KD vs KG: உடல் எடையை குறைத்து ஆரோக்கியாக வாழ வழி காட்டும் கிருபா தர்மராஜ்!
கிருபா தர்மராஜின் KD vs KG சர்வதேச குழு சார்ந்த எடை குறைப்பு திட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள 7க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள்.
'நீங்க எந்த காலேஜ் படிக்கறீங்க?
காலேஜா?... நானா?'
மம்மி….- இந்த விளம்பரத்தை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.
ஒல்லியாக, ஸ்லிம்மாக இருந்தால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருந்தாலும்கூட காலேஜ் ஸ்டூடண்ட் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இளமையான தோற்றத்துடன் இருப்பார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் அதிக உடல் எடை பல்வேறு பிரச்சனைகளை இன்விடேஷன் கொடுத்து அழைத்துவிடுகிறது என்பதையும் நாம் அறிவோம்.
எனவே அழகியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் சரியான உடல் எடையை நிர்வகிக்கவேண்டியது அவசியமாகிறது.
என்னதான் பணம், புகழ், செல்வாக்கு இதெல்லாம் அதிகம் கிடைக்கவேண்டும் என நாம் விரும்பினாலும் ரொம்ப ஹம்பிளாக கம்மியாக இருந்தால் போதும் என்று நாம் நினைப்பது நம் உடல் எடையை மட்டுமே.
அதிக உடல் பருமனைக் குறைப்பது சாதாரண விஷயம் இல்லை. இதில் களமிறங்கியிருப்பவர்களைக் கேட்டுப்பாருங்கள்.
“எவ்ளோ சீக்கிரம் ஏறுது. இறங்கதான் மாட்டேங்குது..”
“எல்லா டயட்டும் ஃபாலோ பண்ணி பார்த்துட்டேன்.. எதுக்கும் மசியமாட்டேங்குது..”
“எவ்ளோ எக்சர்சைஸ் பண்றேன்... குறைவேனாங்குது…”
இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள். உடற்பயிற்சி, டயட் இதையெல்லாம் என்னதான் சுறுசுறுப்பாக ஆரம்பித்தாலும் அந்த ஆர்வம் பிறந்த வேகத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிக வேகத்துடன் குறைந்துவிடுவது எடைக் குறைப்பிற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை போட்டுவிடுகிறது.
“இன்னிக்கு சண்டேதான.. இன்னிக்கு டைட்டா சாப்பிடலாம்… நாளையிலேர்ந்து… அதாவது மண்டேலேர்ந்து ஸ்டார்ட் பண்றேன் பாரு...” என்று மனதிற்குள் பிஜிஎம் எஃபெக்ட் இல்லாமல் மற்றொரு சபதம் எடுப்போம்.
இந்த வேகம் மண்டே மட்டுமே நீடிக்கும். மிஞ்சிப்போனால் செவ்வாய் கிழமை தொடரும். அவ்வளவே.
ஒருவேளை ஒரு வாரம் நீடித்தாலும் மீண்டும் வெயிட் மிஷின் மீது ஏறி நின்று முன்பிருந்த அதே எடையையோ அல்லது சற்று கூடுதலாகவோ பார்த்துவிட்டால் அவ்வளவுதான். முடிந்தது கதை!
சரி, என்ன தான் செய்யறது? வானத்துலேர்ந்து ஒரு ஏஞ்சல் ரெக்கையோட பறந்து வந்து நம்மளை தூக்கிட்டு (கஷ்டம்தான் இருந்தாலும் பரவாயில்லை) போய் ஸ்லிம்மாக்கிக் கொண்டு வந்து விட்டால் எப்படி இருக்கும்?
நினைக்கும்போதே பூரிப்பாக இருக்கிறதா? ஆனால் இதெல்லாம் கற்பனையில் தான் நடக்கும் என்று கவலைப்படுகிறீர்களா? கவலையை விடுங்க! இதோ நமக்கான ஏஞ்சல் வந்தாச்சு.
இவங்க பேர் கிருபா தர்மராஜ். பொறியியல் பட்டதாரியான இவர், அதிக உடல் பருமனைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ வழிகாட்டுகிறார்.
“கவலையே படாதீங்க! உங்களை சித்திரவதை செய்யற மாதிரி டயட்டையோ கடினமான உடற்பயிற்சிகளையோ நான் பரிந்துரை செய்யறதில்லை. நான் எப்படி அச்சீவ் பண்ணேன்னு கேளுங்க. உங்க கனவு ஃபேரி டேல் மாதிரி எப்படி நனவாகுதுன்னு பாருங்க. ஏன்னா உங்க டார்கெட்டை நீங்க அச்சீவ் பண்ண உங்களுக்குத் தேவை உங்களை சரியான பாதையில் வழிநடத்தி கூட்டிட்டு போற ஏஞ்சல் மட்டும்தான்,” என்கிறார் கிருபா.
இளம் வயதில் சுறுசுறுப்பாக விளையாட்டு, நடனம் என்று துருதுருவென்று இருக்கும் பலர் ஒருகட்டத்தில் உடல் உழைப்பு எதுவுமில்லாத சோம்பலான வாழ்க்கை முறைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். இதுவே பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது என்கிறார் கிருபா.
