Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

புடவையில் நாள் முழுதும் இருக்க சிக்கலா? ‘ஹப்பாடா’ - புதுவகை உள்பாவடைகள் வெளியிட்டுள்ள நித்யா!

பெண்கள் புடவை கட்டிக்கொண்டு கழிப்பறையைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது ஹப்பாடா உள்பாவாடைகள்.

புடவையில் நாள் முழுதும் இருக்க சிக்கலா? ‘ஹப்பாடா’ - புதுவகை உள்பாவடைகள் வெளியிட்டுள்ள நித்யா!

Tuesday September 08, 2020 , 5 min Read

என்னதான் மாடர்ன் ஆடைகள் வசதியாகவும் அழகாகவும் தோன்றினாலும் பெண்கள் விழா, கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளின்போது பாரம்பரிய உடைகளையே தேர்வு செய்வார்கள். பெண்களுக்கு இயற்கையாகவே புடவை மீது ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இது அவ்வப்போது புடவை கட்டுபவர்கள் மட்டுமல்ல புடவையே கட்டாதவர்களுக்கும்கூட இந்த ஈர்ப்பு உள்ளூற இருக்கும் என்பதே உண்மை.


ஆனால் புடவை கட்டுவது மிகப்பெரிய டாஸ்க் என்பதே பல பெண்களின் கருத்து. பலரும் புடவை வாங்கும் தீர்மானத்துடன் ஷாப்பிங் செய்யக் கிளம்பினாலும் கடைசி நேரத்தில் வேறு உடைகளை வாங்கி வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.


ஏன் இப்படிச் செய்கிறார்கள்? புடவை கட்டப் பிடிக்கும் என்றால் வாங்கிக் கட்ட வேண்டியதுதானே? இதிலென்ன பிரச்சனை இருக்கும்?


இந்தக் கேள்வியை உங்களைச் சுற்றியுள்ள பெண்கள் சிலரிடம் கேட்டுப் பாருங்கள். அடிக்கடி புடவை கட்டாததற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். புடவை கட்டினால் பயணம் செய்வது கஷ்டம், நடப்பது கஷ்டம், டாய்லெட் போகும்போது புடவை கலந்துவிடும், அடிக்கடி அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்பதில் தொடங்கி பாவாடை கட்டும் இடத்தில் தழும்பு ஏற்படும், மடிப்பு கலைந்துவிடும் என பெண்கள் சந்திக்கும் பொதுவான காரணங்கள் இப்படி வரிசையாக நீண்டுகொண்டே போகும்.


Habbada Fashions நிறுவனர் நித்யாவும் இதுபோன்ற பிரச்சனைகளைச் சந்தித்துள்ளார். இதற்கான தீர்வை அவர் எப்படி உருவாக்கினார் என்று நம்முடன் பகிர்ந்துகொண்டார்.  

1

Habbada Fashions நிறுவனர் நித்யா

‘ஹப்பாடா’ - உணர்வின் வெளிப்பாடு!

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். நீண்ட நேரம் ஒரு பிரச்சனையில் தவித்துவிட்டு சின்னதாக ஆறுதலாக ஒரு விஷயம் நடந்தால் உடனே நிம்மதி பெருமூச்சுடன் நம்மிடமிருந்து வெளிப்படும் வார்த்தை ‘ஹப்பாடா’.

இந்த உணர்வு பெண்களிடமிருந்து வெளிப்படவேண்டும் என்று விரும்பிய நித்யா, அட இதுவே நல்லாயிருக்கே! இதையே நம்ம நிறுவனத்தோட பேரா மாத்திடலாமே’ என்று யோசித்துள்ளார். ஆம், இவரது நிறுவனத்தின் பெயர் Habbada Fashions.


2020ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட ‘ஹப்பாடா ஃபேஷன்ஸ்’ புதுமையான உள்பாவாடைகளை வழங்குகிறது. 25 முதல் 45 வயதுடையவர்களை இலக்காக் கொண்டே இந்நிறுவனம் செயல்படுகிறது.


நித்யா கர்ப்ப காலத்தில் இந்த வணிக முயற்சியைத் தொடங்கியுள்ளார். பெற்றோர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றவேண்டும் என்று விரும்புகிறார். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் இந்த வணிக முயற்சி தனக்கு மிகவும் நெருக்கமானது என்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறுகிறார்.

வணிக யோசனை

நித்யா பெங்களூருவில் எம்பிஏ மனிதவளம் முடித்தவர். மனிதவள மேம்பாட்டுத் துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

“ஆரம்பத்தில் சமூக நிறுவனம் ஒன்றை நிறுவ திட்டமிட்டேன். சுற்றுச்சூழலுக்க உகந்த தயாரிப்பை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினேன். ஆனால் அந்த யோசனை வெற்றிபெறவில்லை,” என்றார் நித்யா.

இதனால் அந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கவனத்தை திசைத் திருப்ப முயன்றார். அது நவராத்திரி விழா சமயம் என்பதால் அதற்கான ஏற்பாடுகளில் மனதை செலுத்தியுள்ளார். அந்த சமயத்தில் உதித்த யோசனைதான் ‘Habbada Fashions' ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

“நான் இரண்டு அல்லது மூணு மணி நேரத்துக்கு மேல புடவை கட்டிட்டு இருந்ததில்லை. நவராத்திரி டைம். அக்கம் பக்கத்துல இருக்கறவங்க கூட மிங்கிள் ஆகணும்ன்னு வீட்டுக்கு நிறைய பேரை இன்வைட் பண்ணேன். மத்தவங்க வீட்டுக்கும் போகவேண்டியிருந்தது. ரொம்ப நேரம் புடவையிலயே இருக்க வேண்டியிருந்தது. ரொம்ப கஷ்டமா இருந்தது.”

அதற்கான காரணங்களையும் நித்யா பட்டியலிட்டார்.

முதல்ல புடவையை அழகாகக் கட்டத் தெரியாது. அதை கத்துக்கவேண்டியிருந்துது. அடுத்து ஷேப் சரியா இருக்காது. நான் யூஸ் பண்ண வழக்கமான உள்பாவாடை வசதியா இல்லை. நடக்கும்போது கால் தடுக்கும். மூணாவது நாடா. இடுப்புல கட்டினா சரியா நிக்காது. இறுக்கமா கட்டறதால வலிக்கும். வெயில் நேரத்துல ரொம்ப எரிச்சலா இருக்கும்.

2
எல்லாத்தையும்விட முக்கியமா புடவை கட்டிட்டு டாய்லெட் பயன்படுத்தறது ரொம்ப கஷ்டமா இருக்கும். புடவை மடிப்பு கலைஞ்சுடும். சரி செய்யறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும். புடவை நிச்சயம் அழுக்காயிடும். அதுக்காக டாய்லெட் பயன்படுத்தாம உடம்பையும் கெடுத்துக்கமுடியாது,” என்ரு தான் சந்தித்த பல சிக்கல்களை அடுக்கினார்.

நித்யா மற்ற பெண்களைப் போன்று புடவை கட்டுவதில் உள்ள பிரச்சனைகளை மட்டும் பட்டியலிடாமல் அதற்கான தீர்வுகளையும் தேடத் தொடங்கினார்.

தீர்வுகளை ஆராய்ந்தார்

நித்யா புடவை கட்டுவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வினை ஆராய்ந்தார். புடவை கட்டத் தெரியாது என்கிற பிரச்சனைக்கு அவரால் எளிதில் தீர்வுகாண முடிந்தது. புடவையை அழகாகக் கட்டக் கற்றுக்கொண்டார். ஆனால் அவர் சந்தித்த மற்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை. உடனே இதற்கான தீர்வை உருவாக்கும் எண்ணம் உதித்தது.    

“அடுத்த 15 நாட்களில் புடவை கட்டுவதில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கக்கூடிய தனித்துவமான உள்பாவாடை ஒன்றின் முன்வடிவத்தை உருவாக்கினேன். சில சாம்பிள் உள்பாவாடைகளைத் தயாரித்து நான் பயன்படுத்தினேன். எனக்கு திருப்தியாக இருந்ததால் நண்பர்களுக்கும் கொடுத்து முயற்சி செய்யச் சொன்னேன். அவர்களுக்கு இந்தத் தயாரிப்பு பிடித்திருந்தது. மற்றவர்களும் இதுகுறித்து கேட்கத் தொடங்கினார்கள். இப்படித்தான் இந்த வணிகம் உருவானது,” என்று உற்சாகமாக விவரித்தார்.

இந்தத் தயாரிப்பை பலருக்கு அறிமுகப்படுத்த இதன் சிறப்பம்சங்களை விவரிக்கும் சிறு அனிமேஷன் வீடியோவை உருவாக்கியுள்ளார். இந்த வீடியோ நாடு முழுவதும் பகிரப்பட்டது.

“சமீபத்தில் எங்களது வலைதளம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு சேர்க்கும் எந்த ஒரு தயாரிப்பும் அல்லது பிராண்டும் அவுட் ஆஃப் பேஷன் ஆவதில்லை,” என்கிறார். 
3

ஹப்பாடா தயாரிப்பின் சிறப்பம்சங்கள்

’ஹப்பாடா ஃபேஷன்ஸ்’ புதுமையான உள்பாவாடைகளை வழங்குகிறது. இரண்டு விதமான துணி வகைகளில் இந்தத் தயாரிப்பு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. காட்டன் ஸ்ட்ரெச் மெட்டீரியல் கொண்ட உள்பாவாடை ஒன்றின் விலை 799 ரூபாய். இந்த வகை தயாரிப்பு அதிகம் விற்பனையாகிறது. சாடின் துணியால் தயாரிக்கப்படும் மற்றொரு வகை உள்பாவாடை ஒன்றின் விலை 949 ரூபாய்.


