5000 பாட்டிலில் தொடங்கி இன்று ஒரே நாளில் 25 லட்சம் பாட்டில்கள்: 3.2கோடி வருவாயுடன் ‘க்ளியர் பானி’ வளர்ச்சிக் கதை!
அகமதாபாத்தைச் சேர்ந்த `க்ளியர் பானி’ ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா, ஹாலிடே இன், மரியட் என பிரபல நிறுவனங்களை கிளையண்டுகளாக இணைத்துக்கொண்டு பிரம்மாண்ட வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தண்ணீர் பாட்டில்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. சுத்தமான குடிநீர் கிடைக்காததும் உடல் ஆரோக்கியத்தின் மீது மக்கள் அக்கறை காட்டும் போக்கு அதிகரித்திருப்பதுமே இதற்குக் காரணம்.
தண்ணீர் பாட்டில் தயாரிப்பிற்கான தேவை அதிகமிருப்பினும் இதில் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.
பேக்கேஜ் செய்யபபட்ட குடிநீர் பிராண்ட் ‘க்ளியர் பானி’ (Clear Pani) 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நாள் ஒன்றிற்கு 5,000 பாட்டில்கள் தயாரித்துக் கொண்டிருந்த இந்நிறுவனம், இன்று ஒரு நாளைக்கு 25 லட்சம் பாட்டில்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது. 2025ம் ஆண்டில் 1000 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக வளர்ச்சியடைய 'க்ளியர் பானி’ திட்டமிட்டிருக்கிறது.
அகமதாபாத்தைச் சேர்ந்த 'Clear Pani' பிராண்ட் நிறுவனர் நயன் ஷா நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தொடக்கம்
சிட்னி யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜியில் எம்பிஏ முடித்த நயன், 2002ம் ஆண்டு இந்தியா திரும்பினார். இவரது குடும்பத்தினர் அகமதாபாத்தில் வயர் மற்றும் கேபிள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
குடும்பத்தினர் ஈடுபட்ட தொழில் முயற்சி ஒருபுறம் இருப்பினும் நயன் மற்ற வாய்ப்புகளை முயற்சி செய்து பார்க்க விரும்பினார்.
Line O Matic Graphic Industries நிறுவனத்தில் சில காலம் இணைந்திருந்தார். அந்த சமயத்தில் சொந்தமாக தொழில் தொடங்கவேண்டும் என்கிற ஆர்வம் பிறந்தது. வேலையை விட்டு விலகினார்.
”கிட்டத்தட்ட அந்த சமயத்தில் நான் சிங்கப்பூர் சென்றிருந்தேன். 'ரெட் புல்’ பானங்கள் சந்தையில் வலுவாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை கவனித்தேன். இந்திய சந்தையைப் பொருத்தவரை ரெட் புல் பானங்களுக்கு போட்டியாளர்கள் என்று யாரும் பெரிதாக இல்லை,” என்கிறார் நயன்.
பெப்சி, கோக் போன்ற பிராண்டுகளைத் தவிர எனர்ஜி பானங்கள் சந்தையில் போட்டியாளர்கள் யாரும் இல்லை என்பதை நயன் உணர்ந்தார்.
2005ம் ஆண்டு வேலையை விட்டு விலகி எனர்ஜி பானங்கள் வணிகம் தொடங்க திட்டமிட்டார். முன்பு வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி இவருடன் வணிக முயற்சியில் இணைந்துகொண்டார். 2 கோடி ரூபாய் ஆரம்ப முதலீடாகக் கொண்டு 'எனர்னி பிவரேஜஸ் பிரைவேட் லிமிடெட்’ தொடங்கினார் நயன்.
'கரண்ட் எனர்ஜி ட்ரிங்க்’ என்கிற முதல் தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். ஃபார்முலேஷன் ஜெர்மனியிலும் தயாரிப்பு மலேசியாவிலும் நடைபெற்றது. 2007-ம் ஆண்டு வரை வளர்ச்சியடைந்துகொண்டே போனது.
”ஆண்டு வருவாய் 3.2 கோடி ரூபாயாக இருந்தது,” என்கிறார் நயன்.
2007-ம் ஆண்டிற்குப் பிறகு சரிவு ஏற்பட்டது. 75 ரூபாய் விலை கொண்ட தயாரிப்பால் சந்தையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
2009-ல் ஆண்டு வருவாயாக 60 லட்சம் ரூபாய் ஈட்டப்பட்டபோது அடுத்த புதிய வாய்ப்பை ஆராய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பது நயனுக்குப் புரிந்தது. நயனின் பார்ட்னர் நிறுவனத்திலிருந்து விலகிக்கொண்டார்.
அடுத்த முயற்சி
அடுத்ததாக தண்ணீர் விற்பனையில் ஈடுபட நயன் முடிவு செய்தார்.
“தண்ணீருக்கான தேவை அதிகமிருப்பதால் அதை எளிதாக விற்பனை செய்துவிடலாம் எனத் தீர்மானித்தேன்,” என்கிறார்.
இப்படி 2010ம் ஆண்டு உருவானதுதான் க்ளியர் பானி. எனர்ஜி பிவரேஜஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்கீழ் இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தயாரித்து விற்பனை செய்யும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மும்பை, புனே, ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் தயாரிப்புப் பணிகள் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டன.
