சிறு தொழில் நிறுவனங்கள் ஆன்லைனில் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வழி செய்யும் 'Vyaparify'

மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ’வியாபாரிபை’, சிறு நிறுவனங்கள் மற்றும் பாரம்பரிய வர்த்தகர்கள் மினி இணையதளம் மூலம் தங்கள் டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கி கொண்டு, கூகுள் தேடலில் முன்னிலை பெற வழிசெய்கிறது.

சிறு தொழில் நிறுவனங்கள் ஆன்லைனில் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வழி செய்யும் 'Vyaparify'

Tuesday November 21, 2023,

4 min Read

ரமேஷ் மசாலா தோசா, இந்தூர் நகரில் 20க்கும் மேலான கிளைகளைக் கொண்ட தென்னிந்திய உணவு ரெஸ்டாரண்ட் தொடராகும். நகரில் நன்கறியப்பட்ட பெயராக இருந்தாலும் அதன் வர்த்தகம் குறைந்து கொண்டே வந்தது.

வர்த்தகத்தை மீண்டும் சூடு பிடிக்க வைக்கவும், அனைத்து கிளைகளிலும் அதிக வாடிக்கையாளர்கள் தேடி வருவதை உறுதி செய்யவும், ரமேஷ் மசாலா தோசா ரெஸ்டாரண்ட் தொடரின் உரிமையாளர் முத்துராமன் தேவர், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும் ’வியாபாரிபை’ (Vyaparify) நிறுவனத்தை நாடினார்.

இதனையடுத்து, வியாபாரிபை மேடையில், கதிவாலா டாங் பகுதியில் உள்ள கிளை பதிவு செய்யப்பட்ட பிறகு, அதன் இணைய பக்கம், கூகுளில் இந்த பகுதியில் உள்ள தென்னிந்திய உணவகங்கள் பட்டியலில் முன்னிலை பெறத்துவங்கியது. இது, உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளடக்கிய புதிய வாடிக்கையாளர்களை கொண்டு வந்தது.

இணையம்

இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? டிஜிட்டல் சேவை வழங்கும் வியாபாரிபை, வர்த்தகங்களுக்கு ஒருங்கிணைந்த மினி எஸ்.இ.ஓ பக்கங்களை அமைத்து அதன் மூலம் உள்ளூர் தேடல் முடிவுகளில் முன்னிலை பெற வைக்கிறது. வர்த்தகர்கள் தங்கள் டிஜிட்டல் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக மினி இணையதளம் அமைகிறது. தொடர்பு முகவரி சமூக ஊடக இணைப்புகள், பொருட்கள் தகவல்கள், வர்த்தக விவரங்களை ஆகியவை இதில் அடங்கும்.

ரமேஷ் மசாலா தோசாவுக்காக வியாபாரிபை சார்பில் ஆரம்பிக்கப்பட்ட இணைய பக்கம் இது: https://id.vyaparify.com/ramesh-masala-dosa).

இதன் தொடர்ச்சியாக முத்துராமன், மற்ற கிளைகளையும் பதிவு செய்து அவற்றுக்கான மினி இணையதளங்களை உருவாக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.வியாபாரிபை மேடை வாயிலாக, அதன் நிறுவனர் ரூபி ஜெயின், பாரம்பரிய வர்த்தகங்களுக்கான டிஜிட்டல் இடைவெளியை குறைத்து, அவற்றின் சிறப்பை இணைய யுகத்தில் தக்க வைத்துக்கொள்ள உதவ விரும்புகிறார்.

வர்த்தகர்கள் டிஜிட்டல் அடையாளத்தை ஏற்படுத்தி, கூகுள் தேடல் பட்டயலில் முன்னிலை பெற வியாபாரிபை வழி செய்கிறது. இதன் மூலம், வர்த்தகத்தை விரிவாக்க புதிய வாடிக்கையாளர்களையும் தேடிக்கொள்ளலாம்.