புடவை கட்ட விரும்பும் பெண்களின் பல்வேறு சிக்கல்களுக்கான ஒற்றைத் தீர்வாக அமைந்துள்ள ஹப்பாடா உள்பாவாடைகளின் சிறப்பம்சங்கள் இதோ:


1. செமி-மெர்மெயிட் கட் (Semi Mermaid cut) – புடவையை அழகாக கட்டுவதற்கு வடிவம் கொடுக்கிறது. அதுமட்டுமின்றி எந்தவித அசௌகரியமான உணர்வும் இன்றி வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது.


2. இடுப்பு அளவு (Hip size) – இந்தத் தயாரிப்பு நான்கு வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இடுப்பில் தழும்பு ஏற்படுத்தக்கூடிய நாடாக்கள் இதில் இல்லை. மாறாக எலாஸ்டிக் மற்றும் பட்டன் வைக்கப்பட்டுள்ளது. நமது வசதிக்கேற்ப அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.


3. ஸ்லிட் மற்றும் நாடா (Concealed slits and drawstring) – உள்பாவாடையின் கீழ்பகுதியில் வெளியில் தெரியாதவாறு ஸ்லிட் உள்ளது. கழிப்பறையைப் பயன்படுத்தும்போது உள்பாவாடையை மேலே தூக்கி இந்த ஸ்லிட்களை கைகளில் நுழைத்து இதிலுள்ள நாடாவை இழுத்தால் சுருக்குப்பை போன்று புடவை மடிப்புகளோடு சுருங்கிவிடுகிறது. கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு நாடாவை தளர்த்தினால் போதும். புடவை கசங்காமல் பழையபடி ஆகிவிடும்.

ஹப்பாடா

கழிப்பறை போகும்போது இவ்வாறு உள்பாவடையுடன் புடவையை மேலே மாட்டிக்கொள்ளலாம்

சவால்கள்

புதுமையான தீர்வை உருவாக்கும் ஆர்வம் இருப்பினும் உள்பாவாடை வடிவமைப்புதானே என்று எண்ணியவருக்கு இந்த செயல்முறையில் ஏராளமான சவால்கள் காத்திருந்தன.

“நான் முதல் தலைமுறை தொழில்முனைவர் என்பதால் ஒரு தயாரிப்பை வடிவமைத்து சந்தைக்குத் தயார்படுத்துவதில் உள்ள செயல்முறைகள் அனைத்துமே போராட்டம் நிறைந்ததாகவே இருந்தன. பலகட்டங்களாக சோதனை செய்யவேண்டியிருந்தது,” என்றார்.

அவர் மேலும் கூறும்போது,

“நண்பர்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் வெவ்வேறு துணிகளையும் வெவ்வேறு ஸ்டைல்களையும் கொண்டு முயற்சி செய்தேன். உள்பாவாடையில் உள்ள ஸ்லிட் வெளியில் தெரியாதவாறு தயாரிப்பது, சரியான தயாரிப்பாளரைக் கண்டறிவது என பல்வேறு சிக்கல்கள் இருந்தன. கிட்டத்தட்ட 15 முன்வடிவங்களை உருவாக்கிய பிறகே சரியான உள்பாவாடை சந்தைக்குத் தயாரானது,” என்றார்.

வருங்காலத் திட்டம்

’ஹப்பாடா ஃபேஷன்ஸ்’ தற்போது நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு ஆர்டரின் பேரில் டெலிவர் செய்து வருகிறது. அடுத்தகட்டமாக மின்வணிக தளங்கள் மூலம் விற்பனை செய்யவும் அதைத் தொடர்ந்து விநியோக மாதிரியில் கவனம் செலுத்தவும் நித்யா திட்டமிட்டுள்ளார்.


தற்சமயம் உள்பாவாடை மட்டுமே இந்நிறுவனம் வழங்கும் ஒரே தயாரிப்பு. வரும் நாட்களில் இதே போன்ற ‘ஹப்பாடா’ என்கிற உணர்வை பெண்கள் வெளிப்படுத்த உதவும் பல்வேறு தயாரிப்புகளை வழங்க விரும்புகிறார் நித்யா. பெண்கள் சந்திக்கும் சிறிய, அதேசமயம் முக்கியப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை உருவாக்கவேண்டும் என்கிற முக்கிய நோக்கத்தை முன்னிறுத்தியே இவர் செயல்பட்டு வருகிறார்.


பிரச்சனைகள் சிறிதோ அல்லது பெரிதோ தீர்வை நோக்கிய நகர்வே முன்னேற்றத்திற்கும் புத்தாக்க சிந்தனைகளுக்கும் வழிவகுக்கும். யாரும் செயல்படாத ஒரு புதிய பிரிவை ஆராயத் தயங்கிய காலகட்டம் மாறி புதுமையான யோசனைகள் ஊக்குவிக்கப்படுவதுடன் மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.


வலைதளம்: Habbada Fashions

கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா