’நல்ல சம்பளம் அளிக்கும் வேலை வாய்ப்புகளே ஏற்றத் தாழ்வுகளைப் போக்க உதவும்’: இன்போசிஸ் நாராயண மூர்த்தி
இந்தியா போன்ற நாட்டில் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க ஒரே வழி, வேலைவாய்ப்பு, என்கிறார் நாராயணமூர்த்தி.
ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ள உதவும் வகையில் ஓரளவு நல்ல சம்பளம் அளிக்கும் வேலைகளை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று இன்போசிஸ் இணை நிறுவனர் மற்றும் அதன் கவுரவத்தலைவர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.
தனிநபர் ஜிடிபி குறைவாக இருக்கும் விவசாயத் துறையில் இருந்து, வருமானம் மேம்பட்டதாக இருக்கும் குறைந்த தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"இந்தியா போன்ற நாட்டில் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க ஒரே வழி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மூலம் தான். ஓரளவு நல்ல சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்,” என்று ஐஐடி பாம்பேவில் நடைபெற்ற தொழில்நுட்ப நிகழ்ச்சியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்றிய போது நாராயண மூர்த்தி கூறினார்.
இந்தியாவில் 58 சதவீத மக்கள் அல்லது 650 மில்லியன் மக்கள், ஜிடிபிக்கு 14 சதவீதம் மட்டுமே பங்களிக்கும் விவசாயம் சார்ந்திருக்கின்றனர் என்று அவர் கூறினார்.
“வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், இந்தியர்களின் சராசரி தனிநபர் வருமான 2,000 டாலர் என்றால், விவசாயத்துறையில் பணியாற்றுபவர்கள் ஆண்டுக்கு 500 டாலரே ஈட்டுகின்றனர். ஏனெனில் இந்த 58 சதவீதம் பேர் ஜிடிபிக்கு 14 சதவீதம் மட்டுமே பங்களிக்கின்றனர்,” என்றும் அவர் கூறினார்.
இந்த 500 டாலர் என்பது நாள் ஒன்றுக்கு 1.5 டாலர் அல்லது 100 ரூபாயாக அமைகிறது. இந்த தொகைக்குள் அவர்கள் உணவு, கல்வி, வாடகை மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
"எனவே இந்தியாவில் வறுமை மிகப்பெரியதாக இருக்கிறது. இதை மேம்படுத்த ஒரே வழி, விவசாயத்துறையில் இருந்து மக்களைக் குறைந்த தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளுக்கு மாறச்செய்வது தான். இங்கு அவர்களுக்கு ஆண்டுக்கு 1500 டாலர் முதல் 2,000 டாலர் வரை சம்பளம் அளிக்க முடியும் என நினைக்கிறேன்,” என்றும் நாராயண மூர்த்தி தெரிவித்தார்.
"ஆனால் நம்மால் இதை வெற்றிகரமாக செய்ய முடியவில்லை. ஏனெனில், நம்முடைய உள்கட்டமை மோசமாக இருக்கிறது. மாநில அரசுகள் பிரச்சனையை புரிந்து கொள்வதில்லை. மேலும் தொழில் முனைவோர் குறைந்த தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் தொழில் துவங்குவதையும் எளிதாக்கவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். ஐடி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு அளிக்க, தரத்தை மேம்படுத்திக் கொள்ள புதுமையாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்