”எனர்ஜி பானங்கள் வணிகம் தோல்வியில் முடிந்தால் அதிலிருந்து எனக்குக் கிடைத்த படிப்பினைகள் ஏராளம். எஃப்எம்சிஜி வணிகத்தை எப்படி நடத்தவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்,” என்கிறார்,
குஜராத்தில் ’தி கிராண்ட் பக்வத்’ என்கிற பல கிளைகள் கொண்ட பிரபல ஹோட்டலுடன் இணைந்து 200 மி.லி க்ளியர் பானி விற்பனை செய்ய திட்டமிட்டார் நயன். பேக்கேஜிங், டிசைன் போன்றவற்றில் குழுவினர் கவனம் செலுத்தினர். மற்ற பிராண்டுகளின் பாட்டில்கள் உருளையாக இருந்த நிலையில் இந்நிறுவனம் சதுர வடிவில் பாட்டி அறிமுகப்படுத்தியது.
அந்த சமயத்தில் பிஸ்லெரி, கின்லே, கிங்ஃபிஷர், அக்வாஃபினா, பெய்லி போன்ற பிராண்டுகள் கோலோச்சி வந்தன. இதற்கிடையில், தனித்துவமாக செயல்பட விரும்பினார் நயன். ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா, ஹாலிடே இன், மரியட் என பிரபல நிறுவனங்களை கிளையண்டுகளாக இணைத்துக்கொள்ளவேண்டும் என்கிற நயனின் உத்தி பலனளித்தது.
”ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம். ஏர்லைன்ஸ் எப்போதும் தரத்திற்கும் சேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கும். அவர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியதும் தரமான பிராண்டாக மக்கள் எங்களைப் பார்க்கத் தொடங்கினார்கள்,” என்கிறார் நயன்.
2015ம் ஆண்டு க்ளியர் பானி சொந்த தொழிற்சாலை அகமதாபாத்தில் அமைக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு சூரத் பகுதியில் மற்றொரு தொழிற்சாலை திறக்கப்பட்டது.
5,000 பாட்டில்கள் தயாரிக்கத் தொடங்கிய இந்நிறுவனம், 2011ம் ஆண்டு 2 லட்சம் என்கிற எண்ணிக்கையிலும் 2018ம் ஆண்டு 7 லட்சம் பாட்டில்கள் என்கிற எண்ணிக்கையிலும் வளர்ச்சியடைந்தது.
இன்று க்ளியர் பானி ஒட்டுமொத்த தயாரிப்புத் திறன் நாள் ஒன்றிற்கு 25 லட்சம் பாட்டில்கள். இந்தியா முழுவதும் உள்ள 22 தொழிற்சாலைகளில் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
க்ளியர் பானி 200 மி.லி – 6 ரூபாய், 500 மி.லி – 10 ரூபாய், 1 லிட்டர் – 25 ரூபாய் என்கிற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
கொரோனா பெருந்தொற்று
க்ளியர் பானி கொரோனா சமயத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இருப்பினும், கோவிட்-19 மிகப்பெரிய புரிதலை ஏற்படுத்தியுள்ளதாகவும் நயன் தெரிவிக்கிறார்.
2019 நிதியாண்டில் 50 கோடி ரூபாய் டர்ன்ஓவர் இருந்த நிலையில் 2020 நிதியாண்டில் 61 கோடி ரூபாயாக அதிகரித்து 2021 நிதியாண்டில் 43 கோடி ரூபாயாக கணிசமான அளவு குறைந்தது. 3.5 கோடி ரூபாய் வரை இழப்பும் ஏற்பட்டுள்ளது.
“2020ம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மூன்று மாதங்களும் செய்வதறியாது திகைத்துப் போனேன். துறையில் இருந்தவர்களுடன் நட்புறவில் இருந்ததால் போட்டியாளர்கள் நிலைமையைக் கையாண்ட விதத்தைப் பற்றி கேட்டறிந்தேன். அவர்களது வணிகங்கள் 20-25 சதவீதம் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்து ஆச்சரியப்பட்டேன்,” என்கிறார் நயன்.
நயன் தன் தவறை உணர்ந்தார். பெருந்தொற்று சமயத்தில் சில்லறை வர்த்தகத்தில் கவனம் செலுத்தினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 11,160 ரீடெயில் அவுட்லெட்களை இணைத்துக் கொண்டது நிறுவனத்தின் மீட்சிக்கு உதவியது.
அமேசான் போன்ற மின்வணிக தளங்களில் மாதத்திற்கு 400 பெட்டிகளுக்கும் மேல் விற்பனை செய்கிறது. இருந்தபோதும் ஆஃப்லைனில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிதியாண்டின் இறுதியில் 100 கோடி ரூபாய் வருவாயை எட்ட திட்டமிட்டிருப்பதாக நயன் தெரிவிக்கிறார். அடுத்த 12-18 மாதங்களில் 50 தொழிற்சாலைகளுடன் விரிவடையவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2025-2026 நிதியாண்டில் 1000 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக வளர்ச்சியடையவேண்டும் என்கிற மிகப்பெரிய இலக்கை நோக்கி பயணித்து வருகிறார் நயன்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா