வெள்ளை ஆடை, கையில் ஓலைச்சுவடி- திருவள்ளுவராக மாறிய நம்ம ஹர்பஜன் சிங்!
‘பச்ச, மஞ்ச, சிவப்பு தமிழன்டா’ முதல் புலவர், பாரதியார், சங்கத்தமிழன்... என்று தமிழ் மக்களால் அன்போடு ‘ட்விட்டர் தமிழன்’ என அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், திருவள்ளுவர் அவதாரம் எடுத்துள்ளார். வார்ரேவா..
‘பச்ச, மஞ்ச, சிவப்பு தமிழன்டா’ முதல் புலவர், பாரதியார், சங்கத்தமிழன்... என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப் பட்டு வந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், திருவள்ளுவர் அவதாரம் எடுத்து தமிழ் வெப் சீரிஸில் நடித்துள்ளார். வார்ரேவா..
மஞ்ச பனியனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங்கின், பவுலிங் ஸ்டைலுக்கு மட்டுமின்றி அவரது தமிழ் டுவீட்களுக்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். தமிழர் கலாசாரம், பண்பாடு, தமிழகம் சார்ந்து ட்விட்டரில் தமிழில் டுவிட்டிட்டு வரும் ஹர்பஜனை சோஷியல் மீடியா உலகத்தார் ‘புலவர் ஹர்பஜன்சிங்’ என்ற அடைமொழியுடனே அழைக்கின்றனர்.
தொடர்ந்து தமிழில் சினிமா டைலாக்குகள், சினிமாப் பாடல் என ரெபஃரென்ஸுகளுடன் பதிவிட்டு தெறிக்கவிடும் அவரை, திருவள்ளுவராகவே மாற்றி தமிழ் வெப் சீரிசில் (வலைத்தொடர்) நடிக்க வைத்துள்ளது பிரபல யூடியூப் சேனலான பிளாக் ஷீப்.
இணையத்தில் யூத்துகள் விரும்பும் காமெடி, கருத்து, கலாய், கன்டென்ட்களுடன் கூடிய ‘இன்போ-டெயின்மென்ட்’ யூடியூப் சேனல் ‘பிளாக் ஷீப்’. ஆல்ரெடி ‘தனிஒருவன்’, ‘நான் கோமாளி நிஷாந்த்’, என பல நிகழ்ச்சிகளை வழங்கிவரும் பிளாக் ஷீப், 2020ம் ஆண்டில் 6 புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கான அறிமுக விழா கடந்தவாரம் சென்னையில் நடைபெற்றது.
திரைப்பிரபலங்கள் பங்கேற்ற விழாவில் பிளாக் ஷீஷீப் தயாரித்துள்ள ‘திருவள்ளூவர் கன்ஸ்ல்டன்சி சர்வீஸ்’ எனும் தமிழ் வெப்சீரிசின் நாயகன் ஹர்பஜன்சிங்கின் திருவள்ளுவர் லுக்கை வெளியிட்டார் பிக்பாஸ் ‘சேரப்பா’.
புகைப் படத்தில் நீண்ட தாடி, மண்டயில் ஒரு கொண்டை, கையில் ஓலைச்சுவடியுடன் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலை போல் போஸ் கொடுத்துள்ளார் ஹர்பஜன்சிங்.
யூடியூப்பில் ரிலீசாகவுள்ள வெப் சீரிசை, ட்யூட் விக்கி இயக்கியுள்ளார். திருவள்ளுவர் சீரிஸ் பற்றியும், ஹர்பஜன்சிங்கின் நடிப்பு பற்றியும் யுவர்ஸ்டோரி தமிழிடம் பிளாக் ஷீப்பின் எம்.டீ-யும், ஆங்கரிங், ஆக்டிங் என கலக்கிவரும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் பகிர்ந்து கொண்டார்...
“இன்னிக்கு இருக்கிற லைஃப்பில் உள்ள எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வு தான் திருக்குறள். இது தான் சீரிஸின் ஒன்லைன். திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸ் நடத்திவரும் ஹர்பஜன்சிங் மாடர்ன் ஏஜ் திருவள்ளுவரா நடிச்சிருக்காரு. ஒவ்வொரு எபிசோடில் ஒவ்வொருவரும் அவர்களது லைஃப்பில் உள்ள பிரச்சினைகளை சொல்லச் சொல்ல அதற்கு அவர் திருக்குறளில் இருந்து தீர்வுகளை சொல்லுவாரு. எல்லாரும் ரியல் லைஃப்பில் கனெக்ட் செய்துகொள்ளும் விதத்தில், ஒரு மோடீவெஷனல் சீரிசாக இருக்கும்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் அவர்.
10 எபிசோடுகளைக் கொண்ட ‘திருவள்ளூவர் கன்ஸ்ல்டன்சி சர்வீஸ்’ வெப் சீரிஸ் அடுத்தாண்டு பிப்ரவரி 2ம்தேதி யூடியூப்பில் ரீலிசாக உள்ளது. ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திருவள்ளுவர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில், ப்ளாக் ஷீப் டீம் இறங்கியபோது உடனே அவர்களது சிந்தையில் உதித்துள்ளார் ஹர்பஜன்சிங்.
“திருவள்ளுவர் கான்செப்டில் இதுக்கு முன்பே நிறைய யோசித்துள்ளோம். இந்த ஐடியா தோணினதுக்கு அப்புறம், வித்தியாசமான ஒரு ஆளு இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நல்லாயிருக்கும்னு தோணியது. ஏன்னா சிவாஜி கணேசனை நாம திருவள்ளுவர் வேடத்தில் பார்த்துள்ளோம். அதுக்கு அப்புறம் நம்ம யாரையுமே அந்த கதாபாத்திரத்தில் நடித்து பார்க்கலை. இன்னொரு விஷயம்,
இன்னிக்கு இருக்கிற ஜெனரேஷனுக்கு திருக்குறள் பற்றி நிறைய தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. சோ, அவங்களோட நல்ல கனெக்ட்டில் இருக்கும் நபர் யாருனு யோசிக்கும் போது, ட்விட்டரில் தமிழில் டுவீட் போட்டு அவருடைய தமிழுக்குனு ரசிகர்கள் சேர்த்திருக்காரு ஹர்பஜன்சிங். மீம்சிலலாம் கூட அவரை பாரதியார், திருவள்ளுவர்னுலாம் சொல்லி பரவியதில், எங்களுக்கு அவர் தான் கரெக்ட்னுபட்டார். முதலில், திருவள்ளுவர் தோற்றத்தில் அவரை ஸ்கெட்ச் பண்ணி பார்த்தோம். அவருடைய உயரம் ஒரு பிளஸ்சாகி அந்த கெட்டப்புக்கு பக்கா பொருத்தமா இருந்தாரு.
அதுக்க அப்புறமா, ஹர்பஜன்சிங்கிடம் போய் சொன்னோம். அவருக்கு திருக்குறள் பத்தி அவ்வளவு தெரியல. எல்லாம் விளக்கிச் சொன்ன அப்புறம் எக்ஸைட் ஆகிட்டாரு. அந்த கெட்டப் பார்த்த அப்புறம் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. ஒரு சின்ன சாம்பிள் வீடியோ கேட்டாரு. அத ஷூட் பண்ணி அனுப்பினோம். அத பார்த்துட்டு ஓகே சொல்லிட்டாரு,” என்றவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் பாஜி எப்படியிருந்தார் என்பதையும் தொடர்ந்து கூறினார்...
“ஆரம்பத்தில் ஒரு 2, 3மணி நேரம் நாம சொல்றதை அவர் உள்வாங்கிக் கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. அதுக்கு அப்புறம் நல்லாவே செட்டாகிருச்சு. ரொம்ப நல்லா நிறைய நிறைய தமிழ் பேசியிருக்காரு. சீரிசை பார்க்கையில், அவருக்கு டப்பிங் கொடுத்த மாதிரியே இருக்காது. அவ்ளோ கரெக்ட்டா லிப் சின்க் பண்ணியிருக்காரு. அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்ததுலாம் பயங்கர ரகளையாகவே இருந்தது. அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்த தமிழ் வார்த்தைகள் எல்லாம் கெட்ட வார்த்தையாவே இருந்தது. அப்புறம்,
அவருக்கு சின்ன சின்னதா நிறைய தமிழ் வார்த்தைகள் கத்துக்கொடுத்தோம். அப்படி, அருமைனா என்னனு கேட்டாரு. நாங்க சூப்பர்னு சொன்னோம். அதிலிருந்து நாங்க ஏதாவது செய்றது பிடிச்சுருந்தா உடனே ‘அருமை... அருமை..’னு சொல்லுவாரு. அந்த மாதிரி அவரு ஏதாச்சும் ஒரு தமிழ் வார்த்தைய பிடிச்சுகிட்டு, அதைச் சொல்லிட்டே இருப்பாரு. ‘வாட் டூ ஸே’னா என்னத்த சொல்லனு சொன்னோம். அவரு நடிக்கும் போது, ‘என்னத்த சொல்ல, என்னத்த சொல்ல’னு சொல்லிட்டு இருப்பாரு.
நிறைய ரியாக்ஷன் கொடுத்து நடிச்சுருக்காரு. எங்களுக்கு ரொம்பவே எக்ஸைடட்-ஆ இருக்கு. ஹர்பஜன் சிங்கின் திருவள்ளுவர் லுக் ரீலிசாகியதுமே, எல்லாரும் கேட்கிற முதல் கேள்வி ‘அவரே நடிச்சிருக்காரா?’ என்பது தான்.
சோ, யாரும் எதிர்பார்த்திராத ஒன்ன செஞ்சிருக்கோம் என்பதே ரொம்ப ஹாப்பியா இருக்கு,” என்றார் விக்னேஷ்காந்த்.