'10ம் வகுப்பில் என் மகன் 60% மார்க்'- பெருமையுடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்த தாய்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுள்ள மகனைப் பற்றி முகநூலில் பெருமையோடு பதிவிட்ட தாயின் மெசேஜ் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பது குஷியான விஷயம். ஆனால் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தான் அது மண்டைக்கு மேல் வெப்பத்தை கக்கும் சூரியனைப் போல தேர்வு முடிவு குறித்த பயம் உள்ளுக்குள் அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று மாணவப் பருவத்தின் நிகழ்காலத்தை தொலைத்து விட்டு சென்ட்டம், அதிக மதிப்பெண் என்று அவர்களை டென்ஷனிலேயே வைத்திருக்கும் சில பெற்றோர்களுக்கு டெல்லியைச் சேர்ந்த வந்தனா சுஃபியா கடோச்சின் முகநூல் பதிவு சம்மட்டி அடியை கொடுத்துள்ளது.
கடந்த 6ம் தேதி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. டெல்லியைச் சேர்ந்த வந்தனா சுஃபியா கடோச்சின் மகன் அமீரும் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவு வெளியான போது முதலில் நிம்மதியடைந்தது வந்தனா தானாம்.
அமீர் 60 சதவிகித மதிப்பெண் எடுத்ததற்காக பெருமைபட்ட வந்தனா பள்ளியில் இருந்த திரும்பி வந்த மகனை அன்போடு கட்டித் தழுவி குடும்பத்தினருடன் தேர்வு முடிவை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
தன்னுடைய மகன் 60 சதவிகித மதிப்பெண் பெற்ற விஷயத்தை பெருமையோடு முகநூலிலும் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பதவிட்ட சில மணி நேரங்களிலேயே 13ஆயிரம் லைக்ஸ்கள், 7 ஆயிரம் பகிர்வுகள், ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள் என சோஷியல் மீடியாவை தெறிக்க விட்டுள்ளார் வந்தனா. அப்படி என்னதான் பதிவிட்டிருந்தார் வந்தனா என நினைக்கிறீங்களா. இதாங்க அந்த பதிவு
“10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60% மதிப்பெண் எடுத்த என் அன்பு மகனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஆம் இது ஒன்றும் 90% மதிப்பெண் இல்லைதான் எனினும் என் மகிழ்ச்சியில் எந்தக் குறைவும் இல்லை. சில மாதங்களுக்கு முன் ஒரு சில பாடங்களை படிக்க முடியாமல் அமீர் போராடியதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்து தேர்வு எழுத வேண்டுமா? என்று கூட மனமுடைந்து எண்ணினார். ஆனால் கடைசி ஒன்றரை மாதங்களில் கடின உழைப்பைப் போட்டதன் விளைவாக 60% மதிப்பெண் பெற்றுள்ளார். அமீர் உனக்கும் உன்னைப் போன்று கஷ்டப்பட்டு தேறிய மாணவர்களுக்கும் வாழ்த்துகள். இது நிச்சயமாக மீன்களை மரத்தில் ஏறச் செய்யும் வேலை போன்றது. இனி உன்னுடைய எதிர்கால படிப்பை நீயே தேர்வு செய். கடலளவு பாடப்பிரிவுகள் உள்ளன.”
வந்தனா பதிவின் தொடக்கத்தை படித்தாலே அவர் ஏன் சோஷியல் மீடியா சென்சேஷன் அம்மாவாக ஆகி இருக்கிறார் என்பது புரியும். “60 சதவிகித மதிப்பெண் எடுத்த என் அன்பு மகனே உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தியக் கல்வி முறையில் கிரேடுகளும், தேர்வு கலாச்சாரங்களும் மாணவர்களை எந்த அளவிற்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது, 90 சதவிகிதத்திற்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் கொண்டாடக் கூடாதா போன்ற விஷயங்களுக்கான விடை தான் இவரின் இந்தப் பதிவு.
பெற்றோருக்கு நல்ல பாடம் புகட்டும் பதிவு இது என்று அம்மாக்கள் வந்தனாவின் பதிவைக் கொண்டாடுகின்றனர். அவர் கூறியுள்ளதைப் போலவே
தேர்வு முடிவுகள் ஒன்றும் ஒரு குழந்தையின் திறமை, தகுதி மற்றும் திறனுக்கான அளவுகோள் இல்லை. மதிப்பெண்கள் அடிப்படையில் குழந்தைகளை மதிப்பிடும் மனநிலையை தகர்த்தெறிய வேண்டும். பெற்றோரின் இந்த மனநிலை மாறினாலே குழந்தைகள் மனஅழுத்தம், விரக்தி, தேர்வு பயத்தில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க முடியும்.
மதிப்பெண்ணை மட்டுமே வைத்து ஒரு குழந்தையின் திறமையை மதிப்பிட முடியாது என்பதை உணர்ந்து கொண்டுள்ளார் வந்தனா. எனவே இது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய விஷயம் என்பதை உணர்ந்ததால் வந்தனா இன்றைய தலைமுறை பெற்றோருக்கான வழிகாட்டியாகி இருக்கிறார்.
முதல் ரேங்க் எடுத்தால் மட்டுமே அறிவாளிக் குழந்தை என்று நினைக்கும் பெற்றோரின் சிந்தனைகளை ஸ்டியரிங் போட்டு திருப்பியுள்ளார் வந்தனா. குழந்தைகளிடத்து இருக்கும் திறமைகளறிந்து அவற்றை சாதகமான முறையில் அணுகி அறிவை விரிவு செய்யவே கல்வி என்பதை உணர்த்திய வந்தனா சுஃபியா கடோச்சிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி