங்கினோம். இதற்காக சுமார் 15 டெய்லர்களை பணியில் அமர்த்தி வேகமாக மாஸ்க் தயாரித்தோம். இன்றுவரை 20 ஆயிரம் மாஸ்க் உற்பத்தி செய்து விற்பனை செய்ததில் 3 லட்ச ரூபாய் ஈட்டியுள்ளோம்,” என்றார் பிரசன்னா.
இதுகுறித்து பிரசன்னா கூறுகையில்,
"இந்த முகக்கவசம் மற்ற முகக்கவசங்களைப் போல நாற்றம் ஏற்படாது. இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும், இதைத் திரும்பப் பயன்படுத்திக் கொள்ளலாம், முகத்துக்கும் பாதிப்பு வராது," என்றார்.
ஊரடங்கு காரணமாக தேங்கியுள்ள வெட்டிவேரில் இருந்து மருத்துவ குணம் கொண்ட முகக்கவசங்களைத் தயாரிக்கும் இளைஞர்களின் முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.