துவக்கம்

ரூபி ஜெயினுக்கு, வங்கித்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் இருக்கிறது. 2003 முதல் 2022 வரையாக காலத்தில் அவர் வங்கித்துறையில் பணியாற்றியுள்ளார். இடையே எச்டிஎப்சி வர்த்தக வங்கிச்சேவையில் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

இந்த காலகட்டத்தில், டிஜிட்டல் யுகத்தில் நுழைவதில் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான ஆழமான புரிதல் அவருக்குக் கிடைத்தது. செலவு அல்லது சிக்கலான நடைமுறை காரணமாக வர்த்தகர்கள் டிஜிட்டல் மாற்றத்தை எதிர்கொள்வதில் சிக்கலை உணர்கின்றனர்.

கடைகளை கொண்ட வர்த்தகர்களுடன் உரையாடிய போது, இந்த சவால்களை வங்கித்துறையும் சரி, டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் சரி, சரியாக தீர்வு காணவில்லை என்பதை ரூபி உணர்ந்தார். வர்த்தகம் அல்லது லாஜிஸ்டிக்கை கடந்து எந்த ஆதரவும் அளிக்கப்படவில்லை.

“ஆன்லைனில் இல்லாததால் ஏற்படும் வருமான இழப்பை உணர மறுத்ததே வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் முக்கியத் தடை,” என்கிறார் ரூபி.

இந்த தயக்கம், பல ஆண்டுகளாக ஆப்லைனில் செயல்பட்டு வரும் தன்மையாலும், ஆன்லைனில் சென்று சிக்கலாக்கிக் கொள்ள வேண்டாம் எனும் அச்சத்தாலும் உண்டாகிறது. டிஜிட்டல் மாற்ற செயல்முறையில் வர்த்தகர்களுக்கு ஆதரவும், வழிகாட்டுதலும் தேவை என்பதை ரூபி உணர்ந்தார்.

எனவே, வர்த்தகர்கள் ஆன்லைன் அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதில் முதல் அடியை எடுத்து வைக்க எளிய செயல்முறை அளிக்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டு துவக்கத்தில் வியாபாரிபை நிறுவனத்தை துவக்கினார்.

இணையம்

செயல்முறை

முக்கிய வர்த்தகம் ஆப்லைனில் நிகழ்ந்தாலும், வர்த்தகத்தை வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் வழங்குவதை சாத்தியமாக்கும் நோக்கத்துடன் வியாபாரிபை செயல்படுகிறது.

மினி இணையதளங்களை அமைக்கும் வகையில், வியாபாரிபை ஏஐ மூலம், வர்த்தர்களிடம், அவர்கள் வர்த்தக பெயர், துவங்கிய ஆண்டு, வர்த்தக வகை உள்ளிட்ட தகவல்களுக்கான கேள்விகளை கேட்கிறது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அமைந்துள்ள இந்த சாதனம் வாயிலாக, வர்த்தகங்களுக்கு இணைய அறிமுகம் உருவாக்கப்படுகிறது.

மினி இணையதளங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் வர்த்தகர்களுடன் உரையாடி, ஆர்டர்களை அளிக்கலாம். அதில் உள்ள வாட்ஸ் அப் அல்லது இன்ஸ்டாகிராம் ஐகான் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

“வாட்ஸ் அப்பில் தகவல் பகிரும் வகையிலான உரையாடல் வர்த்தகம் அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் அல்லது யுபிஐ மூலம் பணம் செலுத்துகின்றனர். பின்னர், பொருட்களை நேரில் அல்லது அஞ்சலில் பெற்றுக்கொள்கின்றனர்,” என்கிறார் ரூபி.

