அமோக வரவேற்பு; 300% வளர்ச்சியில் VIVO போன்ஸ்: ஓரங்கட்டப்படுமா ஆப்பிள், சாம்சங்?
விவோ நிறுவனம் தங்களது ப்ரீமியம் பிரிவு ஸமார்ட்போன்கள் விற்பனையில் 300% வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தங்கள் கொடியை நாட்ட பல்வேறு பிரிவு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு விலை பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை தன் வசம் வைத்திருப்பது ரெட்மி நிறுவனம். அதேபோல், இந்தியாவில் தனக்கு ஒரு வாடிக்கையாளர்கள் பட்டாளத்தை உருவாக்கி ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனம் முன்னோக்கி வருகிறது.
என்னதான் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் iphone சாதனங்களுக்கு என தனி வரவேற்பு இருக்கத் தான் செய்கிறது. ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஐ-போன் மாடல்களின் விலை எப்போது அதிகமாகவே இருக்கும் காரணம் அதில் உள்ள அனைத்து அம்சங்களும் உயர்தர வகையில் இருப்பதே.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் விலை உயர்ந்த சிறந்த சாதனம் வாங்க திட்டமிடும்பட்சத்தில் உடனே நினைவுக்கு வருவது ஒன்பிளஸ் மற்றும் சாம்சங் தான். சாம்சங் நிறுவனத்தின் சாதனங்களானது பட்ஜெட் விலை முதல் ப்ரீமியம் விலைப் பிரிவு வரை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டியாக சீனாவின் Vivo நிறுவனம் களத்தில் இறங்கி முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ரெட்மி, ஒப்போ, விவோ என்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை ஒப்பிடும் போது விவோ சமீபத்தில் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
காரணம் விவோ விலைக்கேற்ற வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் தங்கள் சாதனங்களை அறிமுகம் செய்வதே ஆகும். மிட்ரேஞ்ச் விலைப்பிரிவில் சிறந்த சாதனங்களை பட்டியலிட்டோமானால் அதில் பெரும்பாலும் இடம்பெறுவது விவோ ஸ்மார்ட்போன்கள் தான்.
விவோ தனது ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை Zeiss உடன் இணைந்து தயாரித்து வருகிறது. விவோ நிறுவனத்தின் ரூ.30,000 மற்றும் அதற்கு மேல் உள்ள விலைப் பிரிவு ஸ்மார்ட் போன்களில் சுமார் 300 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. விவோ கடந்த 12 மாதங்களில் இந்த வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் விவோ இந்த விற்பனையை ஆஃப்லைன் தளங்களில் பதிவு செய்திருக்கிறது.
இந்த வளர்ச்சி குறித்து விவோ இந்திய தலைவர் பைகாம் தானிஷ் கூறுகையில்,
“ப்ரீமியம் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்களை சரியான நேரத்தில் சரியான தயாரிப்பு அம்சத்துடன் அறிமுகம் செய்கிறோம். இதன் காரணமாகவே ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் 300% பதிவு செய்ய முடிந்தது. இந்த ஆண்டும் வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கிறோம். இதற்காக புதிய தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்.