“திடீரென்று ஒரு நாள் கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது உங்களுக்கு பதில் வேறு யாரோ தெரிகிறார்கள். ஏன் இப்படி மாறிவிட்டோம்? இந்தக் கேள்வியுடன் நீங்கள் ஆராய முற்படும்போதுதான் பிரச்சனையின் தீவிரத்தை உணர்கிறீர்கள். இதை சரிசெய்ய முதலில் நாம் சரியான அணுகுமுறையுடன் உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்,” என்கிறார்.
ஆரம்பப்புள்ளி
“எங்கப்பா ரொம்ப சுறுசுறுப்பானவர். அவரை மாதிரி ஆக்டிவான ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை. அவருக்கு திடீர்ன்னு ஸ்ட்ரோக் வந்தது. அவரோட பரபரப்பான வாழ்க்கை அப்படியே முடங்கிடுச்சு. அப்பதான் ஒரு முக்கியமான விஷயத்தை நான் உணர்ந்தேன்.
“வாழ்க்கையில ஹெல்த்தை விட வேற எதுவுமே முக்கியம் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்,” என்றார்.
இந்தப் புரிதல் காரணமாகவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பிரிவில் செயல்படத் தீர்மானித்தார் கிருபா.
கிருபா தர்மராஜ் ஏழாண்டுகள் ஆரோக்கிய உணவுத் துறையில் பணியாற்றிய அனுபவமிக்கவர். பிரபல டயடீஷியன் உடன் இணைந்து எடையைக் குறைக்க உதவக்கூடிய எளிமையான வீட்டு உணவு குறித்து ஆராய்ந்தார்.
இந்த ஆய்வைத் தனக்கே உட்படுத்தி விளைவுகளை ஆராய விரும்பினார். இந்த சோதனை முயற்சியின் பலனாக 18 கிலோ வரை உடல் எடையைக் குறைத்தார். நண்பர்கள் சிலருக்கும் பரிந்துரைத்தார். அவர்களுக்கும் பலனளித்தது. அவர்களுடைய உடல் எடையும் குறைந்தது. 10 நண்பர்களுக்குடன் தொடங்கப்பட்ட இவரது முயற்சி இன்று சர்வதேச அளவில் பிரம்மாண்ட குழுவாக உருவெடுத்துள்ளது.
KD vs KG
கடந்த ஆண்டு நட்புவட்டத்தில் இந்த முயற்சியைத் தொடங்கிய கிருபா, 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் KD vs KG என்கிற பெயரில் அதிகாரப்பூர்வமாக முயற்சியைத் தொடங்கினார். KD என்பது கிருபா தர்மராஜ் என்கிற பெயரின் சுருக்கம். KG என்பது எடையளவு கிலோகிராம்-ஐ குறிக்கிறது. கிருபாவுக்கும் எடைக்கும் இடையில் இருக்கும் கடும் போட்டியை உணர்த்தவே KD vs KG என பெயரிட்டுள்ளார்.
KD vs KG ஒரு சர்வதேசக் குழு சார்ந்த எடை குறைப்புத் திட்டம். உலகம் முழுவதும் உள்ள 7க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இணைந்துள்ளார்கள்.
“முதல் நாளில் இருந்தே எடை குறைப்புத் திட்டம் குழு சார்ந்ததாக இருக்கவேண்டும். வழக்கமாக எடை குறைப்பு முயற்சி தனிமையில் மேற்கொள்ளப்படும். பல முறை தொடங்குவீர்கள். திடீரென்று உற்சாகம் குறைந்துபோகும். நீங்கள் தடுமாறும்போதோ, சாதிக்கும்போதோ அதை பகிர்ந்துகொண்டு உற்சாகமும் ஊக்கமும் கொடுக்க சக மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே சர்வதேச அளவில் குழுவை உருவாக்கி இருக்கிறேன்,” என்கிறார் கிருபா.
செயல்பாடுகள்
கிருபாவின் எடை குறைப்பு ஆலோசனைகள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. எனவே உலகின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இதில் எளிதாகக் கலந்துகொள்ளலாம். இந்தக் குழுவில் இருப்பவர்கள் கிருபாவை ஏஞ்சல் என்றுதான் கூப்பிடுகிறார்கள்.
கிருபா இந்த முயற்சியின் மூலம் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிமையான உணவு வகைகளையும் வாழ்க்கைமுறை மாற்றங்களையும் பரிந்துரை செய்கிறார். இது குழுவினரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதேசமயம் உடல் எடை குறையவும் உதவுகிறது.
இவர் முக்கியத்துவம் அளிக்கும் 4 அம்சங்கள்:
1. ஊட்டசத்து
2. பழக்கவழக்கம்
3. உடற்பயிற்சி
4. மன அழுத்தத்தை போக்குதல்
KD vs KG பயனாளிகள்
பிரசவித்த தாய்மார்கள் (70%), உடல் உழைப்பில்லாத சோம்பலான வாழ்க்கைமுறையைப் பின்பற்றும் கார்ப்பரேட் ஊழியர்கள் (20%), விரைவில் திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் (10%) போன்றோரே இந்தக் குழுவில் இணைந்துள்ளார்கள்.