மினி இணையதளம் தனிப்பட்ட பிராண்டிங்கிற்கும் உதவுகிறது. இங்கு அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இது வர்த்தகர்கள் எளிதாகக் கண்டறியப்பட உதவுவதோடு, வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. இந்த மேடை உறுப்பினர் கட்டண அடிப்படையில் சேவை அளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு ரூ.1700 அல்லது ஆண்டு கட்டணமாக ரூ.3000 வசூலிக்கப்படுகிறது. எஸ்.இ.ஓ உத்திகளையும் கவனித்துக்கொள்கிறது.

“குறைந்த செலவில் உள்ளூர் சார்ந்த எஸ்.இ.ஓ சேவை அளித்து, வர்த்தக நிறுவனங்கள் ஆன்லைன் அடையாளத்தை பெறுவதோடு, துடிப்பான கண்டறிதலையும் கொண்டிருக்க வியாபாரிபை வழிசெய்கிறது. இணையதளத்தை உருவாக்குவது மட்டும் அல்ல, பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுடன் தொடர்பு கொள்வதையும் கவனித்துக்கொள்கிறோம்,” என்கிறார்.

உதாரணத்திற்கு இந்தூரில் உள்ள நேமா கஜக் எனும் இனிப்பு கடையை சுட்டிக்காட்டுகிறார். துவக்கத்தில் இந்த வர்த்தகத்திற்கான உள்ளூர் தேடலில் நிறுவனம் கவனம் செலுத்தியது.

துவக்கத்தில், சப்பன் டுகன் பகுதியில், சிறந்த உள்ளூர் இனிப்பு என தேடினால் இந்த இனிப்புக்கடை முன்னிலை பெற்றது. பின்னர், இந்தூர் சார்ந்த இதே தேடலிலும் முன்னிலை பெற வைத்தனர். இந்த வீச்சை மத்திய பிரதேசம் முழுவதற்கும் விரிவாக்குவதே இலக்கு என்கிறார்.

“இதை மேலும் விரிவாக்க விரும்புகிறோம். முதல் ஆயிரம் வர்த்தகர்களை, ஒரு லட்சத்திற்கும் மேலான கூகுள் தேடலில் தோன்றச்செய்து, 85,000 பார்வைகளை பெற்றுத்தந்துள்ளோம். இது மிகப்பெரிய தாக்கம்,” என்கிறார் ரூபி.
இணையம்

எதிர்கால திட்டம்  

வியாபாரிபை இதுவரை 2000க்கும் மேலான சிறு நிறுவனங்களுக்கு சேவை அளித்துள்ளது. இந்தூர், போபால் மற்றும் பூனா ஆகிய நகரங்களில் இவை அமைந்துள்ளன. இவற்றில் 60 சதவீத வர்த்தகங்கள் ஸ்பா மற்றும் சலூன் வகைய்ச்சேர்ந்தவை. எஞ்சியவை, துணி கடைகள், மருந்து கடைகள் மற்றும் மளிகை கடைகள். Dukaan, Bikayi, GoFrugal, MyEasyStore ஆகியவை இந்த பிரிவில் போட்டியில் உள்ளன.

தற்போது 35 ஊழியர்களளை கொண்டுள்ள நிறுவனம் இதை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

மத்திய பிரேதசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. வர்த்தகர்களின் தேவைக்கேற்ப புதிய சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்ததாக சிறு தொழில் நிறுவனங்கள் சமூக ஊடக செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் Socify அறிமுகம் ஆக உள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்டு இது இயங்கும்.

“இந்த சேவை உள்ளடக்க உருவாக்கத்தை எளிதாக்கும். பயனாளிகள் நட்பான சேவை இது. சமூக ஊடக இருப்பை அதிகரித்து வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்துவது நோக்கம்,” என்கிறார் ரூபி.

வர்த்தகர்களுக்கான இ-காமர்ஸ் வசதியையும் இணைக்க உள்ளது. இது லாஜிஸ்டிக்சுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான சேவையாக அமையும். கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களையும் கொண்டுள்ளது.

ஆங்கிலத்தில்: அனுபிரியா பாண்டே | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan