'தடை அதை உடை' என்பதற்கு முன்னோடியாக இருந்த கிரிக்கெட் நாயகன் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார்!
ஒவ்வொரு துறையில் இருந்தும் அனைவரும் ஒரு கட்டத்தில் ஒய்வு பெற தான் வேண்டும், ஆனால் விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வு பெறுவதை அவ்வளவு எளிதில் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி அனைவரும் எதிர்பாராத வகையில் கிரிக்கெட் நாயகன் யுவராஜ் சிங் தனது ஓய்வை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஊடகங்களை அழைத்து பேசிய 37 வயதான யுவராஜ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார், சந்திப்பில் பேசிய அவர்,
”என் கிரிக்கெட் பயணம் ஒரு அழகான கதை; ஆனால் அது இப்பொழுது முடிவுக்கு வந்துவிட்டது. போராடுவது, வீழ்வது அந்த வீழ்ச்சியிலிருந்து எழுந்து மீண்டும் முன்னேறி நடப்பது எப்படி என்பதை இந்த விளையாட்டு எனக்குக் கற்றுத்தந்துள்ளது,'' என்றார் யூவி.
இதுவரை 40 டெஸ்ட் கிரிக்கெட், 304 சர்வதேச ஒரு நாள் போட்டிகள், 50 சர்வதேச டி20 போட்டிகளை இந்திய அணிக்காக 2003 இல் இருந்து 2017 வரை ஆடி இந்தியாவின் ஒவ்வொரு வெற்றிக்குப்பிண்ணும் முதுகெலும்பாய் நின்றுள்ளார். முதல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 6 சிக்ஸர்களை அடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் அரை சதம் அடித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை கையில் எடுக்க பெரும் துணையாக இருந்தார்.
அதன் பின் பல முக்கிய ஆட்டங்களில் பல முக்கிய ரன்களை எடுத்தாலும் இந்த ஆல் ரௌண்டர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது 2011 உலகக் கோப்பையில் தான். 362 ரன்கள், 15 விக்கெட்டுகள், 4 ஆட்ட நாயகன் விருதுகள் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றாலும், யுவராஜ் சிங் தனியாக தெரிந்ததற்கு முக்கியக் காரணம் உலகக் கோப்பை தொடர் முழுவதும் புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் பொழுதும் தன் அணிக்காக தன்னை அர்ப்பணித்து 28 வருடங்கள் கழித்து இந்தியா உலகக்கோப்பை பெற உதவியதுதான்.
“உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டிசுக்கு எதிராக ஆடியபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் ஆடுகளத்திலே ரத்த வாந்தி எடுத்தார். ஓய்வு எடுத்துக்கொள்ள சொன்னபோதிலும் தன் அணிக்காக நின்று ஆடிய யுவராஜ் சிங் சதம் அடித்தார்.”
இந்த நிகழ்வை பற்றி பேசிய அவர்,
“என் உடல் நலத்திற்கும் முன் என் நாட்டை வைத்தேன்; இப்பொழுது உலகக் கோப்பையை வென்றதால் அந்த வலி பெரியதாக தெரியவில்லை,” என்று அப்போது சொன்னார்.
இதுவே யூவி தன் அணியின் மீதும் நாட்டின் மீதும் கொண்ட காதலுக்கு எடுத்துக்காட்டு.
“தினமும் 6- 8 மணி நேரம் விளையாடிக்கொண்டிருக்கும் போது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் நம்ப முடியுமா. நான் இதிலிருந்து தப்பித்து மீண்டும் கிரிக்கெட் விளையாடவே விரும்பினேன். ஆனால் மருத்துவர்கள் என்னை எச்சரித்தனர். நீங்கள் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டால் நீங்கள் பிழைப்பதே கடினம் என்று. எனக்கு வேறு வழி தெரியவில்லை. சிகிச்சைக்காகச் சென்றேன்,” என தன் போராட்டத்தை அப்பொழுது வெளிப்படுத்தினார் யுவராஜ் சிங்.
அதன் பின் புற்றுநோயுடன் போராடி மீண்டெழுந்த யுவராஜ் சிங் மீண்டும் தன் அணிக்காக ஆடத் துவங்கினார். மீண்டு வந்தாலும் புற்று நோயால் பழைய யுவராஜின் வெறியான ஆட்டத்தை காட்ட முடியவில்லை. இருப்பினும் தனது ஒரு நாள் போட்டியின் சிறந்த கம்பேக் ஆட்டத்தை கொடுத்து 150 ரன்கள் எடுத்தார் யூவி. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் 35 பந்துகளுக்கு 77 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
2017 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய அவர் கடந்த இரு ஆண்டுகளாக எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் ஓய்வை அறிவித்தது ரச்கிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யுவராஜ் சிங்கிற்கும் ஃபார்வெல் ஆட்டம் கொடுக்க வேண்டும் என்றும் வலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
கிரிக்கெட்டில் ஒய்வு பெற்றாலும் தனது அடுத்த பயணத்திலும் தெளிவாக உள்ளார் இந்த ரியல் ஹீரோ. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப்போரதாக அறிவித்துள்ளார். தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமுதாயத்தால் பிற்பட்டோருக்கும் உதவுப் போவதாக தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் ஒரு முன்னோடி, நம் முன் இருக்கும் தடைகளை உடைத்து வெற்றிப் பெறுவது எப்படி என வாழ்ந்து காட்டியவர். நன்றி யூவி நாட்டுக்காகவும் இந்திய அணிக்காகவும் உங்களை அர்ப்பணித்து எங்களை பெருமை படுத்தியதற்கு! மனமார்ந்த நன்றிகள்!