கிருபா; தனிநபர்களுக்கு வழிகாட்டுவதுடன் கார்ப்பரேட் வெபினார்களும் நடத்துகிறார். ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியவேண்டிய இன்றைய சூழலில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற ஆலோசனைகள் வழங்குகிறார்.
“இன்றைக்கு கொரோனா பெருந்தொற்றினால் ஊழியர்கள் வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்கிறார்கள். எந்தவித உடல் உழைப்பும் இருப்பதில்லை. சோம்பலாகவே இருக்கிறார்கள். இதனால் கார்டியோ வாஸ்குலர் பிரச்சனை, நீரிழிவு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்காகவே நான் விழிப்புணர்வுத் திட்டங்களை ஏற்பாடு செய்கிறேன்,” என்கிறார் கிருபா.
மகளிர் மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் போன்றோருடன் இணைந்து கிருபா செயல்படுகிறார். இந்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் எடையைக் குறைக்க கிருபா வழிகாட்டுகிறார்.
சொல்லப்போனால் ஏராளமான மருத்துவர்களும் டயடீஷியன்களும் கிருபாவின் குழுவில் இணைந்துள்ளார்கள். இவர்களால் தங்களைப் பராமரிக்க நேரம் செலவிடமுடிவதில்லை. எனவே இதுபோன்ற குழுவில் இணைந்து உந்துதல் பெறுகிறார்கள்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்கூட இவரது திட்டங்களில் கலந்துகொள்ளலாம். இவரது குழுவைச் சேர்ந்த நித்யா என்பவர் 18 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளார். எந்தவித சிக்கலும் இன்றி தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
‘நீங்கள் பிரியாணி சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள், தைரியமாக சாப்பிடுங்கள். பிரியாணி சாப்பிட்டாலும் உடல் எடையைக் குறைக்கலாம்!’ இதையே கிருபா கட்டுரைகளிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இவரது சமீபத்திய முயற்சி ‘நேச்சுரல் வெயிட் லாஸ் ஃபார்முலா’. ஒரு மெயின் கோர்ஸ், 5 போனஸ் கோர்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சியின் ரெகார்ட் செய்யப்பட்ட வெர்ஷன் 3999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இத்துடன் குழுவில் வாழ்நாள் உறுப்பினர் ஆக இணைவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
தீவிர டயட் மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்றாமல் எளிமையான முறையில் எடையைக் குறைக்கலாம் என்று மக்களை நம்பவைப்பது கிருபாவிற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
“KD-சியன் (KDvsKG உறுப்பினர்) ஒருதடவை எங்க குழுவில சேர்ந்துட்டா லைஃப்டைம் மெம்பர்ஷிப் இருக்கும். ஒவ்வொரு முறையும் என்னோட புரோக்ராம்ல கூடுதல் தகவல்களையும் மதிப்பையும் சேர்க்கறதால எல்லாரும் கூடவே ட்ராவல் பண்றாங்க. அப்படியே அவங்க டார்கெட்டை அச்சீவ் பண்ணிட்டாலும் மெயிண்டெயின் பண்றதுக்கான ஆலோசனைகளை கேக்கறாங்க,” என்று குழுவில் இணைந்திருப்போரை தக்கவைத்துக்கொள்வது குறித்து கிருபா விவரித்தார்.
“உடல் எடையைக் குறைக்க டயட் கட்டுப்பாடுகள் இல்லை. கடினமான, தீவிரமான உடற்பயிற்சி இல்லை. எல்லாம் சாப்பிடலாம். எளிமையான வீட்டு உணவும் வாழ்க்கை முறை மாற்றத்தையும் பின்பற்றினால் போதும். இதுவே KD vs KG புரோகிராமின் தனித்துவமான அம்சம்,” என்கிறார் கிருபா.
இந்த முயற்சியின் மூலம் இதுவரை 10 லட்ச ரூபாய் வரை ஈட்டியுள்ளார் கிருபா. அடிப்படையான சாஃப்ட்வேர் டூல் அமைக்க ஒரு லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
வருங்காலத் திட்டம்
ஹேக்கதான் ஃபிட்னெஸ், கொழுப்பு குறைப்பு, உடல் எடையை நிர்வகிப்பது போன்ற மற்ற திட்டங்களையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார். ஏற்கெனவே 7-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்கள் குழுவில் இணைந்துள்ளார்கள். இதை மேலும் விரிவடையச் செய்ய கிருபா திட்டமிட்டுள்ளார்.
“கார்ப்பரேட் ஊழியர்கள் புரோகிராம் மூலமாகவும் மருத்துவர்கள் மற்றும் பிரபலங்கள் மூலமாகவும் இதை சாத்தியப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறேன். குழுவில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக ஆக அவர்களின் ஊக்கமும் அதிகரிக்கும்,” என்கிறார் நம்பிக்கையுடன்.
அப்புறம் என்ன? உடனே வெயிட் லாஸ் ஏஞ்சலை தொடர்புகொள்ளுங்கள். உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுங்கள்.